jkr

செய்தியறிக்கை

நீங்கள் எப்பொழுதும் எனது இணையதளத்தில் பி பி சி தமிழோசையை கேட்கலாம்
ஆப்கானில் பிரிட்டிஷ் துருப்பினர்
ஆப்கானில் பிரிட்டிஷ் துருப்பினர்

ஆப்கானுக்கு மேலும் 500 பிரிட்டிஷ் துருப்பினர்

ஆப்கானிஸ்தானுக்கு பிரிட்டிஷ் துருப்பினர் கூடுதலாக ஐநூறு பேர் அனுப்பப்படவிருப்பதை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் உறுதிசெய்துள்ளார்.

கூடுதல் படையினரும் சேரும்போது ஆப்கானில் உள்ள மொத்த பிரிட்டிஷ் துருப்பினரின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து ஐநூறாக உயரும்.

நிறைய நிபந்தனைகளுடனேயே புதிதாக படையினர் அனுப்பப்படுகிறார்கள் என்று லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் பிரதமர் பிரவுன் தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் உள்ள பிற நாடுகளும் தங்களுடைய பங்குக்கு கூடுதல் படையினரை வழங்க விருப்பம் தெரிவித்தள்ளன என்பதும் ஆப்கானிய அரசாங்கம் கூடுதலானோரை படையில் சேர்த்து, பயிற்சி அளித்து, பணியில் ஈடுபடுத்த உறுதி வழங்கியுள்ளது என்பதும் இந்த நிபந்தனைகளில் அடங்கும்.

ஆப்கானில் அதிக துருப்பினரைக் கொண்ட நேட்டோ நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் பிரிட்டன் உள்ளது.


நூறு கோடிக்கும் அதிகமானோர் பசியால் வாடுவதாக ஐ. நா கூறுகிறது

சோமாலியாவில் உணவுப் பங்கீடு
சோமாலியாவில் உணவுப் பங்கீடு
உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்டோர் பசியால் வாடுவதாக ஐ. நாவின் புதிய அறிக்கை கூறுகிறது.

ஐ. நாவின் உணவு நிறுவனமும், உலக உணவுத் திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய பொருளாதார சிக்கல் துவங்கும்வரை போஷாக்கின்மையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது உணவுப் பொருட்கள் விலையேறிவிட்டதாகவும், வருமானம் குறைந்து வருவதாகும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார சுருக்க நிலை பெரிய அளவில் இருப்பதால், உள்ளூர் நாணய மதிப்பை குறைப்பது, வெளிநாட்டில் இருக்கும் ஊழியர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி போன்ற பாரம்பரிய முறைகள் பயனளிக்கவில்லை என்று ஐ. நா கூறியுள்ளது.

அதே நேரம் சர்வதேச உதவி நிறுவனங்கள் மற்றும் முன்னணி ஆய்வு மையங்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு பட்டினியைக் குறைக்க சிறந்த வழி பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதுதான் என்று கண்டறிந்துள்ளது.

குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் என்ற வருடாந்திர ஆய்வு, பெண்களுக்கு கூடுதல் கல்வியும், கூடுதல் வேலை வாய்ப்புக்களும் கிடைத்தால் அது குழந்தைகளுக்கு அதிக அளவு போஷாக்கை அளிக்க பெண்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று கூறியுள்ளது.


இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம்

2011ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதியாட்டம் இந்தியாவின் மும்பை நகரில் நடக்கும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அவ்வருடத்தின் உலகக் கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து நடத்துகின்றன.

இந்தப் பந்தயத்தில் இருபத்து ஒன்பது ஆட்டங்கள் இந்தியாவின் எட்டு இடங்களில் நடக்கவுள்ளன என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

ஓர் அரையிறுதி ஆட்டம் மொஹாலியில் நடக்கவுள்ளது.

அடுத்த அரையிறுதி ஆட்டம் நடக்கவுள்ள இலங்கையில், இந்தப் பந்தயத்தின் 12 ஆட்டங்கள் நடக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இப்பந்தயத்தின் எட்டு ஆட்டங்கள் நடக்கும்.

பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தான் இப்பந்தயத்தை மற்ற மூன்று நாடுகளுடன் இணைந்து நடத்துவதிலிருந்து சர்வதேச கிரிக்ககெட் நிர்வாக சபையினால் விலக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.


