jkr

‘புதிய பாதை’ ஆசிரியர் சுந்தரம் நினைவாக..


இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வட பிரதேசச் செயலாளர் ச.சுப்பிரமணியம் அவர்கள் ஆற்றிய உரை

2010 ஜனவரி 16ந் திகதியன்று, புலிகளால் 28 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட, ‘புதிய பாதை’ பத்திரிகை ஆசிரியர் சுந்தரம் அவர்களின் நினைவுக் கூட்டம், கனடாவின் மார்க்கம் நகரில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்டு, இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வட பிரதேசச் செயலாளர் ச.சுப்பிரமணியம் அவர்கள் ஆற்றிய உரையைக் கீழே தருகின்றோம்.

தலைவர் அவர்களே, நண்பர்களே, தோழர்களே!

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, அதற்காகவே தமிழ் பாசிச சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட, ஒரு உன்னத போராளியான சுந்தரம் என அழைக்கப்படும் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் மறைவின் 28வது ஆண்டை நினைவு கூர்வதற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். அந்த மகத்தான போராளியுடன் நான் சில ஆண்டுகள் நெருங்கிப் பழகியவன் என்ற ரீதியில், அவர் என் மனதில் பதித்துவிட்டுச் சென்ற அழியாத சுவடுகளை நினைவு மீட்டி, சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு தந்த இந்த கூட்ட அமைப்பாளர்களுக்கு முதற்கண் என நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சுந்தரத்துடனான எனது தொடர்பு ஆரம்பித்த காலகட்டம், சரியாக நினைவில்லாவிட்டாலும், 1970களின் பிற்பகுதி என்று நினைக்கிறேன். 1977ம் ஆண்டில் நான் சார்ந்திருந்த இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் சிலர் இணைந்து, யாழ்ப்பாணத்தில் அச்சகம் ஒன்றை நிறுவினோம். அதன் நோக்கம் எமது கட்சி வெளியீடுகளை அங்கு அச்சிடுவதுடன், எமது நேச சக்திகளின் வெளியீட்டு முயற்சிகளுக்கும் உதவுவதாகும். அன்றைய காலகட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செல்வாக்கு வடக்கு கிழக்கு பகுதிகளில் கொடிகட்டிப் பறந்ததால், அவர்களுக்கு எதிரான பிரசுரங்கள் எதையும் யாழப்;பாணத்திலிருந்த அச்சகங்களில் யாரும் லேசாக அச்சிட்டுவிட முடியாத ஒரு சூழல் நிலவியது.

இப்படியான ஒரு சூழலில், தமிழ் மக்கள் மத்தியில் உருவாகிய இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு தமது பிரசுரங்களை வெளியிடுவது ஒரு பிரச்;சினையாக இருந்து வந்தது. காரணம் அவ்வாறான ஒரு பிரசுரம் வெளியிட்ட, யாழ்ப்பாணம் சி.எஸ்.கே சந்தியிலிருந்த அச்சகம் ஒன்றைத் தொடர்பு கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இனிமேல் அவ்வாறான பிரசுரங்களை வெளியிடக்கூடாது என, சற்று எச்சரிக்கும் தொனியில் கேட்டிருந்தார். அதனால் அச்சமடைந்த அச்சக உரிமையாளர்கள், மாற்றுக் கருத்தாளர்களின் பிரசுரங்களை அச்சிடுவதைத் தவிர்த்துக் கொண்டனர். அதாவது, தம்மை ஜனநாயக வழியில் செயல்படும் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் த.வி.கூ, அன்றே தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு கடிவாளம் போட்டுவிட்டது. எனவே பிற்காலத்தில் புலிகள் அமுல்படுத்திய முற்று முழுதான கருத்துச் சுதந்திர மறுப்பு என்பது, த.வி.கூ தொடக்கி வைத்;த நடைமுறையின் ஒரு உச்ச கட்ட வளர்ச்சியே.

இத்தகைய ஒரு சூழலில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தை ஆரம்பத்தில் தொடங்கிய பிரபாகரன், உமா மகேஸ்வரன் போன்றோருக்கு, தமது பிரச்சாரப் பத்திரிகையை அச்சிடுவதற்கு யாழ்பாணத்தில் அச்சகம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே சிலர் வழங்கிய ஆலோசனையை அடுத்து, அவர்கள் என்னிடம் தமது ‘உணர்வு’ என்ற பத்திரிகையை அச்சிடுவதற்கான உதவியைக் கேட்டு சிலரை அனுப்பி வைத்தனர். அவ்வாறு வந்தவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் அப்போது கல்வி கற்றுக் கொண்டிருந்த அன்ரன் சிவகுமார் (இவர் பின்னர் திம்பு பேச்சுவார்த்தையின் போது புலிகளின் சார்பாக பங்குபற்றிய பிரதிநிதிகளில் ஒருவர்), தனிநாயகம், கோண்டாவிலைச் சேர்ந்த குணரத்தினம் ஆகியோராவர்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். புலிகள் மட்டுமின்றி, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஈழ மாணவர் பொதுமன்றம், தமது ‘ஈழ மாணவர் குரல்’ பத்திரிகையை அச்சிடும் பொறுப்பையும் எம்மிடம் தான் வழங்கினர். அதேபோல புலிகளுடன் தொடர்பு என இரு வருடங்களின் முன்னர் கைது செய்யப்பட்டு, தற்போது வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கரவெட்டியைச் சேர்ந்த தேவதாசன் என்பவரும், தனது ‘பலிபீடம்’ என்ற பத்திரிகையை அச்சிட எம்மிடம் தான் வந்தார். அத்துடன் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தினால் வெளியிடப்பட்ட ‘உதயசூரியன்’, சிவாஜி ரசிகர் மன்றத்தால் வெளியிடப்பட்ட ‘சிம்மக்குரல்’ பத்திரிகைகளையும் எமது ‘நொதேர்ன் பிறின்ரேர்ஸ்’ என்ற அச்சகத்தில் தான் அச்சிட்டுக் கொடுத்தோம். இதுதவிர யாழ். பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கு விசுவாசமாக இயங்கிய ‘மறுமலர்ச்சிக் கழக’த்தின் வெளியீடுகள் பலவற்றையும் கூட நாம் அச்சிட்டுக் கொடுத்தோம். தவிர என்.எல்.எப்.ரி, தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தமிழீழ இராணுவம், தமிழ் இளைஞர் பேரவை போன்றவற்றின் சில துண்டுப் பிரசுரங்களையும் அச்சிட்டுக் கொடுத்தோம். அதேவேளையில் எமது கட்சியின் இருவார வெளியீடான ‘போராளி’ பத்திரிகையையும் அச்சிட்டு வந்தோம்.

புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட ‘உணர்வு’ பத்திரிகையை நாம் அச்சிட்டு வந்த வேளையில,; பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள பாண்டி பஜார் என்ற இடத்தில் கைத்துப்பாக்கியால் பரஸ்பரம் சுட்டு மோதிக் கொண்டார்கள். இந்த மோதலைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு, உமா மகேஸ்வரன் தலைமையில் ஒரு குழுவினர் பிரிந்து சென்று தனியாக இயங்க ஆரம்பித்தனர். அவ்வாறு இயங்க ஆரம்பித்தவர்கள் தமக்கென ஒரு தனியான பத்திரிகையை ஆரம்பிக்க முடிவு எடுத்து, அதை அச்சிட்டுத் தரும்படி என்னிடம் வந்தனர்.

அவ்வாறு என்னிடம் வந்தவர்கள் குழுவில் சுந்தரம், கண்ணன் என அழைக்கப்படும் சோதீஸ்வரன் (இவர் பின்னர் மட்டக்களப்பில் புலிகளின் தாக்குதல் ஒன்றில் வாசுதேவா போன்றோருடன் கொல்லப்பட்டவர்) கோண்டாவில் குணரத்தினம் போன்றோர் இருந்தனர். அவர்கள் தமது பத்திரிகைக்கு ‘புதியபாதை’ என பெயர் சூட்டிக் கொண்டனர். நாம் அவர்களது பத்திரிகையையும் அச்சிட்டுக் கொடுத்தோம். அதாவது ஏக காலத்தில் பிரதான ஆயுதப்போராட்ட இயக்கங்களான புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்பனவற்றினதும், ஏனைய சில இயக்கங்களினதும் வெளியீடுகளை நாம் அச்சிட்டுக் கொடுத்தோம்.

நாம் இவ்வாறு செய்ததிற்கு அரசியல் ரீதியான சில காரணங்கள் இருந்தன. ஒன்று, அன்றைய காலகட்டத்தில், இலங்கையில் ஏகாதிபத்தியத்தின் மிக விசுவாசமான ஏவல் நாயான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் தலைமையிலான படு பிற்போக்கான ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் ஆட்சியிலிருந்தது. அது இலங்கை மக்கள் முழுப் பேரினதும் வாழ்க்கையை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுபாதாளத்தில் தள்ளிக் கொண்டிருந்தது. மறுபக்கத்தில், தமிழ் மக்கள் மேல் பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. இடதுசாரிகளான எம்மைப் பொறுத்தவரை ஐ.தே.க எப்பொழுதுமே எமது பொது எதிரி என்றபடியால், அதற்கெதிரான சக்திகளை நாம் எமது நேச சக்திகளாகக் கருதினோம். இன்னொரு பக்கத்தில் எப்பொழுதும் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகவும், பிற்போக்கு ஐ.தே.கவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்த தமிழ் பிற்போக்கு சக்திகளின் அன்றைய பிரதிநிதியான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜே.ஆர். அரசுடன் கூடிக்குலாவியது. எனவே ஐ.தே.கவுக்கு எதிராகவும், த.வி.கூ எதிராகவும் போராடிய தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு உதவுவது எமது கடமை என்ற அடிப்படையிலேயே, நாம் இப்பிரசுரங்களை அச்சிட்டுக கொடுத்தோம். அத்துடன் அமிர்தலிங்கம் போன்றவர்கள் மற்றைய அச்சகங்களை மிரட்டியது போல, எம்மை எக்காரணம் கொண்டும் மிரட்டவும் முடியாது என்பதுவும் ஒரு காரணமாக இருந்தது.

