jkr

செய்தியறிக்கை


இரான் அணுசக்திக் கூடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம்
இரான் அணுசக்திக் கூடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம்

அணுசக்தி சர்ச்சை: இரானைக் கண்டித்துள்ளது சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு

இரானை, அதனது அணுத்திட்டம் தொடர்பில் கண்டிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் அணு நிறுவனமான சர்வதேச அணு ஆற்றறல் நிறுவனம் வாக்களித்துள்ளது. இது அரிதாக மேற்கொள்ளப்படும் ஒரு நகர்வாகும்.

ரகசியமாக ஒரு யுரேனிய செறிவாக்கல் ஆலையை இயக்கிவந்ததற்காக இரானை கண்டித்த சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம், அந்த நடவடிக்கையை இரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு ரஷ்யாவும், சீனாவும் ஆதரவு தெரிவித்திருப்பதைக் கொண்டு பார்க்கின்ற போது, தாம் முன்னர் இருந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, ஐநாவால் இரானுக்கு எதிராக கொண்டுவரப்படக் கூடிய புதிய தடைகளை அவை ஆதரிக்கும் என்று தெளிவாவதாக தெஹ்ரானுக்கான பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், தனது அணுத்திட்டம் குறித்த முரண்பாடுகளை தீர்க்கும் நோக்குடனான சமரச பேச்சுவாத்தைகளை இந்த தீர்மானம் குலைத்துவிடும் என்று இரான் கூறுகிறது.


ஷிரின் எபாடியுடைய நோபல் பரிசை கைப்பற்றவில்லை என்கிறது இரான்

ஷிரின் எபாடி
இரானிய மனித உரிமை ஆர்வலர் ஷிரின் எபாடிக்கு 2003 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசை தாம் கைப்பற்றவில்லை என்று இரானிய அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள்.

இந்த கைப்பற்றலைக் கண்டித்து, நார்வேயில் இருக்கும் இரானிய தூதரை நார்வே அரசு அழைத்து விசாரித்திருந்தது. இதை கண்டித்திருக்கும் இரானிய வெளியுறவு அமைச்சரகம், இரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு நார்வேயிக்கு உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது.

தற்போது லண்டனில் இருக்கும் எபாடி அவர்கள், தமது வங்கிக் கணக்கும், தமது கணவரின் வங்கிக் கணக்கும் இரானிய அதிகாரிகளால் முடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

நோபேல் பரிசாக தமக்கு அளிக்கப்பட்ட நிதிக்கு இரானிய சட்டங்களின் கீழ் வரி விதிக்க முடியாது என்று கூறியுள்ள எபாடி அவர்கள், ஆனால் தமது பரிசுப்பணத்திற்கு வரி கட்டும்படி இரானிய அதிகாரி கள் வலியுறுத்திவருவதாக தெரிவித்திருக்கிறார்.


காமன்வெல்த் கூட்டம் டிரினிடாடில் ஆரம்பம்


காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டம் ஒன்று டிரினிடாட்டில் துவங்கியுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து மட்டுமே முதல் நாளில் விவாதிக்கப்பட இருக்கிறது.

ஐநா மன்றத்தின் செயலாளர் நாயகம் பான்கி மூன் அவர்களும், பிரான்ஸ் அதிபர் சர்கோசி அவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த பேச்சுக்கள் துவங்குவதற்கு முன்னதாக, வளரும் நாடுகளிலிருந்து வெளியாகும் புவியை வெப்பம டையச்செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதற்கு உதவும் வகையில், அந்த நாடுகளுக்கு நிதியுதவி செய்வதற்கான உலக நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் அவர்கள் யோசனை தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் தொடர்பிலான ஐநா மன்றத்தின் மாநாடு அடுத்த மாதம் கோபன் ஹேகனில் நடக்க இருக்கும் நிலையில், அதுதொடர்பான சர்வதேச ராஜாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன.

இது தொடர்பில் வளரும் நாடுகளுக்கு இடையில் ஒரு பொதுவான கருத்தை உருவாக்கும் நோக்கிலான கூட்டம் ஒன்று சீனாவின் பீஜிங்கில் தற்போது நடந்து வருகிறது.


காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் வேண்டாம்: பிரிட்டன்

பிரிட்டிஷ் பிரதமர்
பொதுநலவாய அமைப்புக்களின் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற அந்த நாட்டின் கோரிக்கையை தாம் தடுக்க முனைவோம் என்று பிரிட்டன் கோடிகாட்டியுள்ளது.

