ஆறு வருடங்களில் நாடு சீனி உற்பத்தியில் தன்னிறைவடையும் : அமைச்சர் ரத்நாயக்க

ஆறு வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச்செய்ய முடியும் என அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.
கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 25 வருடங்கள் பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்,
நாட்டின் கரும்புச் செய்கையின் மேம்பாட்டுக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரும்புச் செய்கையில் சிறந்த அறுவடையைப் பெறுவதற்கான நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஒன்றை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
தற்போது நாட்டில் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கூடுதலான உற்பத்தி மொனராகலை மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றது.
கரும்பு உற்பத்தியை மேலும் நான்கு மாவட்டங்களில் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அம்பாறை, பதுளை, அநுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கரும்புச் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களில் 5 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
கரும்புச் செய்கைக்கு ஏற்ற மண்வளம் கொண்ட வடக்கின் கிளிநொச்சி பகுதியும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, கரும்புச் செய்கையின் இடைக்கால உற்பத்திகளான எத்தனோல் எரிபொருள், உரம் மற்றும் விலங்கின உணவுப் பொருள் உற்பத்திகளை அதிகரிக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
கரும்பு உற்பத்திக்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் நவீன உபகரணங்களையும் வெளிநாட்டு பயிர் நோய் தடுப்பு நடவடிக்கையையும் அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாறான திட்டத்தின் மூலம் இன்னும் 6 வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யலாம்" என்றார்.







0 Response to "ஆறு வருடங்களில் நாடு சீனி உற்பத்தியில் தன்னிறைவடையும் : அமைச்சர் ரத்நாயக்க"
แสดงความคิดเห็น