இலங்கை ரஷ்ய உறவுகள் வலுவடைந்துள்ளன.
இலங்கைக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ரஷ்யா தயாராகவுள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் மிகவும் வலுவடைந்து காணப்படுவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரேர் தெரிவித்துள்ளார்.
குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நேற்றைய தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியமையைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சர்வதேச அழுத்தங்களுக்கோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கோ முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உள்ளது. இலங்கையின் நீதித்துறை மிகவும் ஒழுங்கான முறையில் செயற்பட்டு வருகின்றது. இதனைப் பயன்படுத்தி எந்தவொரு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் விடயத்தில் ரஷ்யா இலங்கைக்கு எப்போதும் ஆதரவு வழங்கி வந்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சுமூகமான நிலையை ஏற்படுத்தும் நோக்கிலேயே ரஷ்யா அரசாங்கம் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது. தேசிய ரீதியான ஒருமைப்பாடு நல்லிணக்கம் போன்ற நடைமுறைச்சாத்தியமான முடிவுகளை ரஷ்யா இந்த ஒத்துழைப்புக்களின் மூலம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ரஷ்ய அரசாங்கம் தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதுடன் மிதிவெடிகளை அகற்றும் விடயத்தில் அனுபவம் வாய்ந்த குழுவொன்றையும் அனுப்பவுள்ளதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரேர் தெரிவித்துள்ளார்.
0 Response to "இலங்கை ரஷ்ய உறவுகள் வலுவடைந்துள்ளன."
แสดงความคิดเห็น