சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய முடிவு
சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக அப் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
பெரும்பாலும் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியிடம் கடிதத்தை கையளிப்பாரென்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
விமல் வீரவன்ச எம்.பி. தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளர் பதவி வகித்த அமைச்சர் நந்தன குணதிலக பதவியை ராஜினாமாச் செய்து கட்சியை விட்டு வெளியேறினார். அதேபோன்று இம்முன்னணியில் தேசிய அமைப்பாளர் பதவி வகித்த சமல் தேசப்பிரியவும் பதவி விலகியிருந்தார்.
இந்நிலையிலேயே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பியின் சிபார்சில்தான் அமைச்சர் பதவி கிடைத்தது. எனவே, வெளியேற வேண்டுமென நெருக்குதல் கொடுத்ததன் காரணமாகவே இந்நிலைமை தோன்றியுள்ளதாகவும் அறிய வருகிறது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பிலான 60 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக கொழும்பு ஹொலிடே இன் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டதோடு, கலந்து கொண்டோருக்கு பகல் உணவு வழங்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வெளியேறிய போது, முன்னணியின் தலைவருடனான கருத்து முரண்பாடுகளே தனது முடிவுக்கு காரணம் என்று அமைச்சர் நந்தன குணதிலக குறிப்பிட்டிருந்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி தொடர்பில் தீர்க்கமான முடிவு இன்று வெளியாகலாமென அமைச்சின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 Response to "சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய முடிவு"
แสดงความคิดเห็น