ஆனால் அமிர்தலிங்கம் தனது ஆதரவாளரான சுந்தரத்தின் தந்தையாரான சதாசிவம் மூலம், சுந்தரத்துக்கு நெருக்கடி கொடுத்து, ‘புதிய பாதை’ பத்தி;ரிகையை நிறுத்திவிட பல வழிகளில் முயன்றார். சுந்தரம் அமிர்தலிங்கத்தின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடவில்லை. சுழிபுரத்தை சேர்ந்த சுந்தரம், தனது பத்திரிகையின் வெளியீட்டாளராக தனது ஊரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் பெயரை பத்திரிகையில் போட்டிருந்தார். அதை அவதானித்த அமிர்தலிங்கம், தனது இன்னொரு ஆதரவாளரான சுரேந்திரனின் தந்தையாரை அணுகி, அவரது மகனை ‘புதிய பாதை’ பத்திரிகை வெளியீட்டிலிருந்து விலகி விடும்படி நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார்.

தந்தையின் நெருக்குதலைத் தாங்க முடியாத சுரேந்திரன், தனது சம்மதம் இன்றியே தனது பெயர் பத்திரிகை வெளியீட்டாளராகப் போடப்படுகிறது என்று ஒரு பொய்யை தந்தையிடம் கூறித் தப்ப முயன்றார். அதை உண்மை என நம்பிய அவரது தகப்பனார், அவ்விடயத்தை அமிர்தலிங்கத்திடம் தெரிவித்தார். அதற்கு அமிர்தலிங்கம் அவருக்கு சில பாதகமான ஆலோசனைகளை வழங்கியதாக நாம் பின்னர் சுந்தரத்தின் மூலம் அறிந்தோம்.

அதாவது அப்பொழுது ஆட்சியிலிருந்த ஜே.ஆர்., தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்திருந்ததுடன், யாழ்ப்பாணத்தில் அதை கொடூரமாக அமுல்படுத்துவதற்காக, தனது சொந்த மருமகனான ராணுவ பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி, அவா யாழ் கோட்டையிலிருந்த அரச விருந்தினர் விடுதியான ‘கிங்ஸ் ஹவுஸில்’ இருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

பிரிகேடியர் வீரதுங்க யாழ்ப்பாணம் வந்த பின்னரே, நவாலியைச் சேர்ந்த இன்பம், செல்வம் உட்பட அரசுக்கெதிராகச் செயல்பட்ட பல தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு, தெருவோரங்களில் வீசப்பட்டனர். அப்படியான வீரதுங்கவிடம் சென்று, தனது மகனின் சம்மதம் இன்றி அவரது பெயரை ‘புதிய பாதை’ வெளியீட்டாளராகப் போட்டுள்ளனர் என ஒரு முறைப்பாட்டை எமது அச்சகத்துக்கு எதிராக செய்வதற்காக, சுரேந்திரனின் தந்தை ஒரு கடிதத்தைத் தயாரித்து, வீரதுங்கவுக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தார். ஆனால் எமது அதிஸ்டமோ என்னமோ, சுரேந்திரனின் நெருங்கிய உறவினரும், பின்னர் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவருமான, நவ சம சமாஜக் கட்சியின் யாழ் மாவட்ட செயலாளருமான தோழர் ஆ.க.அண்ணாமலை அங்கு தற்செயலாக சென்றபோது இதைக் கேள்வியுற்று, உடனடியாக அதைத் தடுத்து நிறுத்தியதுடன், எனக்கும் உடனடியாகத் தகவல் தந்தார். அதன் மூலம் வீரதுங்கவிடமிருந்து எமது உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. இதைக் கேள்வியுற்ற சுந்தரம,; தனது நண்பர் சுரேந்திரனை வெளியீட்டாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு, குணரத்தினத்தை அதற்கு நியமித்து, எம்மையும், தனது நண்பர் சுரேந்திரனையும் இக்கட்டான நிலையிலிருந்து விடுவித்தார். இது அவரது நேர்மையையும், உயர்வான பண்பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.

அமிர்தலிங்கம் இவ்வளவு தூரம் ‘புதிய பாதை’ பத்திரிகையை நிறுத்துவதற்கு முயற்சித்ததில் இருந்தே, அந்தப் பத்திரிகை அரசியல் அரங்கில் ஏற்படுத்திய தாக்கத்தையும், அதற்கு வழி சமைத்த சுந்தரத்தின் ஆளுமையையும் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் சுந்தரத்தின் மீதான அமிர்தலிங்கத்தின் கோபம் தணிந்தபாடாக இல்லை. அதனால் தானோ என்னவோ, பின்னர் சுந்தரம் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட போது, அதனுடன் சேர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையின் பெயரும் மக்கள் மத்தியில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இது இவ்வாறு இருக்க, வெளியே புலிகளுக்கும் புளொட்டுக்குமான முரண்பாடு தீவிரமாகிக் கொண்டிருந்தது. அவர்கள் பல இடங்களில் ஆயுதங்களால் மோதிக் கொள்ளும் சூழல் நிலவியது. எம்மிடம் பத்திரிகை அச்சிட வரும் அந்த இரு இயக்கங்களின் உறுப்பினர்களும், எப்பொழுதும் ஆயுதபாணிகளாகவே வருவது வழமை. அவர்கள் சில வேளைகளில் எமது மேசை லாச்சிகளில் கூட கைத்துப்பாக்கிகளை வைத்துவிட்டுச் செல்வார்கள்! இரு பகுதியினரையும் ஒரே நேரத்தில் வருகை தராமல் இருக்க, நாம் சில ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், அதையும் மீறி சில வேளைகளில் இரு பகுதியினரும் ஏக காலத்தில் வருகை தருவதும், ஒருவரை ஒருவர் பார்த்து முறைப்பதுமாக நிலைமைகள் தொடர்ந்தன.

இந்தக் காலகட்டத்தில் யாழ் குடாநாட்டில் சில முக்கிய சம்பவங்கள் நடந்தேறின. ஒன்று சுந்தரம், கண்ணன் போன்றோரின் தலைமையில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம் தாக்குதலுக்குள்ளானது. அத்துடன் 1981 யூன் 04ந் திகதி யாழ் மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தல் நடக்கவிருந்த சூழலில், மே 31ந் திகதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. அதில் இரு பொலிசார் இறந்தனர். இதை நிகழ்த்தியது சுந்தரம் தான் எனக் கூறப்பட்டது. அதுதவிர யாழ் மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தலில் ஐ.தே.கவின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட, முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஆ.தியாகராசா மீது மூளாயில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் வைத்து துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது. அதுவும் சுந்தரத்தால் மேற்கொள்ளப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது.

இந்த சம்பவங்களுக்கு சுந்தரம் தலைமைதாங்கியதும், அவர் தனியான பத்திரிகை அச்சிடப் புறப்பட்டதும், புலிகளால் தாங்கிக் கொள்ள முடியாததாகவிருந்தது. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில், தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மத்தியில், heroism எனப்படும் வீர சாகசம் ஒரு போட்டிச் செயல்பாடாக இருந்தது. ஆரம்பம் முதல் 2009 மே 18ல் புலிகள் இறுதியாக அழியும் வரை, எந்த ஒரு போராட்டத்திலும் தாமாக முன்வந்து பங்குபற்றாத தமிழ் பொதுமக்கள் - அதாவது ஏற்கெனவே தென்னிந்திய சினிமா சாகசங்களின் தாக்கத்துக்கும் உள்ளாகியிருந்த அவர்கள் - இந்த வீர சாகசத்தை மிகவும் ரசித்து, யார் கூடுதலாக சாகசம் புரிகிறார்களோ, அவர்களுக்கே தமது ஆதரவை வழங்கிக் கொண்டிருந்தனர். அந்த அடிப்படையில், புளொட் இயக்கத்தின் மீதும், சுந்தரத்தின் மீதும், தமிழ் பொதுமக்களுக்கு ஒரு கவர்ச்சி ஏற்பட்டிருந்தது. அது, ஏகப் பிரதிநிதித்துவம் நோக்கிப் பயணிப்பதற்குத் தயாராகி வந்த புலிகளுக்குப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகவும் இருந்தது.

புலிகளுக்கும் புளொட்டுக்கும் இடையே வளர்ந்து வந்த மோதல் நிலைமையைக் கண்டு, உண்மையிலேயே நாம் கவலை கொண்டோம். ஏனெனில் தமிழ் மக்களின் விமோசனத்துக்கான போராட்டம் என்பது, தனித்து ஒரு இயக்கத்தால் மட்டும் போராடி அடையப்பட முடியாதது என எமது மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்தது. இந்த இயக்கங்கள் ஆரம்பமாவதற்கு முன்னர், 1970ல் பதவியேற்ற சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கூட்டரசாங்கம், 1972ல் கொண்டு வந்த புதிய அரசியல் சாசனத்தை முற்றுமுழுதாக நிராகரித்த தமிழரசுக்கட்சித் தலைமை, பிரிவினைவாத கோசங்களை முன்வைத்து, அரசுக்கு எதிரான இயக்கங்களை ஆரம்பித்திருந்தது. தமிழரசுக்கட்சியின் இந்தப் போக்கு, தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய அழிவை எதிர்காலத்தில் உண்டாக்கும் என எமது கட்சி எச்சரித்ததுடன், ‘தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஒன்றிணைவீர்’ என்ற தலைப்பில், 38 வருடங்களுக்குப் பிறகும் கூட, இன்றும் மிகச் சரியாக இருக்கின்ற வரலாற்று முக்கியத்துவமிக்க அறிக்கையொன்றை 1972ல் வெளியிட்டது.

அத்துடன் நிற்காது, தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக ஒன்றிணைந்து போராட முன்வருமாறு அப்பொழுது யாழ்ப்பாணத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ், மொஸ்கோசார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, தமிழர் சுயாட்சிக்கழகம், நவ சம சமாஜக்கட்சி, தமிழ் இளைஞர் பேரவை என்பனவற்றுக்கு அழைப்பும் விடுத்தது. அவற்றில் தமிழரசுக்கட்சி, தமிழர் சுயாட்சிக்கழகம், நவ சம சமாஜக்கட்சி, தமிழ் இளைஞர் பேரவை என்பன மட்டுமே எம்முடன் பேச்சுவார்த்தைக்கு வந்த போதிலும், தொடர்ந்து ஒரு ஐக்கிய முன்னணியாகச் செயல்படுவதில் அவர்கள் அக்கறை எதுவும் காட்டவில்லை.