அண்மையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை இலங்கை கையாண்ட விதத்தை காரணமாகக் கொண்டே பிரிட்டன் இந்த நடவடிக்கையை எடுப்பதாக பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

மாநாட்டை நடத்துவதற்கான இலங்கையின் கோரிக்கை குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து இலங்கை அரசாங்க தரப்பு கருத்துக்களை உடனடியாக பெற முடியவில்லை.

செய்தியரங்கம்
வாக்குப் பெட்டி

இலங்கையில் ஜனவரி 26ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் ஜனவரி 26ஆம் நடக்கும் என்று இலங்கையின் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளராக மனுத் தாக்கல் செய்வதற்கான காலகட்டம் டிசம்பர் மாத மையப் பகுதி முடிவுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தற்போதைய பதவிக் காலம் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முன்பாகவே தேர்தல்களை நடத்தத் தீர்மானித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அண்மையகாலம் வரை அவருடைய கூட்டாளியாக இருந்து தற்போது வைரியாக மாறியிருக்கும் தற்போது ஓய்வுபெற்றுள்ள இராணுவ படைகளின் தலைவர் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவும் இத்தேர்தலில் முக்கியப் போட்டியாளர்களாக விளங்குவர் என்று தெரிகிறது.


இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் விபத்து; நான்கு பேர் பலி

எரிந்து சிதிலமாகக் கிடக்கும் ஹெலிகாப்டர்
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று வெள்ளிக்கிழமையன்று மொனராகல மாவட்டம் புத்தல பகுதியில் விபத்துக்கு உள்ளாகியிருப்பதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் எம்.ஐ.24 ரக ஹெலிக்கொப்டர் ஒன்றே பயிற்சியின் போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு வீழ்ந்ததாக பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட நான்கு பேர் பலியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கனடா சென்ற இயக்குநர் சீமான் மாவீரர் தின உரையாற்றுவதற்கு முன்பே அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்

சீமான்
கனடாவில் நடக்கும் மாவீரர் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்ற திரைப்பட இயக்குநர் சீமான் அதில் கலந்துகொள்ளாமல் திடீரென கனடாவை விட்டு வெளியேறி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

தமிழ் திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் வியாழக்கிழமை இரவு கனடாவிலிருந்து தாமாக முன்வந்து வெளியேறிவிட்டதாக கனடிய எல்லைச் சேவைகளுக்கான அமைப்பின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பெட்ரேஷியா ஜியோல்டி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கனடாவில்நடக்கும் மாவீரர் தின நிகழ்வில் சீமான் பேசப்போவதாக அறிவிப்புக்கள் வெளியான நிலையில், அவர் அதில் கலந்துகொள்ளாமல் திடீரென்று அவர் கனடாவை விட்டு வெளியேறியது ஏன் என்கிற கேள்விக்கு ஜியோல்டி நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார்.

அதேசமயம், கனடாவுக்குள் வரும் அயல்நாட்டவர்களை கட்டுப்படுத்தும் கனேடிய அரசின் குடிவரவு சட்டங்களை மீறி சீமான் நடந்துகொண்டதாகவும் அது தொடர்பில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.


புலம்பெயர் பார்வையில் போருக்குப் பிந்தைய இலங்கை - பெட்டகம்

இலங்கையில் வன்னிப் போர் முடிந்து ஆறுமாதங்கள் ஆனநிலையிலும், அந்த போரினால் ஏற்பட்ட மன வடுக்கள் மாறாதவர்களாகவே புலம் பெயர் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் நிலை என்ன? என்பது தொடக்கம், அடுத்து என்ன செய்வது?, எதனை எங்கிருந்து ஆரம்பிப்பது? என்பது வரை இலங்கை குறித்த பலதரப்பட்ட விடயங்களிலும் அவர்கள் பெரும் மனக்குழப்பத்திலேயே இருக்கிறார்கள்.

இந்த நிலையில், புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழ் மக்களின் மன உணர்வுகள் இன்று எப்படி இருக்கின்றது மற்றும் அவர்களது அமைப்புக்கள் என்ன செய்கின்றன என்பது குறித்த பெட்டகத்தின் முதலாவது பகுதியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்
கான்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா பெற்றுள்ள நூறாவது வெற்றி இதுவாகும்.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் எடுத்த 642 ரன்களை இலங்கையால் தனது இரண்டு இன்னிங்ஸ்களிலுமே எட்ட முடியாமல் போயுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் முறையில் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணியால் 269 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்திருந்தது.

இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் சரிவைக் காண இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் பிரதான காரணமாக இருந்தார். அவரே இப்போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, இந்திய அணிக்கு வெற்றி கிடைப்பதை உறுதிசெய்தது இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates