வாலிக்கு கற்றுத் தந்த ராஜா!
தமிழ் கவிதைகளில் மிகவும் கடினமானதாக கருதப்படும் வெண்பாவை எப்படி எழுதுவது என்று பிரபல கவிஞர் வாலிக்கு, இசைஞானி இளையராஜா தான் கற்றுக் கொடுத்தாராம். இதை வாலியே மிகப் பெருமையாக சென்னையில் நடந்த விழாவில் சொல்லி மகிழ்ந்தார்.
கேட்பதற்கே வியப்பாக இருக்கும் இந்தத் தகவலை வாலி, பெருமையுடன் சொல்லியபோது, மேடையில் அமர்ந்திருந்த இளையராஜா வெட்கத்தில் நெளிந்ததைக் காணவும் வித்தியாசமாக இருந்தது.
கண்ணதாசன் காலத்திலேயே தனது கவிதைக் கொடியை உயரப் பறக்க விட்டவர் வாலி. வாலிபக் கவிஞர் என புகழப்படும் வாலி, கம்பன் எண்பது, ஆறுமுக அந்தாதி, வாரம்தோறும் வாலி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இவற்றின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வாலி பேசுகையில், தமிழ்க் கவிதைகளிலையே வெண்பா எழுதுவதுதான் மிகக் கஷ்டம். அதிலும் யாப்பு நடையில் எழுதுவது மகா கடினம்.
ஆனால் சினிமாவில் நிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் நான் ஏன் வெண்பா எழுத ஆசைப்பட வேண்டும், முயற்சிக்க வேண்டும். அதற்கு இளையராஜா போன்றவர்கள்தான் காரணம்.
இளையாஜாதான் எனக்கு வெண்பா குறித்து சொல்லிக் கொடுத்தார். அதை எப்படி எழுத வேண்டும் என கற்றுக் கொடுத்தார். எனது வெண்பாக்கள் பாராட்டுப் பெற அவர்தான் முக்கிய காரணம்.
இளையராஜாவுக்கு முன்பு நிறையப் பேர் எனக்குக் கற்றுக் கொடுக்க முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை. ஆனால் ராஜா, எனக்கு 2 மணி நேரத்தில் அதைக் கற்றுக் கொடுத்து அசத்தி விட்டார். அதன் பிறகு வெண்பாவை விட்டு நான் ஒருபோதும் பிரிந்ததில்லை.
இளையராஜாவிடம் இசை மட்டுமல்ல, நல்ல தமிழ்ப் புலமையும் உள்ளது. அவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்.
ஒருமுறை நான் கேட்டன், எப்படி இப்படி கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவராக மாறினீர்கள் என்று. அதற்கு ராஜா சொன்னார். தமிழகத்தின் மிக பின்தங்கிய ஒரு மாவட்டத்தின், ஏதோ ஒரு மூலையில் பிறந்த நான், இன்று பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்து என அத்தனையும் பெற்றிருக்கிறேன். யாருடைய ஆதரவும் இல்லாமல் நான் இதைப் பெற்றிருக்கிறேன் என்றால் அதற்கு கடவுள் அருள் மட்டுமே காரணம் என்றார் வாலி.
பின்னர் தனது வாழ்க்கையின் மறக்க முடியாத ஆரம்ப காலத்தையும் உருக்கமாக நினைவு கூர்ந்தார் வாலி.
... ஒரு காலத்தில் நான் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் இருந்தேன். சாப்பாடு கிடைக்குமே என்பதற்காக பொய் கூட சொல்லியுள்ளேன்.
ஒருமுறை எனது தந்தைக்கு திவசம் கொடுக்க என்னிடம் பத்து ரூபாய் பணம் கூட இல்லை என்று வாலி கூறியபோது அரங்கமே நிசப்தத்தில் ஆழ்ந்தது.
பின்னர் வாலி நாகேஷுடனான தனது நட்பு குறித்து பேசியபோது அரங்கம் மீண்டும் கலகலப்புக்கு மாறியது.
.. நாகேஷ் எனது நெருங்கிய நண்பர். அவர்தான் பசிக் கொடுமையிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவரிடம் இதற்காக ஸ்பெஷல் டெக்னிக்கே இருந்தது.
அதாவது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, ஆழமாக ஒரு தம் இழுத்து, சில விநாடிகளுக்கு அதை அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு பாருங்கள் பசி பறப்பதை. இதை நாகேஷ்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார் என்று வாலி கூறியபோது அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது.
விழாவில் துக்ளக் ஆசிரியர் சோ, இளையராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பழனிபாரதி, பிறைசூடன் உள்ளிட்ட பல கவிஞர்களையும் வாலி, பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்
0 Response to "வாலிக்கு கற்றுத் தந்த ராஜா!"
แสดงความคิดเห็น