இழுவைப் படகு மூலம் தொழில் செய்யும் கடற்தொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்!
இழுவைப் படகில் சென்று கடலில் தொழில் செய்வதை மட்டுப்படுத்துவது தொடர்பாக குருநகர் கடற்தொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தினால் குருநகர் சென். ஜோன் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று கலந்து கொண்டு கடற்தொழிலாளர்களின் பலதரப்பட்ட அபிப்பிராயங்களை கேட்டறிந்தார்.
நேற்று 31ம் திகதி நடைபெற்ற யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்தில் இழுவைப் படகுகளை தொழிலுக்காக மட்டுப்படுத்தவென மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பற்றி இழுவைப் படகில் தொழில் செய்யும் கடற்தொழிலாளர்களின் அபிப்பிராயங்களை திரட்டி பெரும்பான்மையோரின் முடிவுற்கிணங்க நடைமுறைச் சாத்தியமான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு வசதியாக அமைச்சர் இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
சுமார் 300க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் அப்பகுதிக்கான ஜே 68 மற்றும் ஜே 69 கிராமசேவகர் பிரிவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதிக்குப் பொறுப்பான படைத்தரப்பின் அதிகாரிகள் கடற்தொழிலாளர்கள் அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கரையூர் குருநகர் நாவாந்துறை கொழும்புத்துறைப் பகுதிகளைப் பொறுத்தவரை இழுவைப் படகின் மூலமான கடற்தொழில் மட்டுப்படுத்தப்படுமாயின் அத்தொழிலை தற்சமயம் மேற்கொண்டு வரும் 500க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிப்பை எதிர்நோக்க வேண்டி வரும் என்று அங்கு கருத்து தெரிவித்த கடற்தொழிலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றிக் குறிப்பிட்ட மற்றொரு தொழிலாளி, சிறுபடகில் தொழில் செய்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடாத தினமான சனிக்கிழமையன்று குடாக்கடலிலும் வாரத்தின் ஏனைய இரு தினங்களில் குடாக்கடலுக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் இழுவைப் படகில் தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமாயின் அது அத்தொழிலை மேற்கொள்வோருக்கு சாதகமாக அமையும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
அனைத்து தொழிலாளர்களின் கருத்தை செவிமடுத்த அமைச்சர் அவர்கள் அனைவருக்கும் பாதிப்பில்லாத வகையில் தொழிலை முன்னெடுப்பதற்கு வசதியாக கடற்தொழில் தொடர்பான வரையறைகளை கொண்ட முடிவொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் குருநகர் மீன்சந்தைக்கு இறங்கு துறையில் இருந்து மீனை சந்தைக்கு கொண்டு வருவதில் தடையாகவுள்ள பாதுகாப்பு கம்பி வேலியால் கடற்தொழிலாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்த முறைப்பாட்பாட்டை அடுத்து அப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி சகிதம் அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அக்கம்பி வேலியால் படகில் உள்ள மீன்களை கரையேற்றுவதில் உள்ள சிரமங்களை பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கியதை அடுத்து அக்கம்பி வேலியை சற்று விலக்கிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.
0 Response to "இழுவைப் படகு மூலம் தொழில் செய்யும் கடற்தொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்!"
แสดงความคิดเห็น