செய்தியறிக்கை
நீதிமன்றத்தில் ஆஜர் |
முகம்மது நபி கேலிச் சித்திரம் வரைந்தவரை 'கொல்ல முயற்சி'
இஸ்லாமிய இறைதூதர் முகம்மது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரம் ஒன்றை வரைந்திருந்த டென்மார்க் ஓவியரைக் கொல்ல முயற்சித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு, சொமாலிய நபர் ஒருவர் டென்மார்க் நீதிமன்றம் ஒன்றில் இன்று ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
முகம்மது நபி கேலிச் சித்திரம் உலகின் பல பாகங்களிலும் கலவரங்களையும் முஸ்லிம் மக்களின் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியிருந்தது.
கோடாரியும் கத்தியும் ஏந்தியிருந்த அந்நபர், ஓவியர் கர்ட் வெஸ்டர்கார்டின் வீட்டிற்குள் அத்துழீறி நுழைந்திருந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்நபர் அச்சுறுத்தியதை அடுத்து அவரை சுட்டுக் காயப்படுத்தியதாக பொலிசார் கூறுகின்றனர்.
இன்னும் பெயர் வெளியிடப்படாத அந்த 28 வயது சொமாலிய நபர் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் - அமெரிக்கா
பாகிஸ்தான் தாக்குதல் |
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்யும் என்று அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் விளையாட்டு பார்வையாளர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 90 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்த நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற தங்கள் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது போன்ற தாக்குதல்கள் குலைத்து விடாது என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை தொடர்ந்து கராச்சியில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் பலப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினரின் பேருந்து மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்திய பின்னர் நடைபெறும் முதல் சர்வதேச விளையாட்டு போட்டி இதுவாகும்.
அமெரிக்க விமான தாக்குதல் முயற்சிக்கு அல்கொய்தா தொடர்பு குழு காரணம் - அதிபர் பராக் ஒபாமா
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா |
அமெரிக்க விமானம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த இடம்பெற்ற முயற்சியின் பின்ணணியில் அல் கொய்தாவுடன் தொடர்புடைய குழு ஒன்று இருப்பதாக அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா முதன்முறையாக தெரிவித்துள்ளார்.
தனது வாராந்திர வானொலி உரையில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள நைஜிரியாவை சேர்ந்த உமர் ஃபாரூக் அப்துல்முதல்லப் யேமனில் பயிற்சி, உபகரணங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தம்முடைய செயலுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும் என்றும் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
யேமனில் இருந்து வெளியாகும் அபாயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனவரி மாதத்தின் இறுதியில் சர்வதேச கூட்டம் ஒன்றுக்கு பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் எரிசக்தி அமைச்சர் வேட்பாளரை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் |
ஆப்கானிஸ்தான் எரிசக்தி அமைச்சர் பதவிக்கு அதிபர் ஹமீது கர்சாயால் முன்வைக்கப்பட்ட மொஹமது இஸ்மாயில் கான் அவர்களை ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் ஆயுதக்குழு தலைவரான இவர் மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்த போதும் இவரது பெயர் அமைச்சர் பதவிக்கு முன் மொழியப்பட்டது.
எனினும் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் பதவிக்கு முன் வைக்கப்பட்ட நபர்களை நாடாளுமன்றம் ஏற்றுள்ளது. ஆனால் நீதித்துறை அமைச்சர் பதவிக்கு முன் வைக்கப்பட்ட நபரை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
புதிய அமைச்சரைவையில் மற்றவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்றம் தொடர்ந்து வாக்களித்து வருகின்றது.
லண்டனில் இம்மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு முன்பாக வெளிநாட்டு அமைச்சர் பதவி நிரப்பப்பட போவதில்லை.
யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா |
சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம்
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் ஒய்வு பெற்ற இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
இவருடன் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்க, மேலக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஒய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரம் எம் சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய சரத் பொன்சேகா தான் பதவிக்கு வந்தால் பாதுகாப்பு வலயங்களை நீக்குவேன் என தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டம் இருப்பதால் அப்பகுதியில் மீள்குடியேற்றம் பற்றி சிந்திக்க வேண்டும் என கூறினார்.
தேவை ஏற்பட்டால் இராணுவ முகாம்களை இடம்மாற்றி மக்களை மீள்குடியேற்றம் செய்யலாம், யுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு வலயம் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இனப்பிரச்சனை தீர்வு பற்றி பேசிய ரணில் விகரமசிங்க, தான் ஒரு சர்வ கட்சி குழுவை அமைத்து அனைத்து இன மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி வாழ கூடிய சூழலை ஏற்படுத்துவோம் என்றும் கூறினார்.
அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை - மீள்குடியேற்றப்பட்ட மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள் |
இலங்கையின் வடக்கே மீள் குடியேற்றம் நடைபெற்ற பகுதிகளில் மின்சாரம், குடிநீர் வசதி, போக்குவரத்து போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை என்று மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் சிலர் தமிழோசையிடம் தெரிவித்தனர்.
மின் வசதி முழுமையாக இல்லை என்றும், போக்குவரத்து சீராக இல்லை என்றும் நம்மிடம் பேசியவர்கள் தெரிவித்தனர். அதே போல முன்பு அப்பகுதியில் இயங்கி வந்த பள்ளிகள் பல இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதே போல தொழில் தொடங்குவதற்கான வசதிகளும் மிகக் குறைவாகவே உள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. இது பற்றியும், இந்த குறைபாடுகள் குறித்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்த கருத்துக்களையும் இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்
வட இந்தியாவில் கடும் பனி மூட்டத்தால் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முக்கியமானது |
வட இந்தியா முழுவதும் சனிக்கிழமை காலை கடும் பனி மூட்டம் ஏற்பட்ட நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த மூன்று ரயில் விபத்துக்கள் ஏற்பட்டன. இரு விபத்துக்களில் உயிர்ச் சேதம் ஏற்படாவிட்டாலும், இன்னொரு விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டார்கள். 39 பேர் காயமடைந்தனர்.
கான்பூர் மாவட்டத்தில் உள்ள பங்கி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை காலை எட்டரை மணியளவில் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்தது. அந்த நேரத்தில், பிவானி – கோரக்பூர் இடையே செல்லும் கோரக்தாம் எக்ஸ்பிரஸ், அதே பாதையில் வந்து, பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸின் பின்புறம் கடுமையாக மோதியது. மோதிய வேகத்தில, பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் மிக மோசமாக சேதமடைந்தன.
இந்த விபத்தில் ஏழு ஆண்கள், மூன்று பெண்கள் உள்பட பத்து பயணிகள் உயிரிழந்ததாக வடக்கு மத்திய ரயில்வேயின் அலகாபாத் மண்டல பொது மேலாளர் ஹரிஷ்சந்திர ஜோஷி தெரிவித்தார்.
கடும் பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று பனி மூட்டம் காரணமாக மட்டுமன்றி, வட இந்திய மின் தொகுப்பில் மின்சாரம் தடைபட்டதாலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น