இராக் தங்க நகைக்கடையில் கொள்ளை

சம்பவ இடம்
சம்பவ இடம்
இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு தங்க நகைக் கடையில் நடைபெற்ற ஒரு திருட்டுச் சம்வத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

நகையை கொள்ளையடிக்க வந்தவர்கள், கண்மூடித்தனமாக சுட்டதாகவும், கையெறி குண்டுகளை வீசி எறிந்ததாகவும் காவல் துறை கூறுகிறது.

இராக்கில் ஆயுதக் குற்றங்கள் அதிகரிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாக்தாத்தில் கடந்த ஜூலையில் ஒரு வங்கியில் இருந்து சுமார் 7 மில்லியன் டாலர்கள் பணம் கொள்ளையடித்து செல்லப்பட்டிருந்தமை இதில் குறிப்பிடத்தக்கது.



'இலங்கை முகாம் வாசிகள் 58 000 பேர் அடுத்த வாரம் விடுதலை'- தமிழக எம்பிக்களிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதி

இலங்கை ஜனாதிபதியுடன் தமிழக எம்பிக்கள்
இலங்கை ஜனாதிபதியுடன் தமிழக எம்பிக்கள்

இலங்கையில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களில் ஐம்பத்தெட்டாயிரம் பேர், அடுத்த 15 நாட்களுக்குள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் கடந்த 10 ஆம் திகதி இலங்கை சென்றனர். அங்குள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் உள்பட பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்கள்.

இன்று மாலை சென்னை திரும்பிய அவர்களை, விமான நிலையம் வரை சென்று தமிழக முதல்வர் கருணாநிதி வரவேற்றார். பின்னர், இலங்கைப் பயணம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்கள். அத்துடன், அங்குள்ள நிலவரம் குறித்து முதல்வரிடம் நேரிலும் விளக்கிக் கூறினார்கள்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,
முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களில், முதல் கட்டமாக ஐம்பத்தெட்டாயிரம் பேர் அடுத்த 15 தினங்களுக்குள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும், அந்தப் பணிகள் நாளை முதல் துவங்கும் என்றும் எம்.பி.க்களிடம் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

'முகாம்களில் குறை இருப்பது உண்மை'

முகாம்
முகாம்
முகாம்களில் சில குறைபாடுகள் இருப்பது உண்மை என்று எம்.பி.க்கள் தன்னிடம் தெரிவித்திருப்பதாகவும் கருணாநிதி கூறினார்.

போர் நடைபெற்ற காலத்தில், முகாம்களில் இருந்த தமிழ் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்ததாகவும், அனைவரும் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும் எம்.பி.க்கள் தன்னிடம் கூறியதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது தொடர்பாக இலங்கை ஜனாதிபதியிடம் எம்.பி.க்கள் குழு எடுத்துரைத்தபோது, அதற்குத் தீர்வு காண இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பை நாடியிருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

எம்.பி.க்கள், குழு முதல்வரிடம் அளித்த அறிக்கையில், தங்களது சுற்றுப்பயண விவரங்களை முழுமையாகத் தெரிவித்துள்ளது. முகாம்களில் உள்ள மக்களுக்கு குடிநீர், பால் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்கவில்லை என்றும், மாற்று ஆடைகூட இல்லாமல் ஒரே ஆடையில் பல நாட்களாக இருப்பதைக் காண முடிந்ததாகவும் எம்.பி.க்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் விநியோகிக்கும் இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்ததாகவும் எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.

தங்களை சொந்த ஊர்களுக்கு விரைவில் திருப்பி அனுப்ப உதவுமாறு முகாம்களில் உள்ள மக்கள் கெஞ்சினார்கள் என்றும், அவர்களைத் திருப்பி அனுப்ப இலங்கை அரசு இரண்டு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கும் என்று தோன்றுவதாகவும் அந்த அறிக்கையில் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரத்தை அறிமுகப்படுத்த அனுமதி

இந்தியாவில் முதல்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுத் தாவரம் ஒன்றை அறிமுகப்படுத்த மரபணுத் தாவர ஒழுங்கு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய வகை கத்தரிக்காய் ஒன்றை இந்தியாவின் மிகப் பெரிய தாவர ஆராய்ச்சி நிறுவனமான மஹீகோ உருவாக்கியுள்ளது. பூச்சிகளால் அதிகம் பாதிப்பு அடையாமல் இருக்கின்ற எதிர்ப்பு சக்தி இந்த புதிய வகை கத்தரிக்காயில் உள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளை எதிர்க்கும் குழுக்கள், தற்போது அனுமதி வழங்கப்பட்டிருப்பதை எதிர்க்கின்றன. இத்தகைய காய்கறியை உண்ணுவதால் ஏற்படக்கூடிய மோசமான உடல் நலப் பிரச்சினைகளுக்கு போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலும் இந்தத் தாவரத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்திச் செடி வியாபார ரீதியில் பயிராகிறது.


