jkr

நுவரெலியாவில் அதிகூடிய வாக்குகள் கிட்டும் : பஸில் ராஜபக்ஷ


அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிநடத்தலில் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்கு பலத்தினால் வெற்றிபெறுவார்" என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கொட்டகலை காங்கிரஸ் தொழிநுட்ப வளாகத்தில் இன்று 27 ஆம் திகதி இடம்பெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கல்வி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சுசில்பிரேம் ஜயந்த், கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிரதி அமைச்சர்களான முத்துசிவலிங்கம், எஸ்.ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் பெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட இ.தொ.கா முக்கிஸ்தர்களும் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

பஸில் ராஜபக்ஷ மேலும் பேசுகையில்,

" அரசாங்கத்தின் கடந்த நான்கு வருட ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமையை இன்று நீங்கள் கண்கூடாகப் பார்க்கின்றீர்கள். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைகளுக்கமைய மலையக மக்களுக்கு மேலும் பல சேவைகளை நாம் செய்து வருகிறோம்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சிறந்த தலைவராக செயற்பட்டு மலையக தமிழ் மக்களை வழிநடத்தி வருகின்றார்.

வடக்கில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த போது இந்திய மக்கள் எமது நாட்டின் மீது தப்பான அபிப்பிராயத்தையே கொண்டிருந்தனர். இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசி இந்திய நாடாளுமன்ற குழுவினரை இலங்கைக்கு வரவழைத்தார்.

இவ்வாறு வருகை தந்த குழுவினர் வடக்கின் இடம்பெயர் முகாம்களுக்கும் சென்று அங்கு தங்கியிருந்த மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கும் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்தனர். இதன் மூலமாக இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு தொகை வீடுகள் அமைத்து கொடுப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அத்துடன் இந்திய நாடாளுமன்ற குழுவினரின் மலையக விஜயத்தின் ஊடாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கேற்ப தோட்டப் பகுதி மக்களுக்கும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வீடுகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆதரவு கிடைக்காத காரணத்தினால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து குறைந்த வாக்குகளே கிடைத்தன. ஆனால் நாம் வெற்றி பெற்ற பிறகு மலையக மக்களும் அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று ஜனாதிபதி விரும்பினார். அதனால்தான் இ.தொ.கா. உட்பட மலையகக் கட்சிகளை இணைத்துக் கொண்டு மலையக மக்களுக்குச் சேவை செய்யும் வகையில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வழங்கினார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெருந்தோட்ட மக்கள் அளப்பரிய சேவையாற்றி வருகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த சிந்தனையில் பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளார்.

கடந்த காலங்களில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு கணிசமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

எனவே எதிர்வரும் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து கூடுதலான வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன்." என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நுவரெலியாவில் அதிகூடிய வாக்குகள் கிட்டும் : பஸில் ராஜபக்ஷ"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates