சென்னையில் போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து விற்ற கனடாவைச் சேர்ந்த தமிழ் என்ஜினீயர் கைது: பல கோடி சுருட்டியது அம்பலம்

சென்னையில் போலி கிரெடிட் கார்டுகளை குடிசை தொழில் போல தயாரித்து விற்று பல கோடி சுருட்டிய என்ஜினீயர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 15-ந் தேதி அன்று அரிக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டில் தங்கி இருந்து வாலிபர் ஒருவர் குடிசைத் தொழில் போல விசேஷ மெஷின் மூலம் போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்து வருவதாக கூறினார்.
அவரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் கந்தசாமி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அய்யப்பன்தாங்கலில் உள்ள குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அங்கு தங்கி இருந்த இலங்கை வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அங்கு சோதனை போட்ட போது போலி கிரெடிட் கார்டுகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கிரெடிட் கார்டுகள் எம்பாசர் எனப்படும் விசேஷ எந்திரம் மூலம் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசிப்போர் உபயோகிக்கும் போட்டோ இல்லாத கிரெடிட் கார்டுகளின் உண்மையான டேட்டாக்களை சேகரித்து ஒரு கும்பல் இமெயில் அல்லது செல்போன் எஸ்.எம்.எஸ் மூலம் தற்போது பிடிபட்ட நபருக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். அவர் அதை வைத்து போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்துள்ளார்.
பிடிபட்ட நபரின் பெயர் உமேஷ் என்ற ஜாட்டி (வயது 25) என்பதாகும். இலங்கையைச் சேர்ந்த இவர் 7-வது வயதிலேயே தனது பெற்றோருடன் கனடாவில் குடியேறி விட்டார். கடல்சார் பொறியியல் படித்த என்ஜினீயர் ஆவார். கடந்த 3 மாதங்களாக அய்யப்பன்தாங்கலில் தங்கி இருந்து குடிசைத் தொழில் போல போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து, தனது ஏஜெண்டுகள் மூலம் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் சப்ளை செய்துள்ளார். கிரெடிட் கார்டுகள் தயாரிப்புக்கான காலியான பிளாஸ்டிக் கார்டுகளை இவர் மலேசியாவிலிருந்து வரவழைத்துள்ளார்.
இவரிடம் நடத்திய விசாரணையில் இது வரை 150 போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து, அதன் மூலம் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் பல கோடி சுருட்டி இருக்கலாம் என்று கருதுகிறோம். அது பற்றி விசாரணை நடந்து வருகிறது. அவரிடம் இருந்து 29 போலி கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு லேப்-டாப், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர் பாஸ்போர்ட்டு, டிரைவிங் லைசென்சு, வருமானவரி பான்கார்டு, போன்றவற்றையும் போலியாக தயாரித்துள்ளார். அது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. முதல் முறையாக சென்னையில் மெஷின் மூலம் போலி கிரெடிட் கார்டுகள் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவரோடு மேலும் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார். அப்போது துணை கமிஷனர் ஸ்ரீதர் உடன் இருந்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள என்ஜினீயர் உமேஷ், போலீஸ் விசாரணையின் போது ருசிகர வாக்குமூலம் கொடுத்துள்ளார். இலங்கைக்காரன் என்பதால் எனக்கு யாரும் வேலை தர மறுக்கிறார்கள். எனது பெற்றோர் கனடாவில் செல்போன் கடை வைத்துள்ளனர். அவர்கள் தயவில் நான் வாழ விரும்பவில்லை. வேலை யாரும் கொடுக்காததால்தான் நான் இந்த மோசடி தொழிலில் குதித்து விட்டேன். நான் தமிழர்களின் கிரெடிட் கார்டில் மோசடி செய்யவில்லை. கனடா, இங்கிலாந்து போன்ற நாட்டுக்காரர்களின் கிரெடிட் கார்டுகளையே போலியாக தயாரித்து மோசடி செய்துள்ளேன். இங்கிலாந்து நாட்டுக்காரன் இந்தியர்களை அடிமைகளாக வைத்து எவ்வளவோ பணத்தை சுருட்டி சென்றுள்ளான். எனவே அவர்களது கிரெடிட் கார்டுகளை போலியாக தயாரித்து மோசடி செய்வதில் தவறு இல்லை என்று நினைப்பதாக உமேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் கனடா நாட்டின் உண்மையான, பாஸ்போர்ட்டு மற்றும் விசா வைத்துள்ளார். அவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.







0 Response to "சென்னையில் போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து விற்ற கனடாவைச் சேர்ந்த தமிழ் என்ஜினீயர் கைது: பல கோடி சுருட்டியது அம்பலம்"
แสดงความคิดเห็น