jkr

தென்பகுதி மக்கள் அனுபவிக்கும் அதே உரிமை வடபகுதி மக்களுக்கும் உண்டு. யாழில் அலைகடலென திரண்ட மக்கள் மத்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு.

யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று நண்பகல் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஈபிடிபியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்றைய தினம்; ஈபிடிபியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று யாழ்.குடா நாட்டு மக்கள்; மத்தியில் உரையாற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்தமைக்குத் தாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். தற்போது வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மற்றும் மலையகம் என அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் அச்சமில்லாமல் வாழ்கின்றனர். தென்னிலங்கையில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம் வடக்கு மற்றும் கிழக்;கு மக்களுக்கும் கிடைக்கும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகின்றேன். நலன்புரி நிலையங்களிலுள்ள அனைத்து மக்களும் விரைவில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

யாழ்.குடா நாட்டு விவாசாய மக்களுக்கும் கடற்தொழிலை மேற்கொள்ளும் மக்களுக்கும் மற்றும் ஏனைய துறைகளைச் சார்ந்த மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். குடாநாட்டு விவசாயிகள் நீர்பாசனத்தை மேற்கொள்வதற்குத் தென்னிலங்கையில் இருந்து நதியின் ஊடாக அதற்கான நீர்பாசன நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடபகுதி மக்களுக்கான தகவல் தொழில்நுட்பத் துறையைக் கட்டியெழுப்புவதற்குத் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குடாநாட்டு மாணவர்களின் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றேன். இவ்வாறு ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்தார்.

இதேவேளை யாழ். குடா நாட்டு மக்கள் மத்தியில் தமிழில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். சிங்களவர் தமிழர் முஸ்லிம் என்னும் இன வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் எனத் தெரிவித்தார். ஜனநாயகம் மிகவும் அவசியமாகும். இனிவரும் காலங்களில் இடப்பெயர்வுகள் நடைபெறமாட்டாது என்பதுடன் தற்போது எத்தகைய கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் மக்கள் சுதந்திரமாக எந்த இடத்திற்கும் சென்று வரமுடியும் எனத் தெரிவித்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதி என்னும் வகையில் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் தமக்கு இருப்பதாகவும் தென்னிலங்கையில் இருந்து வட பகுதி நோக்கி முன்பு சேவையில் ஈடுபட்டிருந்த யாழ்.தேவி புகையிரதம் யாழ்.குடா நாட்டிற்கு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்.குடா நாட்டு மக்கள் மத்தியில் தமிழில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.

முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குக் கௌரவமான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஒரே விதமான கருத்துக்களையே முன்வைத்து வருவதாகவும் கடந்த யுத்த சூழ்நிலையில் ஏ-9 வீதி மூடப்பட்டிருந்த நிலையிலும் ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக அன்றாட உணவுப் பொருட்கள் குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். யாழ்.குடா நாட்டு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் பல்வேறு கோரிக்கைகளைத் தாம் முன்வைத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ தேவானந்தா அவர்கள் தமிழ் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அழிவிற்கான பாதையைக் காட்டி வருவதாகவும் தாம் ஆக்கத்திற்கான பாதையையே மக்களுக்குக் காட்டுவதாகவும் தமிழ்க் கூட்டமைப்பினர் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மேற்கொண்டுள்ள முடிவு தமிழ் மக்களுக்குப் பாதகமாகவே அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை விரும்பாது சமாதானத்தை முன்னெடுப்பதற்கு விருப்பம் கொண்டவர் எனவும் அவர் பதவியேற்ற பின்னர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்த சமயம் அதனைப் புலித் தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றிருக்காது எனவும் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை அவர்களுக்குப் பிரச்சினையைத் தீர்க்கின்ற நோக்கம் இருக்கவில்லை என்பதுடன் பிரச்சினையை வளர்க்கின்ற நோக்கிலேயே கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய தாம் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியை ஏற்படுத்தும் வகையில் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் அனைத்து மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கடந்த யுத்தத்தால் அழிந்து போயுள்ள அனைத்து வளங்களையும் இரண்டு வருடங்களில் மீளக்கட்டியெழுப்புவதற்கு இன மத பேதங்களை மறந்து ஒன்றிணையுமாறு யாழ்.குடாநாட்டு மக்கள் மத்தியில் பகிரங்க வேண்டுகோள் விடுப்பதாக ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறைகூவல் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.































  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தென்பகுதி மக்கள் அனுபவிக்கும் அதே உரிமை வடபகுதி மக்களுக்கும் உண்டு. யாழில் அலைகடலென திரண்ட மக்கள் மத்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates