jkr

செய்தியறிக்கை


கடும் சேதம்
கடும் சேதம்

ஹெய்ட்டி நிலநடுக்கம் மிக மோசமான ஒன்று - ஐ.நா

ஹெய்ட்டி நிலநடுக்கத்தால் அந்நாட்டின் உள்ளூர் நிர்வாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானங்கள் முழுமையும் சீர்குலைந்துள்ள நிலையில், இந்த அனர்த்தமே இதுவரை தாம் எதிர்கொண்ட மிக மோசமான பேரழிவென ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹெய்ட்டி விமானநிலையம் நிரம்பி வழிகின்றது, அதன் வீதிகளும் முடக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் பற்றாக்குறையால் அங்குள்ள ஒரு சில மருத்துவமனைகளும் இயங்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

நில நடுக்கம் ஏற்பட்டு சில தினங்கள் கடந்துள்ள நிலையிலும் அங்குள்ள பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு இதுவரை உதவிகள் எதுவும் சென்றடையவில்லை.

போர்ட் தோ பிரான்ஸ் நகரில் வீடுகளை இழந்த நிலையில் நீரின்றி உணவின்றி நிர்க்கதியாகியுள்ள மக்கள், இடிபாடுகள் நிறைந்த பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தலைநகருக்கு வெளியே, லியோகேன் நகரில் தொன்னூறு வீதமான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக ஐ.நா அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க இராஜாங்க துறை செயலர் ஹிலரி க்ளிண்டன், நிலமைகளை கண்டறிவதற்காக ஹெய்ட்டி பயணமாகியுள்ளார்.

நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துவது குறித்து இந்த விஜயத்தின் போது அவர் கவனம் செலுத்துவார்.


ஹெய்ட்டியில் மக்கள் நிவாரணத்துக்காக காத்திருப்பு

மீட்பு நடவடிக்கைகள்
மீட்பு நடவடிக்கைகள்

ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் இதுவரையில் குறைந்தப்பட்சம் 55,000 பேர் பலியாகியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

போர்த் ஒ பிரான்ஸில், நகரத்துக்கு வெளியே இருக்கின்ற பெரும் சவக்குழிகளுக்கு லாரிகள் உடல்களை அள்ளி செல்கின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான உடல்கள் இடிபாடுகள் இடையே சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நிலநடுக்கத்தில் தப்பி உயிர் பிழைத்தவர்கள் உதவிக்காகவும், பொருட்களுக்காகவும் காத்திருப்பதால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

ஆங்காங்கே சூறையாடல்கள் இடம்பெறுவதாகவும், மக்கள் உணவுக்காக சண்டையிடுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஹெய்ட்டியில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் என ஐ.நா மூத்த அதிகாரியான அலைன் ல ராய் தெரிவித்துள்ளார்.

உதவியும் பொருட்களும் மக்களை சென்று சேராவிட்டால், பட்டினியால் பெரும் கலவரம் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இராக் தேர்தலில் முன்னாள் பிரதமர் தலைமையிலான புதிய கூட்டணி

இராக் முன்னாள் பிரதமர் நூரி அல் மலிகி
இராக் முன்னாள் பிரதமர் நூரி அல் மலிகி

இராக்கில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இன பாகுபாடற்ற கூட்டணியை இராக் முன்னாள் பிரதமர் ஐயத் அல்லாவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த கூட்டணிக்கு ஐயத் அல்லாவி தலைவராக இருப்பார்.

‘இராக்கியா’என்று கூறப்படும் என்று இந்த கூட்டணியில் சுன்னி மற்றும் ஷியா பிரிவுகளை சேர்ந்த அரசியல்வாதிகள் இடம்பெறுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தில் ஆதிக்கம் செல்லும் ஷியா மத சார்பிலான கட்சிகளுக்கு இந்த கூட்டணி பெரும் சவாலாக இருக்கலாம் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இதே தேர்தலில் போட்டியிடுவதற்காக இராக்கிய பிரதமர் நூர் அலி மலிகி தன்னுடைய ஷியா கூட்டணியில் சில சுனி அராப் மற்றும் குர்திஷ் பிரமுகர்களை இணைத்துள்ளார்.


ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆயுத கட்டுப்பாடு உடன்படிக்கை எட்டும் தூரத்தில்

ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ்

ரஷ்யாவும் அமெரிக்காவும் புதிய அணு ஆயுத கட்டுப்பாட்டு உடன்படிக்கைத் தொடர்பில் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் தெரிவிக்கின்றார்.

தற்போதை பேச்சுவார்த்தைகள் அவ்வளவு இலகுவானதாக அமையவில்லையென தெரிவிக்கும் அதிபர் மெட்வடேவ் பல விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

START என்ற 1991ம் ஆண்டின் மூலோபாயமான ஆயுதங்கள் குறைப்பு ஒப்பந்தம் கடந்த டிசம்பரில் முடிவுக்கு வந்தததை தொடர்ந்து ரஷ்யாவும் அமெரிக்காவும் புதிய உடன்படிக்கையொன்றை கொண்டுவர முயற்சித்து வருகின்றன.

செய்தியரங்கம்
இரு பிரதான வேட்பாளர்களும்
இரு பிரதான வேட்பாளர்களும்

இலங்கையில் தேர்தல் வன்முறைகள்

இலங்கையில் அடுத்த நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் ஒன்பது தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களும் கூடவே வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன.

இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி நகரில் இன்று சனிக்கிழமை இடம்பெறவிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றுக்கு முன்பாக இரண்டு பிரதான கட்சி ஆதரவாளர்களுக்குமிடையே இடம்பெற்ற மோதல்களில் அருண சமன்குமார என்ற 19 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளரான இந்த இளைஞனுடன் ஏனைய ஐந்து பேரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மூவின மக்களும் வசிக்கின்ற மதுரங்குளி நகரில் சனிக்கிழமை மாலை நடைபெறவருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் கூட்டத்த்துக்கு முன்பாகவே இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

காயமடைந்தவர்களில் மூவர் புத்தளம் வைத்தியசாலையிலும் இருவர் குருணாகல் தேசிய வைத்திய சாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக குறித்த பகுதியை சேந்த ஐக்கிய தேசியக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீடும் வர்த்தக நிலையமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரசாரக் கூட்டமொன்றுக்கு பஸ்ஸொன்றில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் இலங்கையின் தெற்கே ஹுங்கம என்ற இடத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டார்.

பெப்ரல் என்ற நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பின் படி, இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் பதிவாகியுள்ள முந்நூறுக்கும் அதிகமான வன்முறைகளில் இரண்டாவது மரணம் சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு

ஜல்லிகட்டு
ஜல்லிகட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் போட்டி நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்கும் காளைகளுக்கு மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் கொடுக்கப்படுவதாகவும், அந்த விலங்குகள் பல வகைகளில் துன்புறுத்தப்படுவதாகவும், அத்துடன் அந்தப் போட்டிகளில் பலர் உயிரிழப்பதாகவும் தன்னார்வ அமைப்புக்கள் சார்பில் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதையடுத்து, அந்தப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதிகாரிகள் அந்தப் போட்டிகளை நடத்துவதைக் கண்காணிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், மிகவும் கட்டுப்பாடான முறையிலேயே இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

மதுரை அருகே, அலங்காநல்லூரில் துவங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மத்திய அமைச்சர் அழகிரி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்தப் போ்ட்டிகளைக் காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் கூடுவது வழக்கம்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மாடுகளுக்கும், மாடுகளை அடக்கக் களம் இறங்கும் வீரர்களுக்கும் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்ட பி்ன்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அங்கு மருத்துவக்குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளின்போது, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தார்கள்.

வெள்ளிகிழமை மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழந்தார். 46க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


பாகிஸ்தான் காஷ்மீரில் தற்கொலைக்குண்டு தாக்குதல்

பாகிஸ்தான் இராணுவத்தினர்
பாகிஸ்தான் இராணுவத்தினர்

பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருக்கின்ற காஷ்மீர் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் இரு பாகிஸ்தான் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக முசஃப்ராபாத்தில் இருக்கின்ற இராணுவத்தின் சார்பில் பேசவல்லவர் கூறும்போது, இந்த தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் ராவலாகோட்டின் புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் இஸ்லாமிய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி வந்து இருந்தாலும், பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் தாக்குதல் இடம்பெற்றது என்பது அரிதாகவே இருந்து வந்ததாக செய்தியாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.


பன்றிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கைவிடப்பட்டது

பன்றிகள்
பன்றிகள்

ஆஸ்திரியாவில் பன்றிகளை பனியில் புதைய வைத்து சோதனை நடத்தப்படுவதற்கு எதிராக மிருக நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து இந்த சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் கைவிட்டுள்ளனர். இத்தாலி மற்றும் ஆஸ்திரியா இணைந்து கூட்டாக நடத்திய இந்த சோதனையின் மூலமாக பனிச்சரிவில் சிக்கிய ஒரு சில மனிதர்கள் எவ்வாறு பல மணி நேரம் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை கண்டறிவதாக இருந்தது.

பனிச்சரிவில் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு மூச்சுத்திணறல் பெரும் காரணமாக பார்க்கபடுகிறது. ஆனால் பனியால் மூடப்பட்ட பதினைந்து நிமிடங்களுக்குள் சிக்கிய நபரை மீட்டு விட்டால் அவர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பனியால் மூடப்பட்டு விட்டால் உடனடியாக முகத்துக்கு மேலே காற்று வரும் அளவுக்கு ஓட்டை ஒன்றை ஏற்படுத்துமாறு மீட்பு நடவடிக்கை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து மேலும் ஆராய்வதற்காக பல பன்றிகளை பனியில் புதைத்து அவற்றுக்கு வித விதமான காற்று ஓட்டை அளவை வைத்து சோதனை செய்துள்ளனர், பொல்சானோவில் இருக்கின்ற மலை பகுதிக்கான அவசரகால மருத்துவ நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள்.

இதன் பின்னர், பன்றிகளின் சுவாச மற்றும் திசு மாதிரிகளை எடுத்து இவர்கள் சோதனை செய்துள்ளனர்.

பன்றியை வைத்து ஆராய்ச்சி
பன்றியை வைத்து ஆராய்ச்சி

இவ்வாறு பன்றிகளை வைத்து சோதனை செய்திருப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் என மிருக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பன்றிகளுக்கு மயக்க மருந்து கொடுத்தே இந்த சோதனையை செய்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி மூலம் ஏராளமான மனித உயிர்களை காக்க முடியும் என்றும், இந்த ஆராய்ச்சியால் மீட்பு குழுவுக்கு எந்த நபருக்கு உண்மையாக பிழைக்க கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பதை கணித்து அவருக்கு சிகிச்சை கொடுக்க ஏதுவாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சோதனை இப்போது திரும்ப பெறப்பட்டிருந்தாலும், பொதுவாக எவ்வாறு பனிச்சரிவில் இருந்து தப்புவது என்பது குறித்த ஆராய்ச்சி தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆராய்ச்சிக்காக மிருகங்கள் பலி கொடுக்கப்பட வேண்டுமா என்பது பெரும் விவாதத்துக்கு உரிய விஷயமாக நீடித்து வரலாம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates