செய்தியறிக்கை
அப்துல்லா அப்துல்லா |
ஆப்கான் அதிபர் தேர்தலின் இறுதி சுற்றிலிருந்து விலகுவதாக அப்துல்லா அப்துல்லா அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் அடுத்த வார இறுதி நாட்களில் நடக்கத் திட்டமிடப்பட்டுள்ள அதிபர் தேர்தலின் இறுதிச் சுற்று வாக்கெடுப்பில் போட்டியிடுவதிலிருந்து தான் விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா அப்துல்லா அறிவித்துள்ளார்.
நடத்தப்படுகின்ற வாக்கெடுப்பு நியாயமாக நடத்தப்படாது என்று அஞ்சுவதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறுகிறார். அப்துல்லாவின் விலகலால், நடக்கின்ற வாக்கெடுப்பில் களத்தில் உள்ள ஒரே வேட்பாளர் தற்போதைய அதிபர் ஹமீத் கர்சாய்தான் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடப்பதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை வெளிநாட்டு ராஜீய அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டுவருவதாகவும், வாக்கெடுப்பின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வெளிநாட்டு மற்றும் ஆப்கன் துருப்பினருக்கு அச்சமயத்தில் கணிசமான உயிராபத்து ஏற்படும் என்பதால் வாக்கெடுப்பை நிறுத்த முயற்சிகள் நடத்தப்படுவதாகவும் காபுலில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
தற்போது போன்றது மாதிரியான ஒரு சூழலில் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது ஆப்கானிய அரசியல் சாசனத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை என்றும், ஆனால் நாட்டின் உச்சநீதிமன்றம் அதிபர் ஹமீத் கர்சாயை வெற்றியாளராக அறிவிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
பாகிஸ்தானின் வடமேற்கில் தொடரும் வன்முறை
தலிபான்கள் |
பாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கின்ற கைபர் பகுதியில் பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றை இஸ்லாமிய ஆயுததாரிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் பதினெட்டு அறைகள் கொண்ட அரச பள்ளிக்கூடம் சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் அருகில் இருந்த வீடுகளை சேர்ந்த நால்வர் காயம் அடைந்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹங்கு பகுதியில் இரண்டு பள்ளிக்கூடங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராக் தேர்தல் சட்டம் தாமதம்
இராக் நாடாளுமன்றம் |
இராக்கில் ஜனவரி மாதத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆவண செய்யும் தேர்தல் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் இன்று ஞாயிற்றுகிழமை வாக்களிக்கப் போவதில்லை என இராக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரியில் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் இந்த தேர்தல் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
முன்னதாக இந்த வாக்கெடுப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றால் தேர்தலுக்கு அங்கீகாரம் கிடைப்பதை தங்களால் உறுதி செய்ய முடியாது என ஐ.நா எச்சரிக்கை விடுத்து இருந்தது.
ஆனால் இந்த வாக்கெடுப்பு இன்னும் பல நாட்களுக்கு நடைபெறாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இசையை சட்டவிரோதமாக தரவிறக்கம் செய்பவர்களே அதிகமாக செலவு செய்கிறார்கள் - ஆய்வு
இசை கருவி |
பிரிட்டனை சேர்ந்த டெமோஸ் என்ற ஆய்வு அமைப்பு நடத்திய ஆய்வில், இணையத்தில் சட்ட விரோதமாக இசையை தரவிறக்கம் செய்யும் நபர்கள், அவ்வாறு செய்யாதவர்களை விட இசையை வாங்குவதற்காக கிட்டத்தட்ட 50 டாலர்கள் அதிகமாக செலவு செய்வது தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இசையை சட்டவிரோதமாக தரவிறக்கம் செய்பவர்கள் இசைக்காக 130 டாலர்களும், சட்டவிரோதமாக தரவிறக்கம் செய்யாதவர்கள் 80 டாலர்களும் செலவிடுவது தெரிய வந்துள்ளது.
டெமோஸ் அமைப்பைச் சேர்ந்த பீட்டர் பிராட்வெல் கூறுகையில், சட்டவிரோதமாக தரவிறக்கம் செய்பவர்களை குறிவைப்பது என்பது இசையை வாங்குபவர்களில் மிகச்சிறந்தவர்களை தண்டிப்பது போல ஆகலாம் என்றார்.
முன்னதாக இந்த வாரத்தின் முற்பகுதியில் சட்டவிரோதமாக தரவிறக்கம் செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை பிரிட்டிஷ் வர்த்தக அமைச்சர் பீட்டர் மண்டல்சன் அறிவித்திருந்தார்.
இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகா |
இலங்கை இராணுவ தளபதியை அமெரிக்க அரசு விசாரிக்க விரும்புவதாக தகவல்
இலங்கையில் இந்த ஆண்டின் முற்பகுதியில் நடந்த உள்நாட்டு போரின் போது இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்க அரசு விசாரிக்க விரும்புவதாக இலங்கை அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகா இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். இந்த செய்தியை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
பத்து நாட்களுக்கு முன்னர் தான் அமெரிக்க ராஜாங்கத்துறை வெளியிட்ட அறிக்க ஒன்றில், போரின் இறுதிக்கட்டத்தில் அரசப் படைகளும், விடுதலைப்புலிகளும் போர் குற்றங்களில் ஈடுப்பட்டிருக்கலாம் என்பதற்கான நம்பதகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருந்தது.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறும்போது, அமெரிக்க உள்துறை அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சரத் பொன்சேகோவிடம் புதன்கிழமையன்று விசாரிக்க விரும்புவதாகவும், குறிப்பாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தாபய ராஜபக்ஷாவுக்கு எதிராக இவரை சாட்சியம் கொடுக்க அது விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் ரோந்துப் படகில் வரும் அந்நிய நாட்டவர்கள் தாக்குவதாக தமிழக மீனவர்கள் புகார்
மீனவர்கள் |
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையின் ரோந்துப் படகில் வரும் அந்நிய நாட்டவர்களால் தாங்கள் தாக்கப்படுவதாக தமிழ்நாட்டு மீனவர்கள் புகார் கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் சீனர்களாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத்தலைவர் போஸ் கூறும்போது, தங்களுக்கு சிங்கள இராணுவத்தினரை நன்றாக அடையாளம் தெரியும் என்றும், இந்த நபர்கள் உயரம் குறைவாகவும், சிகப்பாகவும், சப்பை மூக்கோடு இருப்பதாகவும் கூறினார்.
மேலும் இந்த நபர்கள் கடந்த இரண்டு மாத காலமாகவே, மீனவர்களின் படகுகள் மீது மோதுவது, இறால் மற்றும் மீன்களை பறித்து செல்வதோடு, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருவதாகவும், தாங்கள் இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாகவும், ஐந்து மாவட்ட மீனவர்களும் இது தொடர்பில் முறைப்பாடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
1984 சீக்கியர் படுகொலை: 25 ஆண்டுகள் முடிந்த நிலையில் நியாயம் கிடைத்ததா?
பெரும் வன்முறை இடம்பெற்றது |
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது காங்கிரஸ் கட்சிக்காரர்களால் தூண்டப்பட்ட வன்முறையில் பலநூறு சீக்கியர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அந்த படுகொலைகள் நடந்து 25 ஆண்டுகளான பிறகும் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்கிற விமர்சனம் பலராலும் முன் வைக்கப்படுகிறது.
இது குறித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவரும் இந்து பத்திரிக்கையின் அரசியல் பகுப்பாய்வாளர் சித்தார்த் வரதராஜன் அவர்களின் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น