தமிழக இலங்கை அகதிகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். அமைச்சர்கள், துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இலங்கையில் தமிழ் அகதிகள் முள்வேலி முகாம்களுக்குள்ளே அவதிப்படுவதை எண்ணி கண்ணீர் உகுத்து அவர்களை அந்த முகாம்களில் இருந்து விடுவிக்க தமிழகத்தில் இருந்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்றனர்.
அவர்கள் நிலை அறிய செய்த இந்த ஏற்பாட்டின் விளைவாக மாபெரும் வெற்றியோ, மகத்தான வெற்றியோ கிடைக்கா விட்டாலும்கூட, அடைபட்டிருந்த 3 லட்சம் பேர்களில் சுமார் ஒரு லட்சம் பேரையாவது இதுவரை அந்த கூண்டுகளில் இருந்து வெளியே கொணர்ந்து அவர்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அது போதுமானதல்ல. மேலும் அவர்கள் அனைவரையும் விடுவித்து, வாழ்வாதாரங்களை வகுத்தளித்து மீண்டும் அமைதியான நல்வாழ்வு பெற்றிட இந்திய அரசின் முயற்சிகளும், அதற்காக நமது தூண்டுதல்களும் தொடங்கப்பட வேண்டுமென்றே கருதுகிறோம்.
இந்த நிலையில் ஏற்கனவே நான் இந்திய மண்ணில் அகதிகளாக குடியேறியிருக்கின்ற இலங்கை தமிழர்களை இந்த மண்ணின் நிரந்தர குடிமக்களாக ஆக்கிட வேண்டும் என்று, அதற்கான முயற்சியிலே ஈடுபட்டு நமது வேண்டுகோளை பரிசீலிப்பதாக இந்திய பேரரசின் சார்பிலும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே இலங்கை முகாம்களில் இருக்கின்ற தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற முயற்சி ஒரு புறமிருக்க தமிழ்நாட்டில் தொடர்ந்து பல ஆண்டு காலமாக இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகள் நிலை என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற வகையிலும், இன்னும் சொல்லப்போனால் நம் நெஞ்சத்தைக் குத்திக்காட்டுகின்ற நிலையிலும் நவம்பர் 11ஆம் திகதியிட்ட ஓர் ஆங்கில வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்துள்ள நீண்ட கட்டுரை ஒன்றை நான் படிக்க நேர்ந்தது.
இலங்கையில் அகதிகளாக உள்ள தமிழர்கள் வாடி வதங்குவது ஒரு புறமிருக்க, இங்கே நமது தமிழ் மண்ணில் அகதிகளாக வந்து சேர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் தாங்கள் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரங்கள், வசதிகள் எதுவுமின்றி எத்துணை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை புகைப்படங்களோடு அந்த வார ஏடு வெளியிட்டுள்ள காட்சிகளைக் கண்டு, கண்ணீர் பெருக்கியதோடு அவர்கள் கவலைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை மேற்கொள்வது தான் நமது கடமை ஆகும் எனக் கருதினேன்.
இலங்கைத் தமிழ் அகதிகளைப் பாதுகாக்க வேண்டும்
இலங்கைத் தமிழ் அகதிகளைப் பாதுகாத்திடவும், அவர்கள் தம் பட்டினி போக்கிடவும், படிப்பு வாய்ப்பு வழங்கிடவும், அவர்களது குறைகளை நீக்கி தாய் மண்ணில் வாழ வழியின்றி தமிழ் மண்ணில் வாழ்வதற்கு வந்தவர்களை அமைதியாக வாழச் செய்திட இங்குள்ள தமிழக அரசின் அதிகாரம் பெற்ற எல்லா துறையினருக்கும் பொறுப்பு உண்டு.
இதை நிலை நாட்டி அவர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் உழைத்திடுவோம் என்ற உறுதியோடு செயல்பட வேண்டும் என தொடர்புடைய துறையினர் அனைவருக்கும் ஆலோசனை வழங்கி- ஆய்வுகள் மேற்கொண்டு, ஆவன செய்திடவும்- அவர் தம் அல்லல் போக்கிடவும் அட்டியின்றி உடனே அரும்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று ஆணையிடுவதற்கு வாய்ப்பாக இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை அழைத்து விவாதிக்கவிருக்கிறேன்.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இன்னல் இம்மியளவும் இல்லாத வகையில் இன்புற்று வாழ்ந்திட இன்றைய கூட்டத்தின் வாயிலாக தேவையான நிதி ஒதுக்கி, அவர் தம் தேவைகள் நிறைவு செய்யப்பட வழி வகுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தசங்கரி வலியுறுத்தல்
இந்நிலையில் இலங்கை தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்தசங்கரி முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
"இந்தியாவில் உள்ளது போல அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் பெரும்பான்மையான தமிழர்களுக்கு ஓரளவு திருப்தி ஏற்படும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வுக்கு இலங்கைக் குழுவைச் சம்மதிக்க வைக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீங்கள் (கருணாநிதி ) அழுத்தம் கொடுக்க வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவியைப் பெற்றுத் தரவும் முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
0 Response to "தமிழக இலங்கை அகதிகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை"
แสดงความคิดเห็น