ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பு தொடரணி வாகனங்களை பலவந்தமாக அகற்ற முயற்சி - பேச்சாளர் மறுப்பு
கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தொடரணி வாகனங்களை பலவந்தமாக எடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை என்றும் ஜெனரல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு எக்காரணம் கொண்டும் அகற்றப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
எது எவ்வாறெனினும் பாதுகாப்பு வாகனங்களையும் மெய்ப்பாதுகாவலர்களையும் பலவந்தமாக அகற்றுவதான முயற்சியானது சட்டவிரோதமானது என்று ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகம் அறிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :
கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தற்போது தங்கியுள்ள 'ஜெனரால் இல்லத்துக்கு' நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இராணுவ அதிகாரிகள் அறுவர் உள்ளடங்களாக சுமார் 56 இராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.
அங்கு சென்ற அவர்கள் ஜெனரலின் வீட்டின் முன்னாள் நின்றிருந்த அவரது மெய்ப்பாதுகாவலர்களை அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரலின் பாதுகாப்பு தொடரணியைச் சேர்ந்த வாகனங்களையும் பலவந்தமான முறையில் எடுத்துச் செல்ல முயற்சி செய்தனர்.
இந்நிலையில் அவ்விடத்துக்கு வந்த ஜெனரல் சரத் பொன்சேகா, "யாருடைய உத்தரவின் பேரில் குறித்த பாதுகாப்பு வாகனங்களை இங்கிருந்து அகற்ற முயற்சிக்கின்றீர்கள்?" என்று அங்கு வந்த இராணுவ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார் என்று அவரது அலுவலகம் தெரிவித்தது. அத்துடன், "ஒரு வீட்டுக்கு இரவில் வரும் போது சட்டமறிந்து செயற்பட வேண்டும் என்றும் அது தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?" என்றும் ஜெனரல் பொன்சேகா கேட்டதாகவும் அவரது அலுவலகம் கூறியது.
இதன்போது, தாம் பாதுகாப்பு கவுன்சிலின் உத்தரவுக்கமையவே இங்கு வந்ததாகவும் அந்த உத்தரவினை நிறைவேற்ற இடமளிக்குமாறும் இராணுவ அதிகாரிகள் ஜெனரல் பொன்சேகாவிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் மீண்டும் உரையாடியுள்ள ஜெனரல் பொன்சேகா, இது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், அதனால் பாதுகாப்பு வாகனங்களையோ அல்லது தனது மெய்ப்பாதுகாவலர்களையோ இங்கிருந்து அகற்றுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், வந்த வழியில் அனைவரையும் திரும்பிச் செல்லுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து குறித்த இராணுவ வீரர்கள் அங்கிருந்த இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய அவ்விடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்றும் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகம் மேலும் கூறியது.
பேச்சாளர் மறுப்பு
மேற்படி சம்பவம் தொடர்பில் மறுப்பினைத் தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குத் தேவையான உரிய பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது என்றும் அதனை அகற்றுவதற்கான முயற்சிகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.
கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவினால் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் தனது பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கமாண்டோ அதிகாரியொருவர், படை வீரர்கள் 20பேர், சிங்க ரெஜிமண்டைச் சேர்ந்த அதிகாரிகள் மூவர், அதே ரெஜிமண்டைச் சேர்ந்த வீரர்கள் 70பேர், இராணுவ வீராங்கனைகள் ஐவர் மற்றும் சாரதிகள் 10 பேரை தமது பாதுகாப்புகாப்புக்காக வழங்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவரது வேண்டுகோளுக்கு இணங்க குறித்த இராணுவ வீராங்கனைகள் ஐவர் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் அவருடைய பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டனர். அத்துடன் அவர் குறித்த கடிதத்தில் கேட்டுக் கொண்டதற்கிணங்க, குண்டு துளைக்காத கார் 01, லாண்ட் ரோவர் ஜீப்கள் 03, வான் 01, பார ஊர்தி 01 மற்றும் பஸ் போன்ற வாகனங்களும் அவரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு மேலதிகமாக பலவந்தமான முறையிலும் சில பாதுகாப்பு அதிகாரிகளை அவரே நியமித்துள்ளார். அந்தவகையில் கமாண்டோ அதிகாரிகள் நால்வர், 24 படை வீரர்கள், நிர்வாக மற்றும் சமிக்ஞை அதிகாரிகள் மூவர், அதே பிரிவைச் சேர்ந்த படையினர் 17பேர், சாரதிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் 55பேர், வைத்திய பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 7பேர் போன்றோரும் கார்கள் 03, லாண்ட் ரோவர் ஜீப்கள் 07, டபள் கெப் ரக வாகனம் 01, வான்கள் 04, அம்புலன்ஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள்கள் 09 மற்றும் பஸ் போன்ற வாகனங்களையும் மேலதிகமாக வைத்துக்கொண்டுள்ளார்" என்றார்.
0 Response to "ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பு தொடரணி வாகனங்களை பலவந்தமாக அகற்ற முயற்சி - பேச்சாளர் மறுப்பு"
แสดงความคิดเห็น