செய்தியரங்கம்
| | |
| மனிக் பார்ம் |
இடைத்தங்கல் முகாமில் விடுவிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் செல்ல வழியின்றி அல்லல்
இலங்கையின் வடக்கே வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியில் இருந்து கர்ப்பிணி தாய்மார்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் ஒரு தொகுதியினர் சனிக்கிழமை மாலை வவுனியா பேரூந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இவர்களை வவுனியா நகரசபை மண்டபத்தில் தங்க வைத்து உணவு மற்றும் அத்தியாவசிய வகதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், நகரசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சொந்த இடங்களுக்கோ அல்லது உறவினர்களின் வீடுகளுக்கோ உடனடியாகச் செல்ல முடியாதுள்ள இவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை தாங்கள் செய்யப்போவதாக நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதனும், முகாம்களை விட்டு வந்துள்ளவர்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லும் வரையில் அவர்களை பராமரிக்கப்போவதாக நகரசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் தெரிவித்துள்ளார்கள்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கையின் மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளுக்கு உதவிகள்
| | |
| உதவிகள் வழங்கப்படுகின்றன |
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தின் கீழ் சனிக்கிழமையன்று முதற்கட்டமாக பெண்கள் உட்பட பலருக்கு சுய தொழில் வாய்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்க உதவித்திட்டத்தின் கீழ் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், தையல், விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உட்பட பல்வேறு வகையிலான சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இது தொடர்பான வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற இவ்வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தமது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன் வைத்ததாக கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு மற்றும் யு.எஸ்.எயிட் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக புகார்
| | |
| மீனவர்கள் |
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிவடைந்த பின்னர், திருகோணமலை கடற் பிரதேசத்தில் மீன்பிடிக்க அனுமதி
வழங்கப்பட்ட போதிலும், உட்துறைமுக கடற் பகுதியில் இன்னும்
மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படாத நிலையில் தாம் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதாக உட்துறைமுக பகுதியைச் சேர்ந்த கடலரசி மீனவர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு தமக்கான நிவாரண உதவிகளையாவது வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் நவரட்ணராஜா அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையினை தான் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை குறித்து பரிசீலனை - இந்திய உள்துறை அமைச்சர்
| | |
| இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் |
தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந் நிலையில், தமிழக முதல்வரை சென்னையில் சந்தித்துப் பேசினார் சிதம்பரம்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து முதல்வருடன் கலுந்துரையாடியதாக தெரிவித்தார்.
இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள் குடியேற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா ஆகியோருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிதம்பரம் தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.







0 Response to "செய்தியரங்கம்"
แสดงความคิดเห็น