கொழும்பில் ஆசிய ஒத்துழைப்பு மாநாடு


இலங்கையின் தலைநகர் கொழும்பில் இரு நாள் மாநாடு ஒன்றுக்காக ஆசியாவின் 31 நாடுகளின் அமைச்சர்கள் கூடியுள்ளார்கள்.

''ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை'' என்ற தொனிப்பொருளின் கீழ் கூடியுள்ள அவர்கள், உலக பொருளாதார நெருக்கடி குறித்து தமது கவனத்தை குவிக்கவுள்ளனர்.

இந்தக் குழு 2002 ஆம் ஆண்டு முன்னாள் தாய் பிரதமர் தக்ஷின் சின்னவத்ராவின் யோசனையில் உதயமான போது, இதனால் பயனேதும் கிடையாது, இது காசுக்கு வந்த கேடு, வெறுமனே கதைக்க மாத்திரமே அங்கு முடியும் என்று சிலரால் நிராகரிக்கப்பட்டது.

ஆனால், ரஷ்யா, சீனா, ஜப்பான், இரான் மற்றும் பிராந்திய போட்டியாளர்களான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றையும் உறுப்பினர்களாக கொண்ட இந்த குழுவை புறக்கணிக்க முடியாது.

தெற்காசியா மற்றும் வளைகுடா ஆகிய பிராந்தியங்களில் உள்ள ஏனைய குழுக்களின் பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் பிரதிநிதிகளாக உள்ளனர்.

சில நாடுகள் இந்த சந்திப்புக்கு தமது வெளியுறவு அமைச்சர்களை அனுப்பியுள்ளன, வேறு சில அதனிலும் அதிகார மட்டத்தில் குறைந்த இடத்தில் இருப்பவர்களை அனுப்பியுள்ளன.

ஒன்றுக்கொன்று எதிரான அரசியல் இலக்குகளுடன் கூடிய உறுப்பினர்களை கொண்ட இந்த ஆசிய ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகள், பொருளாதார விடயங்களை ஆராய்வது முக்கியமானதுதான்.

இந்தச் சந்திப்பின் முக்கிய ஆய்வுப்பொருளாக உலக பொருளாதார மீட்சி என்ற கருப்பொருள் திகழ்ந்தது.

இந்த சந்திப்பை நடத்துவதில் இலங்கை மகிழ்ச்சியடைகிறது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் இலங்கையின் மிகவும் நெருக்கமான நாடுகள் என்பதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் போர்க்கால நடவடிக்கைகள் குறித்து கண்டித்து கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்தை தோற்கடிக்க உதவியவையும் கூட.

மேற்குலகுடனான தனது உறவுகள் சிக்கலுக்கு உள்ளாகுவது அதிகரித்து வரும் நிலையில், தனது ஆசிய கூட்டாளிகளுடன் இலங்கை நெருக்கத்தை அதிகரிக்க விழைகிறது.


மட்டக்களப்பில் வறட்சி

வற்றிய குளத்தில் தரைதட்டிய தோணி
வற்றிய குளத்தில் தரைதட்டிய தோணி
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பருவ மழை பொய்த்ததால் தொடரும் வறட்சி நிலை காரணமாக வேளாண் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொது மக்கள் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளையும் எதிர்நோக்குவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் குடிநீர் தேடி பல் வேறு இடங்களுக்கு செல்வதாக கூறப்படுகின்றது.

உள்ளுராட்சி சபைகளினால் அந்தக் கிராமங்களில் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும், அது மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை என்று பலரும் கூறுகின்றார்கள்.

விவசாயத்தைப் பொறுத்த வரை எதிர்வரும் பெரும்போகத்தில் மழையை நம்பி ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் விவசாயச் செய்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் மழையின்மையினால் இதுவரை உழவு வேலைகளைக் கூட உரிய நேரத்தில் மேற்கொள்ள முடியாதிருப்பதாக விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates