செய்தியறிக்கை
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் |
பாலஸ்தீன அதிபருடன் ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களை அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அபுதாபியில் சந்தித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இது இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என மூத்த பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை உருவாக்குவதை இஸ்ரேல் நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் மீண்டும் நடக்கும் என்ற தங்களது நிலைப்பாட்டை பாலஸ்தீன அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூவை சந்திக்க ஜெருசேலம் சென்றுள்ளார் அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன்.
ஆப்கான் அதிபர் தேர்தல் வேட்பாளர் வெளியேறலாம் என ஊகம்
அப்துல்லா அப்துல்லா |
ஆப்கான் அதிபர் தேர்தலின் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா அடுத்த வாரம் நடைபெறவுள்ள இறுதிக்கட்ட வாக்கெடுப்பிலிருந்து வெளியேறக்கூடும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு முன்பதாக தேர்தல் அதிகாரிகள் பலரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அப்துல்லாஹ் கோரி வருகின்றார். எனினும் இதற்கு சம்மதிக்க அதிபர் ஹமீட் கர்சாய் மறுத்துவிட்டார்.
இதனால் போட்டியிலிருந்து வெளியேறுமாறு அப்துல்லாஹ்வின் ஆலோசகர்கள் அவரைக் கேட்டு வருகின்றனர்.
ஆனால் தனது இறுதி தீர்மானத்தை அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்றே வெளியி்ட முடியுமென்று அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.
கர்சாய் அதிபராக அறிவிக்கப்பட்ட கடந்த அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்புக்களில் பெருமளவு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தொடரும் மோதல்
பாகிஸ்தான் இராணுவத்தினர் |
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற சாலையோர குண்டுத்தாக்குதலில் குறைந்தப்பட்சம் 7 துணை இராணுவ படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைபர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதனிடையே ஒரக்சாய் பழங்குடியின பகுதியில் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தப்பட்சம் 12 இஸ்லாமிய ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் கூறியுள்ளது.
தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் இராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வரும் நிலையில் இந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
வங்கதேசத்தில் ஆடை நிறுவன பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்று (கோப்புப் படம்) |
வங்கதேசத்தில் ஊதியம் கொடுக்கப்படாமல் இருப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஆடை நிறுவன பணியாளர்கள் மீது பொலிஸார் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியதில் குறைந்தப்பட்சம் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் டாக்கா அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் மீது செங்கற்கள் மற்றும் கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் இதனை தொடர்ந்தே பொலிஸார் பதில் தாக்குதல் நடத்த நேரிட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வங்கதேச ஆடை நிறுவனங்கள் மற்ற ஏற்றுமதி செய்யும் நாடுகளான இந்தியா மற்றும் வியட்நாம் போன்வற்றோடு போட்டி போடுவதற்காக ஊதியத்தை குறைப்பதில் ஈடுப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி |
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையில் அவரைப் பற்றிய சிறப்பு செய்திக் கண்ணோட்டத்தை தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்.
25 ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 31 ஆம் தேதியன்று புதுடெல்லியில் தனது வீட்டில் இருந்து அலுவலகம் சென்று கொண்டிருந்த போது இந்திரா காந்தி தனது மெய்காப்பாளர்களால் புது டெல்லயில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி 1966 இல் இருந்து 1977 வரையிலும் பிறகு 1980 இல் இருந்து 1984 வரையிலும் இந்தியாவின் பிரதமர் பதிவியை வகித்தவர்.
1971 இல் வங்கதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கிய போது இந்திரா காந்தியின் புகழ் உச்சத்துக்கு சென்றது... 1974 இல் இந்தியாவின் முதல் அணு சோதனையும் இந்திரா காந்தியின் தலைமையில் தான் நடைபெற்றது..
ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அவர் கொண்டு வந்த அவசர நிலை அவரின் புகழுக்கு பெறும் களங்கமாக இன்று வரை இருக்கிறது.
இது குறித்த சிறப்பு பெட்டகத்தையும், சமகால வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா அவர்களின் பேட்டியையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
திருப்பதி கோவிலில் இலங்கை ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதி |
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சனிக்கிழமையன்று திருப்பதி சென்று அங்குள்ள வெங்கடாசலபதி கோவிலில் வழிபட்டார். அவருடன் அவரது மனைவியும் வேறு சில உறவினர்களும் சென்றதாக செய்திகள் கூறுகின்றன.
நேபாளத்தில் ஆலயதரிசனத்தை முடித்துக்கொண்டு, காத்மாண்டுவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ராஜபக்சே ஆந்திர மாநிலத்திலுள்ள ரேணிகுண்டா வந்தார். பின்னர் கார் மூலம் அங்கிருந்து திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சனிக்கிழமை பிற்பகலில் திருப்பதி கோவிலில் வெங்கடாசலபதியை அவர் தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். வழிபாடு முடிந்து சனிக்கிழமை மாலை கொழும்பு திரும்பினார் இலங்கை அதிபர்.
ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கார் செல்லும் வழி நெடுகிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு திருப்பதி கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிப்பது தமிழர்களை வேதனைப்படுத்துவதாக உள்ளது, இது தமிழர்களை இழிவுப்படுத்தும் செயல் என்றும் கூறி இதற்காக மத்திய அரசை வன்மையாகக் தான் வன்மையாகக் கண்டிப்பதாக. மதிமுக பொதுச்செயலர் வைகோ இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.
ராஜபக்சேவின் திருப்பதி வருகையைக் கண்டித்து தமிழ் ஆர்வலர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா முகாம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை
மாணவர்கள் |
இலங்கையின் இடம்பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களை துரித மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் அரசாங்கம் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வருகின்றது.
டிசம்பர் மாதம் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள முக்கியத்துவம் மிக்க கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பத்திர பரீட்சைக்குத் தயாராகி வந்த வவுனியா முகாம்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாக வவுனியா தெற்கு வலயக் கல்வி்ப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்,ஏ.ஒஸ்வெல்ட் கூறுகின்றார்.
இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் சொந்த இடங்களுக்குப் போய்விட வேண்டும் என்ற பரபரப்பான சூழ்நிலையில் தற்போது இருக்கின்றார்கள். இதனால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் டிசம்பர் மாதப் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குழம்பியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பிரதேசத்திற்கு மீள்குடியேற்றத்திற்காக வந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வசதிகள் குறி்த்து கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.
இதபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น