jkr

செய்தியறிக்கை


மினாரா கோபுரங்கள்
மினாரா கோபுரங்கள்

பள்ளிவாசல் கோபுரங்களுக்கு எதிராக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு

சுவிட்சர்லாந்தில் உருவாகி வருகின்ற ஒரு புதிய பள்ளிவாசலில் மினாரா எனப்படும் கோபுரங்கள் அமைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஒர் கருத்து வாக்கெடுப்பில், தடைவிதிக்க வேண்டும் என பெரும்பான்மையானவர்கள் வாக்களித்துள்ளதாக உத்தியோகபூர்வ முடிவுகள் காட்டுவதாக சுவிஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

மினாராவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக 57 சதவீத வாக்குகள் விழுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கோரிக்கையை முன்மொழிந்தவர்கள் வலது சாரி மக்கள் கட்சியினர் ஆவர். இக்கோரிக்கையை எதிர்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது.

சுவிட்சர்லாந்தின் முஸ்லிம்கள் இனி தம் மீது தாக்குதல்கள் அதிகரிக்கலாம், தம்முடைய உரிமைகள் பாதிக்கப்படலாம் என்று அஞ்சுவதாக அந்நாட்டில் முஸ்லிம்களின் மூத்த பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.


ஒசாமாவை பிடிக்க பாகிஸ்தான் கூடுதலாக செயல்பட வேண்டும் - பிரிட்டன்

பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன்
பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன்

அல்கைதா பயங்ரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லாடனைப் பிடிப்பது அல்லது கொல்வது தொடர்பில் பாகிஸ்தான் கூடுதலாக செயல்பட வேண்டும் என பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் இங்கிலாந்து வந்துள்ள நிலையில் அவருடன் பிரிட்டிஷ் பிரதமர் கலந்துரையாடினார்.

ஆப்கானிஸ்தானை ஒட்டிய பழங்குடியின எல்லைப் பகுதியில் அல்கைதாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துவருகிறது என்பதை பிரிட்டிஷ் பிரதமர் அங்கீகரித்தார் என்றாலும், செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் ஒருவராலுமே அல்கைதா தலைவர் பின் லாடனையோ, துணைத்தலைவர் அய்மான் ஸவாஹிரியையோ ஏன் இன்னும் நெருங்க முடியவில்லை என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


எட்டும் தூரத்தில் இருந்தும் ஒசாமாவை பிடிக்க புஷ் அரசு முயற்சிக்கவில்லை - செனட் சபைக்கான அறிக்கை

ஒசாமா பின் லேடன்
ஒசாமா பின் லேடன்

ஆப்கானிஸ்தானில், கடந்த 2001 ஆம் ஆண்டு ஒசாமா தான் இருந்ததாகவும், ஆனால் ஒசாமாவை பிடிப்பதற்கான இராணுவ வசதிகளை அப்போதைய அதிபர் புஷ் தலைமையிலான அரசு பயன்படுத்த தயாராக இல்லை என்று அமெரிக்க செனட் சபைக்கான அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஒசாமா பின் லாடன் மிகவும் பலவீனமாக இருந்த அந்த தருணத்தில் அவரை பிடிக்க முயற்சிக்காமல் போனதால், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கிளர்ச்சி மற்றும் பாகிஸ்தானில் ஸ்திரமற்ற நிலை உருவாவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியுறவு கமிட்டிக்காக ஜனநாயக கட்சி பணியாளர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தான் மோதலில் பல கிளர்ச்சியாளர்கள் பலி - பாதுகாப்பு படையினர்

கொஸ்த்
கொஸ்த்

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை அருகே இருக்கின்ற கிழக்கு மாகாணமான கொஸ்த்தில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் குறைந்தப்பட்சம் 26 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தின் போது தலிபான்கள் தங்களுடைய சாவடி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தாங்கள் ஆரம்பித்த பதில் தாக்குதலானது பல மணி நேரத்திற்கு இடம்பெற்றதாகவும் எல்லை பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பதிமூன்று எதிராளி உடல்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் கிடந்ததாகவும், காயமடைந்த செச்சென்ய ஆயுததாரி ஒருவர் பிடிப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செய்தியரங்கம்
இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - தி எல்டர்ஸ் குழு

ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்டுள்ள தி எல்டர்ஸ் என்ற உலகின் முன்னணித் தலைவர்களைக் கொண்ட குழு, இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

தி எல்டர்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியவர்களுள் ஒருவரும் அமைதிக்கான நொபெல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அவர்களின் கையொப்பத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஐ.நாவின் முன்னாள் தலைமைச் செயலர் கோஃபி அன்னான், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்தி அஹ்திஸாரி, அமெரிக்க அதிபரான் ஜிம்மி கார்ட்டர், பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி ஆங் சான் சூசி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைக் கொண்டது இந்த எல்டர் அமைப்பு.

இலங்கையில் போரில் வெற்றி பெற்றவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பேராயர் டூட்டு தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதிக்கு தாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து எல்டர்ஸ் அமைப்பின் தற்போதையத் தலைவர் பேராயர் டெஸ்மண்ட் டூடூ அவர்கள் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வெற்றி பெற்றால் போர்குற்றங்கள் குறித்து விசாரிக்கலாம் - சரத் பொன்சேகா

சரத பொன்சேகா
சரத் பொன்சேகா

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள முன்னாள் இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் அவரது மூன்று சகோதரர்களையும் கடுமையாக சாடியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றி என்பது ஒரு குடும்பத்துக்கு பாத்தியப்பட்டது மட்டுமே என்று அர்த்தமல்ல என்றும், பயங்கரவாதத்தை ஒழிக்க இராணுவம் உதவியதற்காக மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் போரில் கிடைத்த வெற்றி என்பது எந்த ஒரு சமூகத்துக்கும் எதிராக கிடைத்த வெற்றி கிடையாது என்றும் வர் கூறியுள்ளார்.

போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக அரசாங்கம் போதுமானதை செய்யவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் போரின் போது இராணுவத்தால் போர் குற்றங்களை இழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்துவதற்கு தான் திறந்த மனதுடன் இருப்பதாகவும் அவர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.


ஜனாதிபதி தேர்தலின் போது வடகிழக்கு மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவை - பப்ரெல் அமைப்பு

வாககளிப்பு(கோப்புப் படம்)
வாககளிப்பு(கோப்புப் படம்)

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலின்போது, விசேட ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பப்ரெல் எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்திருக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த வாக்காளர்கள் வாக்களிப்பின்போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் தமது ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் தகுதியை அவர்கள் இழக்க நேரிடக்கூடும் என்றும் அந்தக் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியிருக்கின

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தமது உடைமைகள் முக்கிய ஆவணங்கள் என்பவற்றை இழந்துள்ள நிலையில், தேசிய அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்கச் செல்வதும் சிக்கலான ஒரு விடயமாக இருக்கும் என்றும் நீதியும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates