jkr

செய்தியறிக்கை

செய்தியறிக்கை
அணு செறிவாக்கும் ஆலை ஒன்று
அணு செறிவாக்கும் ஆலை ஒன்று

இரானின் இரண்டாவது அணு செறிவூட்டல் ஆலையை ஆய்வாளர்கள் பார்வையிடுகின்றனர்

இரான் சமீபத்தில் அறிவித்த குவாமில் இருக்கின்ற இரண்டாவது அணு செறிவாக்கும் ஆலையை சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்கள் அக்டோபர் 25 ம் தேதி அன்று பார்வையிடுவார்கள் என்று அந்த அமைப்பின் தலைவர் மொஹமது எல்பராடி கூறியுள்ளார்.

தெஹ்ரானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கருத்து தெரிவித்த மொஹமது எல்பராடி, இரானுடனான உறவு குறித்து சாதகமாக பேசினார். தாங்கள் மோதல் நிலையில் இருந்து இப்போது ஒளிவுமறைவற்றதன்மை, புரிந்துணர்வு என்ற நிலைக்கு செல்வதாகவும், இருந்தாலும் ஒரு சில கவலைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது அணு செறிவூட்டல் ஆலை குறித்த செய்தி மேற்கத்தைய நாடுகள் இடையே இரானின் அணுசக்தி குறிக்கோள்கள் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மற்ற அணுசக்தி திட்டங்களை போல இந்த ஆலையும் அமைதி பயன்பாட்டிற்கு மட்டுமே என இரான் கூறிவருகிறது.


ஆப்கான் மோதலில் அமெரிக்க சிப்பாய்கள் பலி

அமெரிக்க சிப்பாய்கள்
அமெரிக்க சிப்பாய்கள்

ஆப்கானிஸ்தானின் கிழக்கில் ஆயுததாரிகளோடு நடந்த மோதலில் அமெரிக்க சிப்பாய்கள் எட்டு பேரும் ஆப்கானிய படையினர் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒதுக்குப்புறமான மலைப்பகுதியொன்றில் இருந்த இரண்டு சிறிய இராணுவ நிலைகள் மீது கிளர்ச்சிக்காரர்கள் ஏறத்தாழ முந்நூறு பேர் தாக்கியதாக நூரிஸ்தான் பிராந்திய தலைமை காவல் அதிகாரி கூறினார்.

இத்தாக்குதலின்போது அமெரிக்க இராணுவ விமானங்கள் குண்டுகள் வீசியதாகவும், விமானத் தாக்குதல் விடியற்காலையில் ஆரம்பித்து நெடுநேரம் தொடர்ந்தது எனவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

பொலிஸ் தலைவர் ஒருவர் உட்பட உள்ளூர் அதிகாரிகள் நிறைய பேரை ஆயுததாரிகள் பிடித்துச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு தாலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மீது 2001ல்அமெரிக்கா படையெடுப்பு மேற்கொண்டதன் பின்னர், அங்கு வெளிநாட்டுப் படையினர் தரப்பில் அதிக சேதங்களை உண்டாக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று.


ஆப்ரிக்காவுக்கு குப்பையான ஆன்மிக சிந்தனைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக போப் பெனடிக்ட் எச்சரிக்கை

போப் பெனடிக்ட்
போப் பெனடிக்ட்

ஆப்ரிக்காவில் வேறுவகையான காலனித்துவம் உருவாகி வருவதாக போப் பெனடிக்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்ரிக்க பிஷப்புகளின் மூன்று வார கால மாநாட்டை ஆரம்பித்து வைத்த போப் பெனடிக்ட் அவர்கள், அரசியல் காலனித்துவம் முடிவடைந்து விட்டாலும், வளர்ச்சியடைந்த நாடுகள் குப்பைக்கு ஈடான ஆன்மிக சிந்தனைகளை ஆப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறியுள்ளார். அத்தோடு மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ரோமின் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் விசேஷ பிரார்த்தனையுடன் இந்த மாநாட்டை போப் பெனடிக்ட் ஆரம்பித்து வைத்தார். இந்த மாநாட்டில் ஆப்ரிக்காவின் சமுதாய மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து ஆராயப்படும்.


தென்னிந்தியாவில் மழையால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆந்திராவில் மழை வெள்ளம்(கோப்புப் படம்)
ஆந்திராவில் மழை வெள்ளம்(கோப்புப் படம்)

தென்னிந்தியாவில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இதுவரையில் 200 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தாங்கள் எண்ணுவதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராமங்கள் முற்றாக அடித்து செல்லப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானவர்கள் வீடின்றி தவித்து வருகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் மட்டும் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

பெருமளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் பயிர்கள் நாசமாகியுள்ளன. மீட்கட்டமைப்புக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் தேவையாக இருக்கும் என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates