ஜெவுக்கு ஒரு நீதி, தினகரனுக்கு ஒரு நீதியா?-திமுக
சென்னை: கொடநாட்டில் விதிகளை மீறி பங்களா கட்டியுள்ள ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி, நீதிபதி தினகரனுக்கு ஒரு நீதியா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
நில ஆக்கிரமிப்பு சர்ச்சையில் சிக்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனின் பெயரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான பரிந்துரைப் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், பட்டியலில் இருந்த மற்ற நான்கு நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மட்டும்தான் காலேஜியம் கூறியுள்ளது. மற்றபடி, நீதிபதி பி.டி.தினகரன் குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
இதை வைத்து அவரது பெயர் நீக்கப்பட்டதாக கூற முடியாது, நிச்சயம் கூற முடியாது என்றார்.
முன்னதாக பி.டி.தினகரனுடன் சேர்ந்து பட்டியலில் இடம் பெற்றிருந்த மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் , பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்க காலேஜியம் அனுமதி அளித்தது நினைவிருக்கலாம்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்து வந்த திமுக தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது.
அதன் நாளிதழான முரசொலியில் இரு தினங்களுக்கு முன் முதல் பக்கத்தில் அரை பக்க அளவுக்கு வெளிவந்துள்ள கார்ட்டூனில், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டையும், நீதிபதி தினகரன் தரப்பு திருவள்ளூரில் கையகப்படுத்தியுள்ள நிலத்தையும் குறிப்பிட்டு, ''இரண்டு வகையான நியாயமா?.., இது தான் சம நீதியா?'' என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் சாஸ்திரங்களில் சூத்திரர்களுக்கும் பிராமணர்களுக்கும் இரண்டு வகையான நீதி கடைபிடிக்கப்படுவதாக பாடிய பாரதியின் வரிகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
0 Response to "ஜெவுக்கு ஒரு நீதி, தினகரனுக்கு ஒரு நீதியா?-திமுக"
แสดงความคิดเห็น