2010 முடிவுக்குள் இரண்டு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஜனாதிபதி
இவ்வருட முடிவுக்குள் இரண்டு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று களுத்துறையில் தெரிவித்தார்.
ராஜபக்ஷகள் மீது வைராக்கியம் வைத்தாலும் பரவாயில்லை. தாய் நாட்டின் மீது வைராக்கியம் வைத்து நாட்டைக் காட்டிக் கொடுக்காதீர்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் ஏற்பாட்டின் களுத்துறை வேனன்யு பெர்னாண்டோ மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 21ம் திகதி தான் கிளிநொச்சி நகரம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த நாள் சிறப்புக்குரிய நாளாக விளங்குகின்றது. கிளிநொச்சியை விடுவிப்பது என்பது மஹிந்தவின் பகல் கனவு என்று அன்று பிரபாகரன் கூறினார். சர்வதேசத்தினதும் உள்ளூரிலுள்ள சிலரினதும் உதவியோடு கிளிநொச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியுமென பிரபாகரன் நம்பினார். அதனால் தான் எதிரணியின் சிலர் கிளிநொச்சிக்குச் செல்வதாக மதவாச்சிக்குப் போகின்றனர் என விமர்சித்தனர். அன்று பிரபாரனுக்காக குரல் கொடுத்தவர்களுடன் தான் புதிய கைகோர்ப்பு இடம்பெற்றிருக் கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவிருப்பவன் நானே. இந்த வெற்றியே உங்களது குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தைக் கொண்டுவரும்.
இப்போதுள்ள பிரச்சினைகளை நாளைய மக்களுக்காக நாம் விட்டு வைக்க மாட்டோம். நாங்கள் ஏற்ற பொறுப்பை சரியாக நிறைவேற்றுபவர்கள்.
பயங்கர வாதத்தைக் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டிவிட்டு உங்களிடம் வந்திருக்கின்றேன். முழு நாட்டையும் துரிதமாக அபிவிருத்தி செய்வதே எமது அடுத்த இலக்கு.
இதற்குத் தேவையான சகல திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீதிகள் கொங்கிரிட் போட்டு செப்பனிடப்பட்டுள்ளன.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பயனாக உல்லாசப் பயணிகள் படையெடுக்கிறார்கள். முதலீட்டாளர்களும் வருகின்றார்கள். எமது நாட்டைவிட இருபது மடங்கு பெரிய ஆழ்கடல் வளமும் எம்மிடமுள்ளது. சகல வளங்களையும் பயன்படுத்தி நாட்டின் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதே எமது பிரதான இலக்காகும்.
இதேநேரம் இவ்வருட முடிவுக்குள் இரண்டு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும்.
இதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப் பட்டுள்ளன. அரசாங்க ஊழியர்களுக்கென இம்மாவட்டத்திலும் பாரிய வீடமைப்பு திட்டங்கள் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன. பேருவளை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. இம்மாவட்டம் விரைவில் தொழில் சந்தையாகமாறும்.
கடந்த காலங்களில் நாட்டின் சொத்துக்களை விற்று வாழ்க்கை நடத்துபவர்கள் இப்போது எமக்கு சேறுபூசுகின்றார்கள். எமக்கு எதிராக விமர்சனம்செய்ய எதுவிதமான காரணங்களும் இல்லாததால் இவ்வாறு சேறுபூசுகின்றார்கள். இட்லரின் கோயபல்ஸைப் போன்று பொய்களை அடிக்கடி கூறி அவற்றை உண்மைப்படுத்த முடியும் என்று இவர்கள் எதிர்பார்க்கி ன்றார்கள்.
இது ஜேர்மனி அல்ல இலங்கை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஜேர்மனியரைப் போன்றவர்கள் நாமல்லர் என்பதை இந்நாட்டு மக்கள் எதிர்வரும் 26ம் திகதி நிரூபித்து காட்டுவார்கள். நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் நாம் பெரு வெற்றி பெறுவோம். இது உறுதியானது.
0 Response to "2010 முடிவுக்குள் இரண்டு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஜனாதிபதி"
แสดงความคิดเห็น