35 ஆயிரத்து 646 கோடி ரூபாவிற்கான கணக்கு வாக்கெடுப்பு நாளை சமர்ப்பிப்பு-வியாழன் மாலை 5.30 மணிக்கு வாக்கெடுப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 2010 ஆம் ஆண்டில் நான்கு மாதங்களுக்கான செலவிற்கென 35 ஆயிரத்து 646 கோடியே 550 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவிற்கான கணக்கு வாக்கெடுப்பை பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கவிருக்கின்றது. 2010 ஆம் ஆண்டில் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதனால் அரசாங்கம் வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கõமல் கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்தது. கணக்கு வாக்கெடுப்பிற்கான செலவு விபரங்களை பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவே சபையில் சமர்ப்பிக்கவிருக்கின்றார்.
கணக்கு வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறுவதுடன் சபையமர்வுகள் மாலை 6.30 மணிவரையும் தொடரும். இதன் மீதான வாக்கெடுப்பு வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நடைபெறும். அடுத்தவருடத்தில் முதல் நான்கு மாதகால செலவிற்கென அரசாங்கம் 35 ஆயிரத்து 646 கோடியே 550 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவை மதிப்பிட்டுள்ளதுடன் அதில் பாதுகாப்பு அமைச்சுக்கென 210 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாவை கோரியிருக்கின்றது. ஜனாதிபதியின் செயன்முறை மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கென 230 கோடியே 32 இலட்சம் ரூபாவும் தேர்தல்கள் திணைக்களத்திற்கென 36 கோடியே 62 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கணக்கு வாக்கெடுப்பின் பிரகாரம் பிரதம அமைச்சர் அலுவலகத்திற்கு 65 கோடியே 41 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாவும் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்திற்கு 17 கோடியே 79 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு கோரியுள்ள 210 கோடியே 91 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாவுடன் இலங்கை தரைப்படைக்கு 345 கோடி ரூபாவும் கடற்படைக்கு 116 கோடி ரூபாவும் விமானப்படைக்கு 78 கோடி ரூபாவும், பொலிஸ் திணைக்களத்திற்கு 124 கோடி ரூபாவும் , சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 297 கோடி ரூபாவும், கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்திற்கு 1கோடியே 66 இலட்சம் ரூபாவும் கோரியுள்ளது.
2010 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்கென மீண்டுவரும் செலவினமாக 1970 கோடி ரூபாவும், மூலதனச் செலவினமாக 1580 கோடி ரூபாவும், முற்பனக் கொடுப்பனவுகளுக்கென 60 கோடி ரூபாவும் செலவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இதேவேளை, கணக்கு வாக்கெடுப்பில் அவசர தேர்தல்கள் நிமிர்த்தம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் தேர்தலொன்று அறிவிக்கப்படுமாயின் குறைநிரப்பு பிரேரணையின் மூலமாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Response to "35 ஆயிரத்து 646 கோடி ரூபாவிற்கான கணக்கு வாக்கெடுப்பு நாளை சமர்ப்பிப்பு-வியாழன் மாலை 5.30 மணிக்கு வாக்கெடுப்பு"
แสดงความคิดเห็น