வீதி ஒழுங்கை தொண்டர் நிறுவன வாகன சாரதிகள் கடைப்பிடிக்க வேண்டும்: வவுனியா மேல் நீதிமன்றம்
வவுனியாவில் உள்ள தொண்டர் நிறுவனங்களின் வாகன சாரதிகள் வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.
வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலமாக விடுத்துள்ள உத்தரவு ஒன்றிலேயே இந்த அறிவுறுத்தலை அவர் விடுத்துள்ளார்.
பிரபலமான ஒரு சர்வதேச தொண்டர் நிறுவன வாகன சாரதி ஒருவர் தனது வாகனத்தை நடு வீதியில் மிகுந்த வேகத்துடன் பின்பக்கமாகச் செலுத்தியதை இவர் நேரில் கண்டுள்ளார். இது குறித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மேற்படி நபர் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் நீதிமன்ற நீதிபதி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அனுப்பியுள்ள உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேபோன்று வேறு ஒரு தொண்டு நிறுவன வாகன சாரதி தனது வாகனத்தை நடுவீதியில் நிறுத்தியுள்ளார். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்குத் தெரிந்த ஒருவருடன் இவர் வீதியில் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.
வவுனியாவில் உள்ள அனைத்து தொண்டர் நிறுவன தலைமை அதிகாரிகளுக்கும் இதுபற்றி அறிவித்து தமது சாரதிகள் வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் வீதி ஒழுங்குகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் வீதி ஒழுங்குகளைச் சரியாகக் கடைப்பிடிக்காமல் வாகனங்களைச் செலுத்துவதனாலும், கட்டுக்கடங்காத வேகத்தில் வாகனங்களைச் செலுத்துவதனாலும், வாகன நெரிசல் மிகுந்துள்ள வவுனியா வீதிகளில் பல விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் பலர் சம்பவ இடங்களிலேயே பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "வீதி ஒழுங்கை தொண்டர் நிறுவன வாகன சாரதிகள் கடைப்பிடிக்க வேண்டும்: வவுனியா மேல் நீதிமன்றம்"
แสดงความคิดเห็น