இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை சர்வதேசம் புரிந்துகொண்டுள்ளமையினால் உதவிகள் அதிகரிப்பு -அமைச்சர் சமரசிங்க பெருமிதம்;

இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து சர்வதேச சமூகம் புரிந்துணர்வுடன் உள்ளது. அதன் காரணமாகவே தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு அதிகமான உதவிகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமை ச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். சர்வதேச உதவிகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: இடம்பெயர்ந்த மக்களை சாத்தியமானளவு விரைவாக மீள்குடியேற்றும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. நிலக்கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர் அந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள். இது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டுடனேயே அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கொண்டு நடத்தும் விடயத்தில் வெளிநாட்டு உதவிகள் என்பது மிகவும் இன்றியமையாததாகும். ஆரம்பத்தில் எமக்கான சர்வதேச உதவிகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஆனால் தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு பரந்தளவிலான நிதியுதவிகள் கிடைத்துவருகின்றன.
அண்மையில் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து தயாரித்த வேலைத்திட்டத்துக்கு அமைவாக சுமார் 196 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இந்த நிதியானது நேரடியாக அரசாங்கத்துக்கு கிடைக்காவிடினும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள் ஊடாக இடம்பெயர்ந்த மக்களின் நலன்கருதி செலவழிக்கப்படும்.
இதேவேளை தற்போதைய நிலைமையில் உலக நாடுகளின் இலங்கைக்கான நிதியுதவிகள் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றது. அமெரிக்கா, கனடா, நோர்வே மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அதிகமான நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளன. இவ்வாறு சர்வதேச நாடுகளின் நிதியுதவி அதிகரித்துள்ளமையானது இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சர்வதேசம் புரிந்துகொண்டுள்ளமையையே வெளிக்காட்டுகின்றது. இந்த புரிந்துணர்வுகளின் ஊடாக தொடர்ந்து சர்வதேச நாடுகளிடம் உதவிகளை பெற்றுக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.







0 Response to "இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை சர்வதேசம் புரிந்துகொண்டுள்ளமையினால் உதவிகள் அதிகரிப்பு -அமைச்சர் சமரசிங்க பெருமிதம்;"
แสดงความคิดเห็น