அதனால் எமது கட்சி நேரடியாகவே தமிழ் மக்கள் மத்தியில் சென்று வேலை செய்வதை நோக்கமாகக் கொண்டு, ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்பை உருவாக்கியது. அது முற்றுமுழுதான ஒரு வெகுஜன போராட்ட அமைப்பாகும். ஆனால் அதன்பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டச் சூழல் ஆரம்பமாகியதால், எமது ஜனநாயக முன்னணி செயலிழந்தது. ஆனாலும் ஜே.ஆரின் ஐ.தே.க அரசாங்கம், தமிழ் மக்கள் மேல் தொடுத்த இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிராக, போராடுவதற்கு என உருவான ஆயுதப் போராட்ட இயக்கங்களை, தவிர்க்க முடியாத ஒரு சூழலில் உருவான தற்பாதுகாப்புப் போராட்ட இயக்கங்களாகவே எமது கட்சி கருதியது. எனவே பல நாடுகளின் விடுதலைப் போராட்ட இயக்கங்களின் அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழ் போராட்ட இயக்கங்களையும், ஒரு குறைந்த பட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுபடுத்தி, ஒரு ஐக்கிய முன்னணியாக செயல்பட வைப்பதற்கு நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்.

எனவே இத்தகைய ஒரு சூழலில், புலிகளுக்கும் புளொட்டுக்கும் இடையிலான மோதல் எமக்கு கவலையைத்தான் ஏற்படுத்தியது. மறுபக்கத்தில் அவர்களுடைய மோதல் எதுவும் எம்முடைய அச்சகத்தில் வைத்து நடந்துவிடக்கூடாது என்ற கவலையும் எமக்கு இருந்தது. ஆனாலும் அவர்களுக்கிடையிலான மோதல் எந்த நேரமும் நிகழலாம் என்ற சூழல் இருந்து கொண்டே இருந்தது. எனவே நாம், அது எமது இடத்தில் நடைபெறுவதைத் தடுக்கும் பொருட்டு, எமது அச்சகத்தையே மூடிவிட முடிவு செய்தோம்.

ஆனால் உடனடியாக அச்சகத்தை மூடிவிட முடியாதபடி, ஒரு பாரிய கடமை எமக்கு முன்னால் எழுந்து நின்றது. 1981 யூன் 04ந் திகதி நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திச்சபைத் தேர்தலையொட்டி, நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற தமிழர் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அன்றைய ஐ.தே.க அரசாங்கம் தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்திருந்த குண்டர்கள் மூலம், யாழ் நகரை எரித்து சாம்பராக்கியது. அந்த பிரளயத்தில் ஐ.தே.க குண்டர்களால் யாழ்.பொதுநுர்லகம், ஈழநாடு பத்திரிகை காரியாலயம், நாச்சிமார் கோவில் தேர், யாழ்.தொகுதி பாராளுமன்ற உறுப்பினரின் வீடு, யாழ்.நவீன சந்தை மற்றும் கடைகள் என எல்லாமே எரித்து நாசமாக்கப்பட்டன. அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்துக்கும் வெளி உலகுக்கும் எல்லாவித தொடர்புகளும் அற்றுப் போயின. அங்;கு என்ன நடக்கிறதென்று வெளியுலகத்தினர்க்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஐ.தே.க குண்டர்களால் செய்யப்பட்ட நாசகாரச் செயல்கள் பற்றி வெளி உலகுக்கு தெரிவிப்பது அவசியம் எனக் கருதிய, யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரும், புத்திஜீவிகள் சிலரும், அது சம்பந்தமான இரகசிய அறிக்கை ஒன்றை அச்சிடும் பொருட்டு, யாழ்நகரில் இருந்த அச்சகங்கள் சிலவற்றை அணுகினர். ஆனால் அச்சத்தின் உச்சியில் இருந்த எந்தவொரு அச்சகமும் அதை அச்சிட முன்வரவில்லை. அவர்கள் இறுதியில் எம்மிடம் வந்தனர். எமது அச்சக ஊழியர்களும் அச்சத்துடன் இருந்த போதிலும், தற்போது காலம் சென்றுவிட்ட எமது கட்சி உறுப்பினரான புஸ்பராஜா என்ற அச்சக ஊழியரின் உதவியுடன் நாம் அதை அச்சிட்டு, பின்னர் அது யாழ்ப்பாண்திலுள்ள மிக முக்கியமான மதபீட காரியாலயம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பின்னா மதகுருமார் மூலம் வெளியுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தப் பணி நிறைவுற்றதும், நாம் எமதும், புலி – புளொட் இயக்க நண்பர்களினதும் தற்பாதுகாப்பு கருதி, எமது அச்சு இயந்திரங்களைக் கழற்றி வைத்துவிட்டு, அதை விற்றுவிட்டதாக எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அறிவித்து விட்டோம். அதன் பின்னர் புலிகள் தமது பத்திரிகையை அச்சிடுவதற்கு எம்மிடம் வரவில்லை. ஆனால் எம்முடன் பல வழிகளில் நெருங்கிப் பழகிய சுந்தரம், தமது ‘புதிய பாதை’ பத்திரிகையை தொடர்ந்து அச்சிடுவதற்கு ஒரு அச்சகத்தை ஒழுங்கு செய்து தரும்படி வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுகோளைத் தட்டிக்கழிக்க முடியாத நாம், எம்முடன் தொழில் ரீதியில் நட்புடன் இருந்த மரியதாஸ் என்பவரின் சித்திரா அச்சகத்தில் சுந்தரத்தின் பத்திரிகையை அச்சிட ஏற்பாடு செய்து கொடுத்தோம். ‘புதிய பாதை’யின் எட்டு இதழ்களை நாம் அச்சிட்டுக் கொடுத்திருந்த சூழலில், ஒன்பதாவது இதழை சித்திரா அச்சகத்தில் அச்சிடுகையில், அது சம்பந்தமான வேலைகளை கவனிப்பதற்காக சுந்தரம் அங்கு சென்ற போதே, நயவஞ்சகப் புலிகளால் கோழைத்தனமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுந்தரம் சுடப்பட்ட போது, யாழ் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் நடாத்தி வந்த புத்தகக் கடையில் நான் இருந்தேன். அவரது மரணச் செய்தியை, அவர் சுடப்பட்ட போது, அவ்வழியால் வந்த எமது தோழர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னாh. உடனடியாகவே நான் அவ்விடத்துக்கு விரைந்தேன். அங்கு சுந்தரம் இரத்த வெள்ளத்தில் குப்புற வீழ்ந்து கிடந்தார். அருகில் வழமையாக அவர் வைத்திருக்கும் கடதாசிப் பை கிடந்தது. அவர் சுடப்பட்ட போது, மதிய வேளையாகையால் சித்திரா அச்சகத்தில் உள்ளே பலர் வேலை செய்து கொண்டு இருந்தனர். ஆனால் சத்தம் வராத கைத்துப்பாக்கியால் அவர் சுடப்பட்டதால், அவர்களுக்கு உடனடியாக என்ன நடந்ததென்று தெரியவில்லை.
சுந்தரத்தின் கொலை நடந்த சில நாட்களில், அது சம்பந்தமாக விசாரிப்பதற்காக, கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் புலனாய்வுக்குழு ஒன்று யாழ்ப்பாணம் வந்தது. அவர்கள் பலரையும் விசாரித்தனர். என்னையும் ஒரு கிழமை வரை விசாரித்தனர். விசாரணையின் போது அவர்கள் எம் எல்லோரிடமும் மிகப் பண்பாக நடந்து கொண்டதுடன், எம்மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்காது விடுதலை செய்துவிட்டனர்.

சுந்தரத்தின் கொலை என்பது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் திசை மாறிவிட்டது என்பதன் பலமான ஒரு சமிக்ஞையாகும். இதை பலர் அப்போது உணர்ந்திருக்கவில்லை. இயக்கங்களுக்கிடையே பின்னர் ஏற்பட்ட மோதல்களுக்கும், இயக்கங்கள் மத்தியிலேயே ஏற்பட்ட மோதல்களுக்கும், சுந்தரத்தின் மோதல் ஒரு சிவப்பு எச்சரிக்கை விளக்காக இருந்தது. அதன் தொடர்ச்சியாக பின்னர் பல்வேறு இயக்கங்களின் தலைவர்களாக விளங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா, ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம், பி.எல்.எப்.ரி தலைவர் விசுவானந்ததேவன், ரெலா தலைவர் ஒபரோய் தேவன், ரெலி தலைவர் ஜெகன், தீப்பொறி இயக்க தலைவர் நோபேர்ட் போன்றோரும், பல்லாயிரக்கணக்கான போராளிகளும் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, இந்த அராஜக மோதல்களின் முடிவாக, இன்று புலிகளின் முற்றுமுழுதான அழிவும் நிகழ்ந்துள்ளது.

இவ்வளவும் நடந்த பின்பு, இன்று நாம் ஒரு திருப்பு மையத்தில் நிற்கின்றோம். இலங்கையில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மேல் காலத்துக்கு காலம் மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், ஒடுக்குமுறைகள் பற்றி உரிய விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என உலக அரங்கின் முன் நாம் இன்று உரத்துக் கேட்கின்றோம். அது நியாயமானதும், தேவையானதும் தான்.

ஆனால் அதேவேளையில், இந்தக் கோரிக்கையை பலமாக எழுப்பும் நாம் விடுதலையின் பெயரால் சக போராளிகள் மீதும், மாற்றுக் கருத்தாளர்கள் மீதும், சாதாரண பொதுமக்கள் மீதும், நடாத்திய தாக்குதல், படுகொலைகள் எவ்வளவு எவ்வளவு! அவைபற்றியெல்லாம் பற்றி யார் விசாரிப்பது? புற எதிரியைப் பற்றி அதிகம் பேசும் நாம், எமக்குள்ளேயே இருக்கும் எதிரியைப் பற்றி பாராமுகமாக இருப்பது எதைக் காட்டுகிறது? இந்த அக எதிரி தான் எமது மக்களின் இன்றைய மோசமான அழிவு நிலைக்குக் காரணம் என்பதை நாம் இன்று கண்கூடாகக் கண்ட பின்னரும், அவற்றை சீர் செய்வதற்கு என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்? விடுதலையின் பெயரால் சகல இயக்கங்களும் விட்ட தவறுகள் பற்றி, சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் நடைபெற்ற சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவா சங்க ஆண்டு விழாவில் பேசிய புளொட் இயக்கத்தின் தலைவரும், அதே கல்லூரியில் என்னுடன் ஒன்றாகக் கல்வி கற்றவருமான, நண்பர் தருமலிங்கம் சித்தார்த்தன் விசனத்துடன் குறிப்பிட்ட கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தம் என நினைக்கிறேன்.

இப்பொழுது கூட பாருங்கள். நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கியமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் சூழலில், தமிழ் மக்களின் தலைமை தாம் மட்டுமே எனக் கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள்? முன்னைய தேர்தல்களின் போது, புலிகளின் ஆணைக்கு அடிபணிந்து, சிங்கள தேசம் வேறு, தமிழ் தேசம் வேறு, எனவே அங்கு நடைபெறும் தேர்தல்கள் பற்றி எமக்கு அக்கறை இல்லை என்றார்கள். இப்பொழுது சொல்கிறாhகள், நாம் தேர்தலில் பங்குபற்றாமல் விடக்கூடாது. அதேவேளையில் தமிழ் மக்கள் சார்பாக வேட்பாளர் எவரையும் நிறுத்தவும் கூடாது என்று. அப்படியானால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், இவர்களது முன்னைய சட்டாம்பிள்ளைகளான புலிகளையும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களையும் கொன்று குவித்த, பகிரங்கமான பேரினவாதியும், போர் வெறியனுமான சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகிறது? இவர்களது இன மான நலன்கள் எங்கே போய்விட்டன? உண்மை என்னவென்றால், இன நலன்களுக்கு அப்பால், இவர்கள் அரசியல் ரீதியாகவும், வர்க்கரீதியாகவும் சிங்களப் பிற்போக்கு சக்திகளுடன் அல்லவா ஒன்றிணைந்து நிற்கின்றனர்? முற்போக்கு பிற்போக்கை விடுவோம். இவர்களது சுயலாபம் கருதிய பேச்சைக் கேட்டு, மானமுள்ள தமிழன் எவனாவது மனமுவந்து முன்வந்து பொன்சேகாவிற்கு வாக்குப் போடுவானா?

இறுதியாக, சுந்தரத்தின் குணவியல்புகள் குறித்து சில வார்த்தைகள் சொல்லி எனது உரையை முடிக்கலாம் என எண்ணுகிறேன். நான் சுந்தரத்துடன் பழகிய அனுபவங்களிலிருந்து, அவர் பல்துறை ஆற்றல்களும், ஆளுமையும் மிக்க ஒருவர் என்பது எனது அசைக்க முடியாத கருத்தாகும். இதை நான் வெறுமனே ஒரு புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. அவரும் நானும் வௌ;வேறு அரசியல அணிகளைச் சார்ந்து செயல்பட்டவர்கள். ஆனால் எங்கள் இருவரையும் ஒரு பொது லட்சியம் என்ற நூல், மாலையாகக் கோர்த்து வைத்திருந்தது.

சுந்தரம் ‘புதிய பாதை’ பத்திரிகை நடாத்திய விதத்ததை அருகில் இருந்து அவதானித்தவன் என்ற முறையில், அவரது அரசியல் உணர்வை மாத்திரமின்றி, அவரது அரசியல் அறிவையும், மக்கள் மத்தியில் அரசியல் பிரச்சார வேலைகள் செய்ய வேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையையும் அறிய முடிந்தது.அதேபோல, அவர் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு தலைமை ஏற்று வழி நடாத்திய விதத்திலிருந்து, அவரது துணிச்சல், தலைமைத்துவம், இராணுவ ரீதியான சிந்திப்பு என்பனவற்றை கண்கூடாகக் காண முடிந்தது.

அவரது வெகுஜன வேலைகளுக்கு உதாரணமாக, அவர் வுவனியா பகுதிகளில் மேற்கொண்ட வேலைகள் அமைந்திருந்தன. அவர் ஓமந்தைக்கு மேற்கே அமைந்திருக்கும் பாலமோட்டைக் கிராமத்தை தனது தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டதை, இன்றும் அக்கிராம மக்கள் பசுமையுடன் நினைவு கூர்வார்கள். 1970 – 71 காலகட்டத்தில் சுந்தரம் போன்றவர்கள் அங்கு செல்வதற்கு முன்னர், நானும் அந்தக் கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எமது கட்சி மற்றும் விவசாயிகள் இயக்க வேலைகளை மேற்கொண்டவன் என்ற முறையில், அங்குள்ள தொடர்புகள் மூலம் இதை நான் அறிவேன். சுந்தரம் ‘காந்தியம்’; அமைப்பின் ஊடாக, வவுனியா பகுதிகளில் மேற்கொண்ட வெகுஜன வேலைகளின் காரணமாகவே, புளொட் அமைப்புக்கு வவுனியாவில் ஓh அடித்தளம் இடப்பட்டது என்பதும், அது இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதும,; மறுக்க முடியாக உண்மைகளாகும்.

சுந்தரம் ஏககாலத்தில் ஒரு போராளியாகவும், வெகுஜன அமைப்பாளனாகவும், அரசியல் பிரச்சாரகனாகவும் செயல்பட்டுள்ளார் என்பதையே இவை எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய மும்முனை ஆற்றல், பிற்காலத்தில் தமிழ் மக்களின் ‘தேசியத் தலைவராக’ புலிகளால் உருவகப்படுத்தப்பட்ட பிரபாகரனிடம் கூட இருக்கவில்லை என்பது, சுந்தரத்தின் ஆற்றலையும், ஆளுமையையும் புரிந்து கொள்ளப் போதுமானது.

சுந்தரத்தின் எளிமையான வாழ்வும் மற்றவர்களுக்கு உதாரணம் மிக்கதாகும். அவரை பார்க்கும் எவரும் அவரை ஒரு அரசியல்வாதியாகவோ அல்லது மாமூலான ஒரு விடுதலை இயக்க தலைவராகவோ உருவாகப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். சாதாரண ஒரு கலர் சாரம். அதற்கொப்ப ஒரு சேர்ட். பார்த்தால் ஒரு கூலி வேலை செயபவன் போலத்தான் தோற்றமளிப்பார். ஒரு முறை எமது அச்சகத்தில் அச்சிட்ட ‘புதிய பாதை’ பிரதிகளை கட்டிக்கொண்டு புகையிரதத்தில் வவுனியாவுக்கு சென்றுள்ளாh. அப்பொழுது ராணுவ – பொலிஸ் கெடுபடிகள் அதிகம். புகையிரதத்தில் சோதனை செய்ய வந்த ராணுவ – பொலிஸ் குழுவினர் வண்டியின் கதவருகில் புகையிலைச் சிப்பங்களின் மேல் பத்திரிகைக் கட்டுடன் படுத்திருந்த சுந்தரத்தை, திரும்பிக் கூட பாராமலே சென்றுவிட்டனர். இதை நேரில் அவதானித்த தோழர் ஒருவர் பின்னர் என்னிடம் வந்து சொன்னார்.

பிரபாகரன் தனது பாதுகாப்பிற்காக மூவாயிரம் போராளிகளை வைத்திருந்ததாக அறிகிறோம். ஆனால் சுந்தரம் தனது பாதுகாப்பிற்கு ஒரு சுள்ளித்தடி கூட வைத்திருக்கவில்லை. அதனால்தான் புலிப்பாசிச சக்திகள் அவரை சுலபமாகக் கொன்றொழித்தனர் என்பதும் உண்மைதான். ஆனால் எவ்வளவோ படை பட்டாளங்களையும், நவீன ஆயுதங்களையும் வைத்திருந்த பிரபாகரன், மக்களை மட்டுமல்ல, இறுதியில் தன்னைக் கூட பாதுகாக்க முடியாமல் போய்விட்டதே. ஆனால் சுந்தரம் போன்றவர்கள் எப்பொழுதும் மக்களையே தமது பாதுகாவலர்களாகக் கருதினார்கள். புலிகள் துரோகத்தனமாக அவரைக் கொன்றிருக்கவில்லையானால், இன்றும் அவர் மக்களின் அபிமானம் பெற்ற தலைவராகத் திகழ்ந்திருப்பார்.

ஏனெனில் சுந்தரம் வெறும் தமிழ் இனவாதியோ அல்லது வெறுமனே தமிழ் தேசியவாதியோ அல்ல. அவர் தமிழ் மக்களின் தேசிய விடுதலை என்பது அவர்களுடைய ஜனநாயக வாழ்வுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்தது என்பதில் அசையாத நம்பிக்கையுடன் இருந்தவர். அவர் தனது அரசியல் போராட்ட வாழ்வை எல்லாத் தமிழ் இளைஞர்களையும் போலவே, ஒரு தேசியவாத இயக்கத்தில் தான் ஆரம்பித்தார் ஆயினும், உலக அரங்கில் அவ்வாறு தமது அரசியல் வாழ்வை ஆரம்பித்த பல புரட்சிகரத் தலைவர்களின் வாழ்வு போல, அவரது வாழ்வும் பிற்காலத்தில் பரிணாம வளர்ச்சிகளினூடாக, இறுதியில் ஒப்புயர்வற்ற மகத்தான மனிதன் ஒருவனின் வாழ்வாக மாறியிருக்கும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

சுந்தரம் போன்ற ஆற்றலும், ஆளுமையும், சுயநலமற்ற தன்மையும் கொண்ட, தலைமைத்துவ மனிதர்கள் எமது தமிழ் சமூகத்தில் வெகு அரிதாகவே உருவெடுத்துள்னர். அப்படியானவர்களை தமிழ் பாசிசம் தனது அதிகார வெறிக்கு தீனியாக்கிக் கொண்டது ஒரு வரலாற்றுச் சோகமாகும். அவ்வாறான ஒரு நிலைமை இனி வருங்காலத்தில் உருவாகாமல் இருப்பதற்கான சூழலை, நாட்டின் இன்றைய தலைமைத்துவம் உருவாக்கியுள்ளது. அதைப் பாதுகாத்து தமிழ் மக்களின் வாழ்வில் மீண்டும் ஜனநாயகம், பன்மைத்துவம், மனித உரிமைகள் என்பனவற்றைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது, ஒவ்வொரு தமிழ் மனிதனதும் வரலாற்றுக் கடமையாகும்.

இறுதியாக நண்பர் சுந்தரம் அவர்களது மகத்தான வாழ்வின் நினைவுகளும், புகழும் நிடூழி வாழ்க என்று கூறி, எனது உரையை முடிக்கிறேன்.

எனது உரையைப் பொறுமையுடனும், அக்கறையுடனும் செவிமடுத்த, அனைவருக்கும் எனது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ச.சுப்பிரமணியம்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "‘புதிய பாதை’ ஆசிரியர் சுந்தரம் நினைவாக.."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates