செய்தியறிக்கை
| | |
| தென்கிழக்குப் பகுதியில் மோதல் |
இரானில் இடம்பெற்ற மோதலில் 30 பேர் பலி
இரானின் தென்கிழக்குப் பகுதியில் நடந்துள்ள ஒரு தாக்குதலில் கிட்டத்தட்ட முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரானிய புரட்சிக் காவல் படையின் தளபதிகள் பலர், மூத்த பழங்குடியினத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் புரட்சிக் காவல் படையினர் பழங்குடியனத் தலைவர்கள் இடையே நடந்த கூட்டத்தை இலக்குவைத்து குண்டுதாரி ஒருவரோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களோ தாக்குதலை நடத்தியுள்ளதாக அரச ஊடகங்கள் கூறுகின்றன.
சிஸ்தான்-பலுசிஸ்தான் பிராந்தியத்தில் நீண்டகாலமாக உள்நாட்டுக் கிளர்ச்சி நீடித்துவருகிறது.
சுனி ஆயுதக் குழுவான ஜுன்துல்லா இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக இரான் கூறுகிறது.
இத்தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்கா, இத்தாக்குதலில் தமக்கு சம்பந்தம் இருப்பதாக கூறும் இரானியத் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று தெரிவித்துள்ளது.
தெற்கு வசிர்ஸ்தானில் சண்டை தொடர்கிறது
| | |
| பாகிஸ்தான் இராணுவத்தினர் |
தெற்கு வசிர்ஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல் கொய்தாவினர் வலுவாக இருக்கும் பகுதியில் இரண்டாவது நாளாக இராணுவத்தினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகின்றது.
சண்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இருதரப்பும் எதிர்தரப்புக்கு அதிக சேதம் ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றன.
இந்த பிராந்தியத்தின் வட பகுதியில் கவனத்தை செலுத்தி வரும் இராணுவம், வான் தாக்குதல் முறைகளையும் ஆர்டிலரிகளையும் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. சில இடங்களில் வீதிகளில் கூட சண்டை இடம்பெற்று வருகின்றது.
இந்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
தாஃர்பூர் பகுதியில் கடத்தப்பட்டவர்கள் விடுவிப்பு
| | |
| தாஃர்பூர் |
சூடானின் தாஃர்பூர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இரு தொண்டு அமைப்பு பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் அயர்லாந்தை சேர்ந்தவர் மற்றுமொருவர் உகாண்டாவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் அயர்லாந்தை சேர்ந்த ‘கோல்’ என்ற தொண்டு அமைப்பில் பணியாற்றி வந்தனர்.
இவர்களை விடுவிக்க பிணைய தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை என சூடான் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக பணத்தை செலவு செய்யப் போவதாக’ கோல்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டவர்கள் சூடானுக்கும் சாட்க்கும் இடையிலான எல்லை அருகே பல இடங்களில் வைக்கப்பட்டிருந்ததாக கோல் அமைப்பின் தலைவர் ஜான் ஒ ஷியா பிபிசியிடம் கூறினார்.
ஜிம்பாப்வேவில் தொடரும் ஒற்றுமறையற்ற அரசியல் போக்கு
| | |
| அதிபர் ராபர்ட் முகாபே |
ஜிம்பாப்வேவில் செவ்வாய்கிழமையன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு அதிபர் ராபர்ட் முகாபே தலைமை ஏற்பார் என அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பிரதமர் மோர்கன் ஸ்வாங்கிராயின் கட்சியினர் கூறியுள்ள போதிலும் இது நடைபெறவுள்ளது.
பிரதமர் மோர்கன் ஸ்வாங்கிராயின் இந்த முடிவு ஏமாற்று வேலை என்றும், இதனால் எவ்வித மாற்றமும் வந்து விட போவதில்லை எனவும் அதிபர் ராபர்ட் முகாபேவின் சார்பில் பேசவல்லவர் கூறினார்.
அத்தோடு சண்டே ஹெரால்ட் செய்தித்தாளிடம் பேசிய இவர், அதிபர் ராபர்ட் முகாபே நேரம் கிடைக்கும் போது அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என்றும், தற்சமயம் மாணவர்கள் மற்றும் கால்பந்து விவகாரங்களை தீர்ப்பதில் அதிபர் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறினார்.
| | |
| ஒஷன் லேடி |
கனடா அருகே கப்பலில் பிடிப்பட்டவர்கள் இலங்கையர்கள் சேர்ந்தவர்கள் என சந்தேகம்
கனடாவின் மேற்குக் கரையோரத்தை ஒட்டிய பசிஃபிக் கடல் பகுதியில் சட்டவிரோதக் குடியேறிகளை சுமந்து சென்ற ஒரு கப்பலை முற்றுகையிட்டுள்ளதாக கனடா அதிகாரிகள் கூறுகின்றனர்.
கனடாவைச் சென்றடைகிற முயற்சியில் இவர்கள் இக்கப்பலில் வந்துள்ளதாகத் தெரிகிறது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கப்பலில் இருந்த குடியேறிகள் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லையென்றாலும் இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கனடாவின் பொதுமக்களின் பாதுகாப்புத் பத்திரம் பேணல் துறையின் அமைச்சர் பீட்டர் ஃபன் லோன் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்தவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள் என்றும் இவர்கள் வந்த சம்பவம் சட்டவிரோதக் குடியேற்றத்துக்காக ஆட்களை திருட்டுத்தனமாக கொண்டுவந்த சம்பவமாகத் தெரிகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஓஷன் லேடி என்ற இந்த வர்த்தகக் கப்பல் கனடாவின் வான்கூவர் தீவுக்கு அருகே கடற்படை ரோந்துப் படகினால் வழிமறிக்கப்பட்டு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், விக்டோரியா என்ற ஊரில் உள்ள ஓக்டன் முனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்தவர்களின் உடல்நலம் பரிசோதிக்கப்படுதல் அடையாள விபரங்கள் திரட்டப்படுதல் போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
இலங்கைக்கு மேலும் 500 கோடி - இந்தியா
| | |
| தமிழக முதல்வர் கருணாநிதி |
இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்று வந்த பிறகு ஐந்தாயிரம் பேர் வரையிலானவர்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை அரசு தேவைப்பட்டால் மேலும் 500 கோடி ரூபாய் உதவியாக கொடுக்கவிருப்பதாகவும் கூறினார்.
அத்தோடு தமிழக ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை புதுதில்லியில் விவாதிக்கப்பட்டு விட்டதாகவும், இதுகுறித்த கருத்துக்களை தமிழக முதல்வரிடம் தெரிவித்து, பதில் கருத்துக்களை தான் எடுத்து செல்லவுள்ளதாகவும் அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
உலகத் தமிழ் மாநாட்டு சர்ச்சையின் பின்னணி என்ன?
| | |
| திருவள்ளுவர் |
ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்தப் போவதாக தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
ஆனால் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கு பொறுப்பான அமைப்பான IATR எனப்படும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கூட்டமைப்பின் ஒப்புதல் இதற்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் இந்த மாநாடு ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாடு என்றில்லாமல், உலக தமிழ் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் நடத்தப்படும் என்றும் தற்போது தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கான பின்னணி காரணங்கள் குறித்தும், இந்த விடயத்தில் தமிழக அரசுக்கும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கூட்டமைப்பின் தலைவர் நொபுரு கரஷிமா அவர்களுக்கும் இடையிலான கருத்து மாறுபாடுகள் குறித்தும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் இந்திய துணைத்தலைவரும் முன்னாள் துணை வேந்தருமான வி சி குழந்தைசாமி அவர்கள் தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியை இன்றைய செய்தியரங்கத்தில் நேயர்கள் கேட்கலாம்.







0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น