jkr

சமூகமும் மருத்துவமனையும் இணைந்து செயற்பட வேண்டும் வவுனியா. மகப்பேற்று மருத்துவ நிபுணர்


ஒரு பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையானது, அந்தப் பிரதேசத்தின் பொதுச் சொத்தாகும். எனவே வைத்தியசாலையும் அந்தப் பிரதேசத்து சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்" என்று வவுனியா பொது வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் என்.சரவணபவ தெரிவித்தார்.

வவுனியா வர்த்தகர் சங்கம், வவுனியா பொது மருத்துவமனையின் மகப்பேற்று பிரிவின் வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதியுதவி வழங்கிய வைபவத்தில் கலந்து கொண்டு டாக்டர் என்.சரவணபவ உரையாற்றினார்.

வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் பி.எஸ்.அப்துல்லா தலைமையில், சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.

வவுனியா மகப்பேற்று பிரிவுக்கு நிதியுதவியாக வவுனியா வர்த்தகர்கள் ஒன்றிணைந்து வழங்கிய ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாவுக்கான காசோலையை வர்த்தகர் சங்கத்தின் சார்பாக இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் மருத்துவ நிபுணர் டாக்டர் சரவணபவவிடம் வழங்கினார்.

அங்கு உரையாற்றிய டாக்டர் சரவணபவ மேலும் தெரிவித்ததாவது:

"வவுனியா பொது வைத்தியசாலையில் மருத்துவர்கள் போதிய வசதிகளில்லாத நிலையிலேயே பணியாற்றுகின்றார்கள். இங்கு ஆளணி பற்றாக்குறையும் நிலவுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் மருத்துவர்கள் தமது பணிகளைச் செவ்வனே செய்வது என்பது கடினமான காரியமாகும்.

அவ்வாறு பணிசெய்யும் போது வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.

மருத்துவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடினால், அந்த உதவி வந்து சேர்வதற்குக் குறைந்தது இரண்டு வருடங்களாவது எடுக்கும்.

இவ்வாறான கால தாமதத்தினால் ஏற்படுகின்ற பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகவே வர்த்தகர் சங்கத்தின் உதவியை நாடி, மகப்பேற்று மருத்துவ பிரிவில் மருத்துவர்களுக்கான அடிப்படை வசதியான கழிப்பறை உட்பட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம்.

வைத்தியசாலை என்பது பொதுமக்களுக்கு இன்றியமையாத சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஊடாக சமூகத்தின் ஊடாக இந்த நிறுவனமும் பரஸ்பரம் உரிமையோடு ஒத்துழைத்து நன்மையடைய வேண்டும்.

இதுவே ஆரோக்கியமான நிலையாகும். இத்தகைய ஒரு நிலையை உருவாக்குவதற்கு சமூகத்தில் உள்ள முக்கியஸ்தர்களும், வர்த்தகர் சங்கம் போன்ற பொது அமைப்புக்களும் முன்வர வேண்டும்."

இவ்வாறு டாக்டர் என்.சரவணபவ தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சமூகமும் மருத்துவமனையும் இணைந்து செயற்பட வேண்டும் வவுனியா. மகப்பேற்று மருத்துவ நிபுணர்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates