வன்னிப் படுகொலைகளை மூடிமறைக்கவா? அரசு கண்ணிவெடியகற்றும் பணிக்கு வெளிநாட்டவர்களை அனுமதிக்க மறுக்கிறது -இரா.சம்பந்தன் கேள்வி

மூடி மறைப்பதற்கு முயற்சி செய்கின்ற அரசு, அதற்காகவே அங்கு கண்ணிவெடி அகற்றும் பணிகளில் வெளிநாட்டவர்கள் ஈடுபட அனுமதி மறுக்கின்றது என்று தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசர காலச்சட்ட நீடிப்புப் பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு, அகதிகளின் நிலைமை இப்போது பரிதாபகரமாகவுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகப் போகின்றது. இதனால் அவர்களின் நிலைமை மேலும் மோசமாகப்போகின்றது. அரசு இந்த விடயத்தில் கூடியகவனம் செலுத்தவேண்டும். ஆனால், அரசு இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கண்ணிவெடிகள் அகற்றி முடிக்கப்படாமையே மீள்குடியேற்றம் தாமதமாவதற்குக் காரணம் என்று அரசு கூறுகின்றது. கண்ணிவெடிகள் அகற்றுவதில் அரசு உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. சர்வதேசநாடுகள் கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால், அரசுக்கு அதற்கு அனுமதி வழங்கவில்லை. வன்னியில் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டமை சர்வதேசத்திற்குத் தெரிந்துவிடும் என்பதால்தான் அரசு அனுமதி வழங்கவில்லை. கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்து படையினரை மட்டும்தான் அரசு கண்ணிவெடி அகற்றலில் பயன்படுத்துகின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இப்போதுதான் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நாம் அறிகிறோம். செப்டெம்பர் மாத முற்பகுதியில்கூட மேற்படி பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றும்பணி ஆரம்பிக்கப்படவில்லை. இதைத் துரிதப்படுத்த வெளிநாட்டவர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும் என்று நாம் கூறுகின்றோம். தமிழர்கள் இந்த நாட்டைவிட்டு ஓடவேண்டும் என்ற அரசு விரும்புகிறதா? கண்ணிவெடிகள் புதைக்கப்படாத இடத்தைக் கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லா நிலத்தையும் ஒன்றிணைத்து கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அதுதான் தாமதத்திற்குக் காரணம். கண்ணிவெடிகள் புதைக்கப்படாத நிலத்தைக் கண்டுபிடிக்க அரசு தனியாக நடவடிக்கை எடுத்தால் அந்த இடத்தில் இப்போதே மக்களை குடியமர்த்தலாம். அரசு அவ்வாறான நடவடிக்கைகள் எவற்றையும் பின்பற்றவில்லை. அகதிகள் அவரவர் சொந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படுவார்களா என்று நான் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் கேட்டபோது, அவர் ஆம் என்று பதிலளித்தார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக 30 வீதமான மக்கள் வேறு இடங்களில்தான் குடியமர்த்தப்படுவர் என்று டொக்டர் ஜெகான் பெரேரா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஜெகான் பெரேரா நல்ல முறையில் தகவல் திரட்டித் தருபவர். அவரது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயம் தொடர்பில் அரசு தெளிவுபடுத்தவேண்டும். நாம் தமிழர் என்பதற்காகவே அரசு இப்படிச் செய்கிறது. ஏன் எம்மை இப்படி அடக்கி ஒடுக்குகின்றது. தமிழர்கள் இந்த நாட்டைவிட்டு ஓடவேண்டும் என்று அரசு விரும்புகிறதா? எம்மை இப்படி அடக்கி ஒடுக்க வேண்டாம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.







0 Response to "வன்னிப் படுகொலைகளை மூடிமறைக்கவா? அரசு கண்ணிவெடியகற்றும் பணிக்கு வெளிநாட்டவர்களை அனுமதிக்க மறுக்கிறது -இரா.சம்பந்தன் கேள்வி"
แสดงความคิดเห็น