தேர்தல் குறித்த முடிவை பொன்சேகா நாளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்
ஓய்வுபெற்ற கூட்டுப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துக் களமிறங்குவது தொடர்பான தமது முடிவை உத்தியோகபூர்வமாக நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர் உத்தியோகபூர்வமாக தனது முடிவினை இன்னமும் அறிவிக்கவில்லை.
பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டுக் கட்சிகளின் இணைப்பாகவுள்ள ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஏற்கனவே தீர்மானித்துள்ளன.
இந்நிலையில் நாளை முற்பகல் 11.00 மணியளவில் சரத் பொன்சேகா தனது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடைமுறை அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்றும் யுத்தத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றி தவறாக பயன்படுத்தப்படுவதாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே சரத் பொன்சேகா இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக சேவை செய்யத் தயாராக இருப்பதாகவும் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதே தனது பிரதான இலக்கு என்றும் அவர் அங்கு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "தேர்தல் குறித்த முடிவை பொன்சேகா நாளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்"
แสดงความคิดเห็น