திருப்பதியைத் தாக்கும் திட்டம் அம்பலம் : 4 தீவிரவாதிகள் கைது
திருப்பதியில் உள்ள லொட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த நான்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிடிபட்டனர். திருப்பதி கோவிலில் பெரும் நாசவேலைக்கு அவர்கள் திட்டமிட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தீவிரவாதிகளின் 'ஹிட் லிஸ்ட்'டில் இருப்பதால் கோவிலுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கோவில் மட்டுமல்லாமல் கோவிலைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பதி கோவிலில் நாசவேலை ஈடுபடுவதற்காக 4 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதன் தொடர்ச்சியாக பெங்களூர் பொலிசார் சில தகவல்களை ஆந்திரா பொலிசாருக்கு தெரிவித்து உஷார்படுத்தினர்.
அதன் பேரில் ஆந்திராவைச் சேர்ந்த தீவிரவாதிகள் எதிர்ப்புப்படை பொலிசார் நேற்றிரவு திருப்பதியில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். திருப்பதி மங்கலம் ரோட்டில் உள்ள ஒரு லொட்ஜை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
ஆவணங்கள் மீட்பு
அப்போது சந்தேகப்படும்படி தங்கி இருந்த 4 பேரை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் தீவிர சோதனையிட்டு ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
பிடிபட்ட 4 பேரிடம் முதல் கட்ட விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
ஜாகீர், இப்ராகிம் ஆகிய இருவரின் பெயரை மட்டும் தெரிவித்த பொலிசார் ஏனைய இருவரையும் பற்றிக் குறிப்பிட மறுத்து விட்டனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளான இவர்கள் பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு தேவையான தகவல்களைத் திரட்டிக் கொடுக்கும் உளவாளிகளாக செயல்பட்டு வந்தது தெரிந்தது.
திருப்பதி, திருமலை, காளஹஸ்தி நகர வரை படங்கள், முக்கிய இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பூஜை நடக்கும் நேரங்கள் ஆகிய குறிப்புகளை அவர்கள் மிக விரிவாக எழுதி வைத்திருந்தனர்.
மும்பையைப் போன்று திருப்பதியில் பெரும் தாக்குதல் நடத்தி நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டியிருந்ததும் தெரிய வந்தது.
பிடிபட்ட 4 தீவிரவாதிகளும் திருப்பதியில் இருந்து ஹைதராபாத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ரகசிய இடத்தில் அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து திருப்பதி கோவில் மற்றும் வளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
0 Response to "திருப்பதியைத் தாக்கும் திட்டம் அம்பலம் : 4 தீவிரவாதிகள் கைது"
แสดงความคิดเห็น