யாழ். குருநகர் கடற்தொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்தனர்!
யாழ். குருநகர் கடற்தொழிலாளர்கள் தமக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அவரது யாழ். அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த சிறுதொழிலை மேற்கொள்ளும் கடற்தொழிலாளர்களுக்கும் ரோலர் படகுகளின் மூலம் தொழில் செய்யும் கடற்தொழிலாளர்களுக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது குருநகர் பகுதியைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்களும் கடற்தொழிலாளர் சங்கத் தலைவர்கள் மற்றும் கடற்தொழிலாளர் சங்கச் சமாசப் பொது முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இத்தகைய தொழிலாளர்களின் பிரச்சினைகளில் தமக்கோ அல்லது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கோ எத்தகைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதுவும் கிடையாது என்றும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இரு தரப்பினரும் இணக்கப்பாடான ஒரு முடிவிற்கு வர வேண்டும் எனத் தெரிவித்ததுடன் அத்தகைய இணக்கப்பாட்டின் மூலம் குருநகர் பகுதி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஐக்கியப்பட்டு, தொழில் புரிய வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
குருநகர் பகுதிக் கடற்தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பதால் அனைவரும் கலந்துரையாடி இணக்கப்பாடான முடிவிற்கு வர வேண்டும் எனத் தெரிவித்ததுடன் தொழிலாளர்களே பரஸ்பர விட்டுக் கொடுப்புடன் அனைவரும் தொழில் புரியக் கூடிய இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பிரனருடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடிய சமயம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு கிடைக்கும் வரை ரோலர் மூலம் கடற்தொழில் மேற்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்துவது என இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வந்ததுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளையும் கலந்துரையாடலையும் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 Response to "யாழ். குருநகர் கடற்தொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்தனர்!"
แสดงความคิดเห็น