ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து சுவரொட்டிகள்
உயிர்மூச்சுடன் நாட்டைப் பாதுகாக்கும் வெற்றியாளர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை ஆரம்பம் என்ற பொருளில் எஸ்.எப். என்ற ஆங்கில எழுத்துக்களுடனான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதே சுவரொட்டிகள் நேற்றைய தினம் நாடு முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஜே.வி.பி. கட்சியே இந்த சுவரொட்டி பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதேவேளை நேற்று அதிகாலை வேளையில் மொனராகலை பிரதேசத்தில் மேற்கண்ட சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி. ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி. அதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் உடன் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகின்ற இரண்டு தரப்பு பிரதான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இன்னும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.
இக்கால கட்டத்தில் ஆளும்கட்சியின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் மற்றும் கட் அவுட்கள் நாடு முழுதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அந்த வகையிலேயே ஜே.வி.பி. தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் எம்மீது அரசியல் பழிவாங்கல்கள் நடத்தப்படுகின்றன.
இன்று 30ஆம் திகதி நுகேகொடையில் எமது கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது. அதற்கான அனுமதியையும் நாம் சட்டபூர்வமாக பெற்றிருந்த போதிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அந்த அனுமதியை இரத்துச் செய்துள்ளனர்.இது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே விடயம் சம்பந்தமாக நாம் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்து அது தொடர்பிலான மனுவையும் நாம் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளோம். ஜே.வி.பி. மீது கொண்டுள்ள அச்சம் காரணமாகவே தொடர்ச்சியான அழுத்தங்களையும் முறைகேடான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எம் மீது மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்கள் அவதானித்துக் கொண்டே இருக்கின்றனர்.
0 Response to "ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து சுவரொட்டிகள்"
แสดงความคิดเห็น