பதவிக்கு வந்தால் பாதுகாப்பு வலயங்களை நீக்குவேன்: யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், நிரந்தரமாக காணாமல் போயிருப்போர் தொடர்பில் நட்டஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதேநேரம் யுத்தத்தின் முன்னரும் பின்னரும் பலர் கைது செய்யப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர். இவர்கள் பெயர், விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்த அவர், சரணடைந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் எனக் கருதப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என குறிப்பிட்டார்.
யுத்தம் முடிவடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களை வைத்திருப்பதனால் எவ்வித பயன்களும் இல்லை. எனவே தாம் ஆட்சிக்கு வந்தால் அந்த பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படும். பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் பல இடங்களிலும் விவசாய நடவடிக்கைகளுக்கு உரிய வகை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் கருத்துரைத்த அவர், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் குடியமர்த்தப்படுகின்ற மக்களுக்காக வெளிநாட்டு உதவிகள் கிடைக்கின்ற போதும் அவர்களின் அடிப்படை வசதிகளைக்கூட அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை என குற்றம் சுமத்தினார்.
இதேவேளை.இந்த ஊடக மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், வன்னி யுத்தத்தின் போது, மக்களால் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டன. இவை உரியவர்களின் அடையாளங்களுடன் இருக்கின்ற போதும் அவற்றை ஏன் இன்னும் அரசாங்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை எனக்கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாண மக்கள் தெற்கில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோரின் உறவினர்களுடனான சந்திப்பின் போது நூற்றுக்கணக்கான உறவினர்கள், கதறி அழுத காட்சியை காணமுடிந்ததாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகப்பு | Send | Feedback |
0 Response to "பதவிக்கு வந்தால் பாதுகாப்பு வலயங்களை நீக்குவேன்: யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா"
แสดงความคิดเห็น