jkr

வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிப்பதற்கு விசேட குழு- ஜனாதிபதி தகவல்;


வெள்ளை வான் கடத்தல்கள், ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

"அரசாங்கம் என்ற ரீதியில் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பினை நான் ஏற்றுக் கொள்கின்றேன். என்னைப் பொறுத்தவரை நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுதான். யாருக்காவது பிரச்சினையிருந்தால் அதனை தீர்ப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்" என்றும் அவர் கூறினார்.

அலரி மாளிகையில் நேற்று ஊடக நிறுவனங்களின் செய்தி ஆசிரியர்களைச் சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது;

"மக்களின் விருப்பத்திற்கேற்ப ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. இன்று அந்த மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஊடகங்கள் உதவ வேண்டும். எம்மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பில் வீடொன்றை கட்டினால் அதனை நானோ அல்லது பஷில் ராஜபக்ஷவோ அல்லது கோத்தபாய ராஜபக்ஷவோ கட்டுவதாகவே சேறுபூசப்படுகின்றது.

தேர்தலில் சாதகமான பிரசார நடவடிக்கைகளில் நாம் ஈடுபடவுள்ளோம். நாட்டை ஒற்றுமைப்படுத்திய நாம் அதனை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

முப்படைத் தளபதிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடனேயே யுத்தத்தில் வெற்றி பெற்றோம். இதில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தால் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்கு முடியாது. யுத்த வெற்றியானது சகலரதும் வெற்றியாகும். இது ஒருவரது வெற்றியல்ல.

யுத்தம், பொருளாதாரம், அபிவிருத்தி என்பவற்றுக்கு நான் தலைமைத்துவம் கொடுத்தேன். இவற்றை நான் மட்டும் செய்ததாக கூறவில்லை.

கேள்வி: கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை வெற்றி கொள்வதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தீர்கள். இம்முறை மக்களுக்கு உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எத்தகைய வாக்குறுதிகளை வழங்கப் போகின்றீர்கள்?

பதில்: இம்முறை நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கேள்வி: அரசாங்கத்தில் அமைச்சரவை மிகவும் பெரிதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் வென்ற பின்னர் அமைச்சரவையைg குறைக்க நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: அரசாங்கத்தின் அமைச்சரவை பெரியதென்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் சம்பளத்தை மட்டுமே பெறுகின்றனர். வாகனம், பாதுகாப்பு, அதிகாரம் என்பவை மட்டும்தான் அமைச்சர்களிடம் காணப்படுகின்றன.

உறுதியான அரசாங்கம் இருந்திருந்தால் இவ்வாறு அமைச்சரவையை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்க மாட்டாது. எமது அரசாங்கத்தில் சபாநாயகரை கூட நாம் தெரிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் எமது ஒரே குறிக்கோளான நாட்டை ஒன்றுபடுத்துவதற்காக நாம் யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டோம்.

யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதில் நாம் வெற்றி பெறாவிடில் எதிரணியினர் என்மீது குற்றச்சாட்டினை சுமத்தியிருப்பர். சகோதரர்களுடன் இணைந்து யுத்தத்தில் தோல்வி கண்டுவிட்டதாக என்மீது குற்றஞ்சாட்டியிருப்பர். இதற்கெல்லம் தயாராகவே நான் யுத்தத்தில் ஈடுபட்டேன்.

வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஊடக அடக்குமுறை போன்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன. இவற்றையும் அரசாங்கம் என்ற ரீதியில் நான் பொறுப்பேற்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அரசாங்கம் ஸ்திரமானதாக இல்லாமையினாலேயே பிரதான குறிக்கோளை அடைவதற்காக அமைச்சரவையினை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கேள்வி: ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: அரசாங்கம் என்ற ரீதியில் இத்தகைய சம்பவங்களுக்கு நான் பொறுப்பேற்கின்றேன். இத்தகைய சம்பவங்களுடன் இராணுவம் அல்லது பொலிஸாரை குற்றஞ்சாட்டுவது முறையல்ல.

இச்சம்பவங்களுடன் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை பரிசீலிப்பிதற்கு விசேட குழுவை நியமித்துள்ளேன். விசாரணையின் பின்னர் யாராவது இத்தகைய செயலில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை முன்வைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் உங்களை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்க தயார் என்று மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன அறிவித்துள்ளன. இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுதான். நாட்டை ஆதரிக்கும் பிரிவினர் நாட்டுக்கு எதிராக செயற்படும் பிரிவினர் என இரண்டு பிரிவாகவே நான் மக்களை பார்க்கிறேன்.

