கிழக்கு மாகாணத்திலுள்ள 250 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: பிரதிக் கல்வி அமைச்சர் உறுதி

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக 250 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதானந்தம் உறுதியளித்துள்ளார்.
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தத்தைச் சந்தித்து கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குதல், திருக்கோவில் மற்றும் கரடியனாறு பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்களை உருவாக்குதல் ஆகியன குறித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் விரும்பும் பட்சத்தில் மேல் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதி கல்வி அமைச்சர் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடகப் பிரிவு கூறுகின்றது.
மேலும் இந்தச் சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தில் 56 தமிழ் பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் திருக்கோவில் கல்வி வலயத்தை ஏற்படுத்துதல், மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பதுளை வீதியை மையப்படுத்தி 45 பாடசாலைகளை உள்ளடக்கிய கரடியனாறு கல்வி வலயத்தை ஏற்படுத்தல் போன்றவை குறித்தும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் பிரதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார். இதன்போது இக்கோரிக்கைகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதி அமைச்சரினால் உறுதி அளிக்கப்பட்டதாகவும் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடகப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளை, எதிர்வரும் 15ஆம் திகதியன்று அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.







0 Response to "கிழக்கு மாகாணத்திலுள்ள 250 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: பிரதிக் கல்வி அமைச்சர் உறுதி"
แสดงความคิดเห็น