செய்தியறிக்கை
கனகரத்தினம் எம்.பி |
கனகரத்தினம் எம்.பி விடுதலை
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரத்தினம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் தற்போது வவுனியாவில் உள்ள அரசாங்க விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
அவரை சக நாடாளுமன்ற உறுப்பினரான கிசோர் சிவநாதன் சென்று பார்வையிட்டுள்ளார்.
எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி பல மாதங்களுக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக கிசோர் தெரிவித்துள்ளார்.
வன்னியில் நடந்த இறுதிக்கட்ட மோதல்களின்போது அவர் அங்கு சிக்குண்டிருந்தார். சுமார் 12 மாதங்கள் அங்கிருந்த அவர் பின்னர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
லலித் வீரதுங்க |
'கன ரக ஆயுதப் பயன்பாடு நிறுத்த உடன்பாடு, காங்கிரஸ் வெற்றிக்கு வழிவகுத்தது'
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின்போது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று இந்தியாவுடன் இலங்கை ஜனாதிபதி செய்துகொண்ட ஒப்பந்தம், இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு உதவிகரமாக இருந்தது என இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலீத் வீரதுங்க இணையதளம் ஒன்றுக்கு அளித்த வீடியோ பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேர்தல் நடைபெறும் நிலையில், இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாக உலக நாடுகள் நினைத்தபோது, அதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஆறு கோடித் தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கருதி, அந்தப் போரை தயவு செய்து நிறுத்துங்கள் என்று இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால் அப்படிச் செய்ய முடியாது என ஜனாதிபதி மறுத்துவிட்டதாகவும் வீரதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என இந்தியப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கேட்டபோது, குறைந்தபட்சம், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதையாவது நிறுத்துங்கள் என்று கேட்டார்கள். அதற்கு முன்னதாகவே, அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று இலங்கை முடிவெடுத்துவிட்டது. அந்த முடிவின் மூலம், காங்கிரஸ் கட்சி பலம் பெற்றது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் இதனால்தான் வெற்றி பெற்றது என்று கூறலாம் என்றும் ஜனாதிபதியின் செயலர் வீரதுங்க அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பது உண்மையாக இருந்தால் அதை ஏற்க முடியாது என்றும், அத்தகைய கருத்தைக் கண்டிப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ஞானதேசிகன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அவரது பேட்டியையும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் கருத்துக்களையும் நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இந்தியாவில் உணவுப் பொருட்கள் விலையேற்றம்
அரிசியும் கடும் விலையேற்றம் கண்டுள்ளது |
கடந்த ஒரு ஆண்டில் உருளைக் கிழங்கின் விலை இரட்டிப்பாகியுள்ளது. காய்கறிகள், தானியங்கள், அரசி, சர்க்கரை போன்றவற்றின் விலை உயர்வை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் தடுமாறுகின்றனர்.
பதப்படுத்தப்படாத உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு பருவமழை குறைந்ததும் காரணமாகக் காட்டப்படுகிறது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஹைட்டிக்கு 100 மில்லியன் டாலர்கள் உதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியாத அகதிகளின் அவலம்
சொந்த ஊர் திரும்ப முடியாத சோகத்தில்... |
யுத்த வேளையில் குண்டுச் சத்தங்களினாலும், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களினாலும், அதிர்ந்து கொண்டிருந்த வடபகுதியில், இந்த பொங்கல் தினத்தில் சீன வெடிகளைக் கொளுத்தி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
இந்து ஆலயங்களில் வியாழனன்று நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.
ஆயினும் மறுபக்கத்தில் போர்ப்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்திருந்ததன் பின்னர் தற்போது உறவினர்களது வீடுகளில் வந்து வசிக்கும் மக்கள் மத்தியில் இந்த மகிழ்ச்சியைக் காணமுடியவில்லை.
கிழக்கே சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் கிளிவெட்டி பட்டித்திடல் மற்றும் கட்டைபறிச்சான் போன்ற பகுதிகளில் உள்ள அகதிகள் நலன்புரி முகாம்களில் வாழும் மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சி தென்படவில்லை.
இந்தத் தைப்பொங்கல் திருநாளிலாவது தங்கள் சொந்த மண்ணைச் சென்றடைந்து பொஙகல் விழாவைக் கொண்டாட அகதிகள் எண்ணியிருந்தனர். ஆனால் அந்த நினைவு வெறும் கனவாகிப் போனதாக அகதிகள் கூறுகின்றனர்.
வரும் ஆண்டிலாவது தங்கள் சொந்த மண்ணில் பண்டிகைகளை கொண்டாட முடியுமா என்று இவர்கள் ஏக்கமும் தெரிவித்துள்ளனர்.
கப்பலிலிருந்து தரையிறங்க மறுக்கும் அகதிகள்: இந்தோனேஷியத் துறைமுகத்தில் இழுபறி நீடிக்கிறது
இந்தோனேஷியாவின் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், மனிதநேய அடிப்படையில் தாங்கள் நடந்து கொள்வதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
படகில் உள்ளவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுவதாகவும் இந்தோனேஷியா கூறுகிறது.
மூன்று மாதங்களுக்கு மேலாகியும், கப்பலில் உள்ளவர்கள் கப்பலை விட்டு இறங்க மறுக்கின்றனர்.
அகதிகள் தொடர்பான ஐ.நா.வின் உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கும் ஏற்றுள்ள நாடுகளில் ஏதாவது ஒரு நாடு தமக்கு தஞ்சம் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் கப்பலில் உள்ளவர்கள் யார் என்பதை விசாரித்து, உண்மையான அகதிகளைக் கண்டறிந்த பிறகே ஐ.நா.வின் அகதிகளுக்கான நடைமுறைகளை அமல்படுத்த முடியும் என்று இந்தோனேஷியா கூறுகிறது.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น