வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி கொண்டாடினார் ஒபாமா

அமெரிக்காவில் முதன் முதலாக தீபாவளி கொண்டாடி, அதிபர் ஒபாமா இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இன்று நடந்த இந்த விழாவில் இந்தியர்கள் கலந்து கொண்டனர். ஒபாமா அதில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தீபாவளியை கொண்டாடினார். இந்து முறைப்படி வேதவிற்பன்னர் ஒருவர் மந்திரங்கள் ஓத ஒபாமா குத்துவிளக்கு ஏற்றினார்.
வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் நிகழ்ச்சி, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், இதில் புஷ் பங்கேற்க மாட்டார். மாறாக அதிகாரிகள் தலைமையில் நடத்தப்படும்.
மேலும், தீபாவளி வெள்ளை மாளிகையை விடுத்து, அதனுடன் இணைந்த வேறொரு கட்டடத்திலேயே கொண்டாடப்பட்டு வந்தது. இம்முறை முதல் முறையாக, வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதியில் உள்ள பெரிய அறையில், தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ நாராயணச்சாரியார் திகலகோடே வேத மந்திரங்களை ஓதினார். உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்வதாகவும் ஒபாமா தெரிவித்தார். இவ்விழாவில் ஒபாமா நிர்வாக அலுவலக இந்திய அதிகாரிகள், இந்திய சமூகப் பிரதிநிதிகளுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினர் . விழாவில் இந்திய மத்திய அமைச்சர் ஆனந்த்சர்மா, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஏழைகளுக்கு உதவுங்கள்
இத்திருநாள் குறித்து ஒபாமா கூறுகையில்,
"இந்து , சீக்கியர், ஜெயின் மற்றும் பௌத்த இனத்தவர்கள் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் தீபாவளி திருநாளைக் கொண்டாடுகின்றனர்.
கொடியவரை வீழ்த்திய மகிழ்வில் கொண்டாடப்படும் திருநாள் இது. வெற்றியின் அடையாளமாகவும், அறிவின்மை என்ற இருளை அகற்றி ஒளியேற்றும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது.
இது கொண்டாட்ட தருணம் மட்டுமல்ல. நம்மில் பலர் ஏழைகளாகவும் , இல்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்களை நினைத்து இத்திருநாளில் ஏழை, எளிய மக்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்" என்றார்.







0 Response to "வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி கொண்டாடினார் ஒபாமா"
แสดงความคิดเห็น