யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் வருடாந்த ஆய்வு அமர்வு

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் வருடாந்த ஆய்வு அமர்வு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு வவுனியா றோயல் கார்டன் மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
வவுனியா வளாக முதல்வர் ஆர்.நந்தகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் எஸ்.வி.டி.ஜி.சமரநாயக்க கலந்து கொள்வார்.
சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.சண்முகலிங்கனும், கெளரவ விருந்தினராக வவுனியா வளாகத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.இராஜதுரையும் கலந்து கொள்ளவுள்ளனர்.
'நிலையான அபிவிருத்திக்கான வளமுகாமைத்துவம்' என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுக் கட்டுரைககள் இந்த நிகழ்வில் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன.
இளம் ஆய்வாளர்களை ஊக்குவிப்பதற்கும், யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் ஊடாக ஆய்வாளர் பரம்பரையொன்றை உருவாக்கும் நோக்கத்துடனேயே இந்த ஆய்வரங்கம் நடத்தப்படுவதாக வவுனியா வளாக முதல்வர் ஆர்.நந்தகுமாரன் தெரிவித்தார்.
இத்தகைய ஆய்வரங்கு ஒன்று கடந்த வருடம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருடாந்தம் இத்தகைய ஆய்வரங்குகளை நடத்துவதற்குத் தீரமானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நடப்பு வருடத்திற்கான இந்த ஆய்வரங்கில் கடந்த வருடத்திலும் பார்க்க அதிக அளவிலான ஆய்வாளர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்க வடிவத்தை அனுப்பி் மிகவும் ஆர்வமாகக் கலந்து கொண்டுள்ளார்கள் என்றும் வவுனியா வளாக முதல்வர் கூறினார்.
கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் ஆய்வரங்கத்திற்கென தெரிவு செய்யப்பட்டவை துறைசார்ந்த அறிஞர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டு, அவற்றில் மிகச் சிறந்தவை என தெரிவுசெய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய சஞ்சிகை ஒன்றும் மேற்படி அமர்வில் வைபவரீதியாக வெளியிடப்படவுள்ளது.
இந்த வருட ஆய்வரங்கத்திற்கென 88 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இவற்றில் 58 கட்டுரைகள் ஆய்வுக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்ப வைபவத்தையடுத்து, வெவ்வேறு குழுக்கள் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வு செய்யும் நிகழ்வு வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தின் திறந்த பல்கலைக்கழகப் பிரிவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது







0 Response to "யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் வருடாந்த ஆய்வு அமர்வு"
แสดงความคิดเห็น