நாட்டிலுள்ள யாருக்காவது பிரச்சினை இருந்தால் அது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தயாராகவே இருக்கின்றேன்.

இடம்பெயர்ந்த மக்களை சிறைச்சாலைகளுக்குள் வைத்துக் கொண்டு வாக்குகளை பலவந்தமாக நாம் பெறப்போவதாக கூறியவர்கள் இவர்களேயாவர்.

இத்தகையவர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. வடகில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த மக்கள், இராணுவத்தினரைக் கூட கண்டதில்லை. வெளிநாடுகளில் இலங்கையை காணத எமது சந்ததியினர் போல் இவர்களும் இங்கிருந்தனர். தாங்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லது சித்திரவதை செய்யப்படுவார்கள் என்ற மனநிலை அவர்கள் மத்தியில் ஊட்டப்பட்டிருந்தது.

கேள்வி: நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருக்கின்றதா?

பதில்: நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்க வேண்டியது அவசியம்தான்.

கேள்வி: முன்னாள் கூட்டுப்படை தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஆயுத இறக்குமதியில் ஊழலில் ஈடுபட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உண்மையா?

பதில்: ஊழல் குறித்து விசாரிப்பதற்கு சுயாதீனமான நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், இத்தகைய ஊழல் நடைபெற்றதா என்பது குறித்து எனக்கு தெரியாது. நாம் அது குறித்து விசாரிக்க வேண்டும். எனது மகனின் பெயரில் நிறுவனம் ஒன்றை வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்திற்கு கேள்விப் பத்திரங்களை நான் வழங்க முடியாது.

இது குறித்து பரிசீலித்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் தளபதி மீது விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்புசெயலாளருக்கும் உரிமை இல்லை. இதற்கென சுயாதீன நிறுவனம் ஒன்று உள்ளது. கேள்வி: வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படும் எனக் கூறுகின்றீர்கள். இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

பதில்: வாக்களிப்பதற்கு தகுதியிருந்தால் வாக்களிக்கலாம். கூடிய வரையில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குவோம். புத்தளத்தில் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் இருந்தபடி கடந்த தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். இவ்வாறு மக்கள் வாக்குகளை அளிக்க முடியும்.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், 20 இலட்சம் மக்கள் தேசிய அடையாள அட்டையின்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்களிப்பதற்கு அடையாள அட்டை அவசியமானதாக காணப்படுகின்றது. இந்த நிலையில் என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளீர்கள்? பதில்: ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் நீங்களா அல்லது சரத் பொன்சேகாவா பொது வேட்பாளர்?

பதில்: பொது வேட்பாளர் நான் தான். 28 கட்சிகள் என்னை ஆதரிக்கின்றன.

கேள்வி: மஹிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டனவா?

பதில்: அதில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டன.

கேள்வி: பிரபாகரனுக்கு எதிரான யுத்தத்தினை நடத்துவதற்காக சகோதரரை பாதுகாப்பு செயலாளராகவும் இராணுவ, விமானப்படை, கடற்படை தளபதிகளை புதிதாகவும் நீங்கள் நியமித்திருந்தீர்கள். இவர்களில் எவரையாவது இப்பதவிக்கு நியமித்தமை குறித்து தற்போது கவலையடைகின்றீர்களா?

பதில்: பல உபதேசங்களை வழங்கி யுத்தத்திற்கு நான் தலைமைத்துவம் வழங்கினேன்.

கேள்வி: சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படாமை குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பன சுயாதீனமானவையாக இல்லை. இந்தக் குழுக்களுக்கு பிரதமர் ஒருவரையும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரையும் அமைச்சர் தொண்டமான் ஒருவரையும் முஸ்லிம் காங்கிரஸ் ஒருவரையும் நியமிக்கும் நிலை காணப்படுகிறது. இவ்வாறாயின் இதில் எத்தகைய சுயாதீனம் காணப்படுகின்றது. எனவே, சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பவை சுயாதீனமாக அமைய வேண்டும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிப்பதற்கு விசேட குழு- ஜனாதிபதி தகவல்;"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates