பைனலில் தோனி-பத்ரிநாத் அணிகள் மோதல்
சாலஞ்சர் டிராபி தொடரின் லீக் போட்டியில் வாசிம் ஜாபர், அபினவ் முகுந்த் சதம் கைகொடுக்க, தோனி தலைமையிலான இந்தியா புளூ அணி, இந்தியா “கிரீன்’ அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தது. பைனலில் பத்ரிநாத் தலைமையிலான இந்தியா “ரெட்’ அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து இரண்டு தோல்வியடைந்த ரெய்னாவின் இந்தியா “கிரீன்’ அணி, தொடரில் இருந்து வெளியேறியது.நாக்பூரில் என்.கே.பி., சால்வி சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா “புளூ’ அணி, இந்தியா “கிரீன்’ அணியை சந்தித்தது. டாஸ் வென்ற இந்தியா “புளூ’ கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
ஜாபர், முகுந்த் சதம்:
இந்தியா “புளூ’ அணிக்கு வாசிம் ஜாபர், அபினவ் முகுந்த் அசத்தல் துவக்கம் கொடுத்தனர். அபாரமாக ஆடிய தமிழக வீரர் முகுந்த், பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்த நிலையில், முகுந்த் (114) வெளியேறினார். மறுமுனையில் வாசிம் ஜாபரும் தன்பங்கிற்கு சதம் அடித்தார். 17 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உதவியுடன் 143 ரன்கள் எடுத்த நிலையில் இவர் அவுட்டானார்.
இமாலய இலக்கு:
கேப்டன் தோனியுடன் இணைந்த யூசுப் பதான், விக்ரம்ஜீத் ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். 50 ஓவரில் இந்தியா “ரெட்’ அணி 2 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. தோனி (34), யூசுப் பதான் (34) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஸ்ரீவத்சவா ஆறுதல்:
கடின இலக்கை விரட்டிய இந்தியா “கிரீன்’ அணிக்கு ஸ்ரீவத்சவா, அனிருதா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் கடந்த தமிழக வீரர் அனிருதா (63) வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ரெய்னா (1), ரகானே (29) உள்ளிட்ட யாரும் கைகொடுக்கவில்லை. தனி ஆளாக போராடிய ஸ்ரீவத்சவா சதம் (100) கடந்து ஆறுதல் அளித்தார். இந்தியா “கிரீன்’ அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. தொடரில் இருந்தும் வெளியேறியது.
லீக் சுற்றில் இரண்டு வெற்றிகள் பெற்ற தோனி அணி (8 புள்ளிகள்), இன்று நடக்கும் பைனலில் பத்ரிநாத் அணியை (5 புள்ளிகள்) சந்திக்கிறது.







0 Response to "பைனலில் தோனி-பத்ரிநாத் அணிகள் மோதல்"
แสดงความคิดเห็น