இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை தமிழ் தலைமைகள் ஏற்றுச் செயற்பட்டிருந்தால் தமிழ் பேசும் மக்களுக்கு இன்றைய அவலங்கள் ஏற்பட்டிருக்காது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
2004ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்கு பலத்தை அளித்திருந்தால் அண்மையில் நிகழ்ந்த யுத்தத்தை வரவிடாது தம்மால் தடுத்திருக்க முடியுமென ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது தெரிவித்தார்.
வடமராட்சியில் உள்ள தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு. அருந்தவராஜா தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுச் செயற்பட்டிருந்தால் தமிழ் பேசும் மக்கள் இத்தகைய பாரிய அழிவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அந்த ஒப்பந்தத்தை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் நடைமுறையில் சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருக்கலாம் என்பதுடன் உயிரழிவுகளையும் சொத்திழப்புக்களையும் தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் தான் உட்பட பொதுமக்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாடுவதற்கும் உயிர் அச்சுறுத்தலின்றி வாழ்வதற்கும் வழிவகுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புலித் தலைமையின் அச்சுறுத்தல் இல்லாமையால் தற்போது மக்களோடு மக்களாக கலந்து உறவாட முடிவதாகவும் சுதந்திரமாக செயற்பட முடிவதாகவும் தெரிவித்தார்.
தற்போது நடமாடும் சுதந்திரத்திலும் தொழில் செய்யும் சுதந்திரத்திலும் ஆங்காங்கே சில குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றையும் காலக்கிரமத்தில் நிவிர்த்தி செய்ய முடியுமெனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தாம் வாக்குப்பலத்தை அளிக்குமாறு மக்களிடம் கேட்பது தமக்காகவல்ல என்றும் அது மக்களின் நலனுக்காகவே என்றும் தெரிவித்தார்.
கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளங்களுடன் அப்பகுதி மக்கள் ஊர்வலமாக பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். இக் கூட்டத்தில் ஈபிடிபியின் கரவெட்டிப் பிரதேசப் பொறுப்பாளர் இராசதுறை செந்தில்நாதனும் கலந்து கொண்டார்.
0 Response to "இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை தமிழ் தலைமைகள் ஏற்றுச் செயற்பட்டிருந்தால் தமிழ் பேசும் மக்களுக்கு இன்றைய அவலங்கள் ஏற்பட்டிருக்காது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா"
แสดงความคิดเห็น