jkr

வவுனியா அரச அதிபர் மீது பாலு சீற்றம் : இந்தியச் செய்திகள் தகவல்


திமுக - காங்கிரஸ் எம்.பிக்கள் குழு இலங்கை சென்றுள்ளது. தமிழர் பகுதிகளின் நிலை குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று காலை யாழ்ப்பாணம் சென்ற அக்குழுவினர் மாலையில் வவுனியா சென்றனர்.

அப்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், குழுவினருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அப்போது அவரது செயல்பாட்டால் டி.ஆர்.பாலு கோபமடைந்ததாகவும்,

"நீங்கள் யார் எங்களது விஷயங்களில் தலையிட, உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?" என்று கண்டிப்புடன் கேட்டதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தச் செய்தியில்,

"பாலு கோபமாகப் பேசியதையடுத்து, அருகில் இருந்த கனிமொழி தலையிட்டு பாலுவை அமைதிப்படுத்தினார். அவரும், மற்றவர்களும் அரச அதிபரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

தான் கோபமாகப் பேசியதை மறந்து விடுமாறு பாலு தன்னிடம் கூறியதாக சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

கண்ணீருடன் வரவேற்ற முகாம் தமிழர்கள்...

முன்னதாக டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக -காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பிக்கள் வன்னியில் உள்ள முகாம்களுக்குச் சென்று அங்குள்ள தமிழர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடம் அகதிகள் கண்ணீர் மல்க தங்களது துயர நிலை குறித்து விவரித்தனர்.

"கழிவு நீர் வசதி இல்லை, சுகாதாரமான குடிநீர் கிடையாது, ஒரு நாளைக்கு ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 லிட்டர் குடிநீர்தான் தருகிறார்கள்.

ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீரும், குளிக்கும் நீரும் தரப்படுகிறது.முகாம்களுக்கு குடிநீர் தர உதவி வரும் ஆறு வறண்டு போய்க் கிடக்கிறது. அரிசி மட்டும் அரசு தருகிறது.

ஆனால், எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களை அரசு தருவதில்லை.

மழைக்காலம் நெருங்கி வருகிறது. ஆனால் இங்கு துப்புரவு சுத்தமாக இல்லை. மழைக்காலத்தில் இந்தப் பகுதி பெரும் நரகமாகி விடும் அபாயம் உள்ளது. நோய்கள் பரவும் ஆபத்தும் அதிகமாக உள்ளது" என்றனர்.

விடுதலைப் புலிகளுக்கான எதிரான போரின் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்து அகதிகள் எதுவும் கூறவில்லையாம். முகாமில் உள்ள அனைத்துக் குறைகளையும் கொட்டித் தீர்த்தனராம்.

பெரும்பாலான அகதிகள் கண்ணீருடனேயே பேசினராம்." எங்களை விரைவாக இங்கிருந்து மீட்க முயற்சியுங்கள்" என்று திமுக-காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்களின் வருகை தங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும், அதேசமயம், தங்களுக்கு உதவினால் மேலும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் அவர்கள் கூறினர்.

மானிக் பார்ம் முகாம் வளாகத்தில் உள்ள 1 முதல் ஐந்தாவது மண்டலம் வரையிலான பகுதிகளில் திமுக - காங்கிரஸ் எம்.பி்க்கள் சென்று பார்த்தனர். ஐந்து மணி நேரம் நீடித்த இந்த ஆய்வை முழுமையாக வீடியோவில் படம் பிடித்தனர். பலர் அகதிகளின் பேச்சை குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

பின்னர் குழுவினர் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து சென்று முகாம் தமிழர்களைச் சந்தித்துப் பேசினர்.

தமிழக எம்.பிக்களைப் பார்த்த தமிழர்கள், எந்தவித அச்சமோ. பயமோ இல்லாமல் தைரியமாக அருகில் வந்து மனம் விட்டுப் பேசியதைக் காண முடிந்ததாகக் கூறப்படுகிறது" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வவுனியா அரச அதிபர் மீது பாலு சீற்றம் : இந்தியச் செய்திகள் தகவல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates