234 தேர்தல் வன்முறைகள் பதிவு
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையிலும் 234 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) அமைப்பின் ஊடக இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களில் தேர்தல் தொடர்பான கட்டவுட்கள் மற்றும் போஸ்டர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. அவற்றை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரையிலும் அவற்றை அகற்றுவதற்கான எதுவித நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுக்காமல் உள்ளனர். எனவே, தேர்தல் விதிமுறைகளை இவ்வாறு மீறுவோரை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையாளருக்கு உள்ள அதிகாரங்களை அவர் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்;
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தேர்தல் ஆணையாளர் உரையாற்றிய போது சகல கட்சிகளும் தேர்தல் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென கோரப்பட்டதோடு அவ்வாறு தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பணிப்புரை விடுத்திருந்தார்.
ஆனால், தற்பொழுது தேர்தல் சட்ட விதிமுறைகள் பாரிய அளவு மீறப்பட்டுவருகிறது. அது மாத்திரமல்லாமல் தேர்தல் ஆணையாளரின் பணிப்புரைகளை பொலிஸார் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. எனவே, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
0 Response to "234 தேர்தல் வன்முறைகள் பதிவு"
แสดงความคิดเห็น