சிலிங்கோ நிதி நிறுவன மோசடியால் மக்கள் பாதிப்பு: மாநாட்டில் தகவல்
சிலிங்கோ புரொபிட் ஷெயாரிங் நிதி நிறுவனத்தின் காத்தான்குடி கிளையில் முதலீடு செய்த 1990 பேர் தங்கள் முதலீட்டை மீளப் பெற முடியாத நிலையில் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகக் காத்தான்குடி பிரதேச பாதிப்புக்கு உள்ளானோர் அமைப்புத் தலைவர் டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபீர் கூறுகின்றார்.
நேற்று மாலை காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்,
"குறித்த நிதி நிறுவனத்தில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 1990 பேரும் நிலையான வைப்பிலும், சேமிப்பிலும் 13 கோடி 30 லட்சம் ரூபாவை வைப்புச் செய்ததாகவும், இதனை மீளப் பெற முடியாமல் அவர்கள் தவிப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.
"அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபை வழங்கிய ஹலால் சான்றிதழை, உறுதி மொழியை நம்பியே எமது பிரதேச மக்கள் இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள்.
பொலிசில் இது தொடர்பாக முறைப்பாடு செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை. வங்கிக் கிளை முகாமையாளர் கூட கையை விரித்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.
அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மூலம் ஜனாதிபதியின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றோம். மத்திய வங்கி ஆளுனரைச் சந்தித்து முறையிட முயற்சி எடுத்தாலும் அதுவும் பலனளிக்கவில்லை" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில், இந் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிப்புக்குள்ளான பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு தமது இழப்புகள் குறித்து கவலை வெளியிட்டனர். இம்மாநாட்டுக்கு முன்னதாக பாதிப்புக்கு உள்ளானோர் தமக்கு நியாயம் வழங்கக் கோரி பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் .
0 Response to "சிலிங்கோ நிதி நிறுவன மோசடியால் மக்கள் பாதிப்பு: மாநாட்டில் தகவல்"
แสดงความคิดเห็น