jkr

செய்தியறிக்கை


டோகோ அணி தலைவர் எமானுவல்
டோகோ அணி தலைவர் எமானுவல்

டோகோ அணி நாடு திரும்பும் - பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு

அங்கோலாவில் நடைபெறுகின்ற ஆப்பிரிக்க கோப்பை கால் பந்தாட்டப் போட்டிகளிலிருந்து மீள அழைத்துக் கொள்ளப்பட்ட தமது அணியினர் இன்று ஞாயிற்றுகிழமை நாடுதிரும்பவுள்ளதாக டோகோ பிரதமர் தெரிவித்துள்ளார்.

கபிந்தாவில் டோகோ அணியினரின் பஸ் மீது கடந்த வெள்ளிகிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

டோகோ அணியிலுள்ள சில விளையாட்டு வீரர்கள் தொடர்ந்தும் விளையாட வேண்டும் என தெரிவித்த போதிலும் அணியின் பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அங்கோலா பிரதமர் கில்பர்ட் ஹொங்போ தெரிவித்தார்.

தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து தமக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லையெனவும் அங்கோலா பிரதமர் ஆப்பிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தை விமர்சித்துள்ளார்


ஆப்பிரிக்க கோப்பை போட்டிகள் ஆரம்பம்

ஆப்பிரிக்க கோப்பை போட்டி ஆரம்பம்
ஆப்பிரிக்க கோப்பை போட்டி ஆரம்பம்

டோகோ அணி போட்டியில் பங்குபெறுமா இல்லையா என எழுந்த குழப்பங்களுக்கு மத்தியில், ஆப்பிரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்காக போட்டியிடும் நாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபெறுகின்றன.

ஆரம்பப் போட்டியில், போட்டிகளை நடத்தும் அங்கோலா நாட்டின் அணி , மாலி அணியை சந்திக்கவுள்ளது.

தலைநகர் லுவாண்டாவுக்கு வெளியயே உள்ள புதிய விளையாட்டரங்கில், ரசிகர்கள் ஏற்கனவே கூடியுள்ளனர்.

அங்கு விளையாட்டரங்கில் உற்சாகம் களைகட்டியுள்ளதாக அங்குள்ள பிபிசி நிருபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அங்கோலாவின் விளையாட்டு சரித்திரத்தில் மிகப்பெரிய பெருமைக்குரிய இந்த தினம், கபிந்தாவில் டோகோ அணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து சோகத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது.


தில்லி விளையாட்டு கிராமத்தில் தீ விபத்து

தில்லி விளையாட்டு பகுதி
தில்லி விளையாட்டு பகுதி

இந்திய தலைநகர் புது தில்லியில் இந்த வருடம் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டுக் கிராமத்தில் தீ பற்றிக்கொண்டதில், ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

நிர்மாணப் பணியாளர்களுக்கான வதிவிட விடுதியில் இந்த தீ ஏற்பட்டது.

நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற ரக்பி விளையாட்டரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டு இரு வாரங்களின் பின்னர் தற்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திட்டமிட்ட காலப்பகுதிக்குள் சில முக்கிய நிர்மாணங்களை முடிக்க முடியாமல் போய்விடும் என்று எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில், பணிகளை விரைவாக முடிக்கும் அழுத்தங்களுக்கு நிர்வாகிகள் உட்பட்டுள்ளனர்.


குடியேற்றவாசிகளுக்கு மதிப்பளிக்க போப் ஆண்டவர் கோரிக்கை

போப் பெனடிக்ட்
போப் பெனடிக்ட்

குடியேற்றவாசிகளுக்கும் கடவுள் சமமாகவே அன்பு செலுத்துகின்றார் எனவும் அவர்கள் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் போப் ஆண்டவர் 16 வது பெனடிக் வலியுறுத்தியுள்ளார்.

தெற்கு இத்தாலி பிராந்தியத்தில் உள்ள கலாப்ரியா என்ற இடத்தில் உள்ளூர்வாசிகளுக்கும் ஆபிரிக்க பண்ணைத் தொழிலாளர்களுக்குமிடையில் வன்முறை மோதல்கள் ஏற்பட்டுள்ளதையடுத்தே போப்பாண்டவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆபிரிக்கர்கள் இருவர் எயார் ரைபிள் து்ப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதையடுத்து ஏற்பட்ட கலகங்களில் 70 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியிலிருந்து சுமார் 300 பேர் வரையான ஆபிரிக்கர்கள் அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியரங்கம்
காத்தான்குடியில் மஹிந்த ராஜபக்ஷ்
காத்தான்குடியில் மஹிந்த ராஜபக்ஷ்

நாடாளுமன்றத்தில் மேல்சபை உருவாக்கப்படும் - இலங்கை ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அங்கு உரையாற்றிய பொதுச் கூட்டத்தில் இலங்கை அரசியலமைப்பின் கீழ் மேல்சபை(செனட்) ஒன்று உருவாக்கப்படும் என்றும், அதில் மாகாண சபையின் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களுக்கு நியாயமான கெளரவமான அரசியல் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எவ்வகையான அரசியல் தீர்வு என்று அவர் விளக்கமளிக்கவில்லை.

இதன் பின்னர் மட்டக்களப்பிற்கு சென்ற அவர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றினார். ஆனால் இனப் பிரச்சினை தொடர்பாக மட்டுமன்றி அரசியல் தொடர்பாகவோ எதுவும் குறிப்பிடாமல் பொதுவாகவே ஜனாதிபதி உரையாற்றினார். பின்னர் அவர் காத்தான்குடிப்பகுதிக்கும் சென்றார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மன்னார் மறைமாவட்டத்திற்கு போப் பிரதிநிதி விஜயம்

போப் பிரதிநிதி
போப் பிரதிநிதி

போப்பாண்டவரின் இலங்கையின் பிரதிநிதியாகப் புதிதாகப் பதவியேற்றுள்ள அதிவணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பீட்டரி அவர்கள் மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்டத்திற்கு முதற் தடவையாக விஜயம் செய்திருக்கின்றார்.

மன்னார் நகருக்குச் சென்ற அவர், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் மறைமாவட்டத்தின் முக்கிய குருமார்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பின்னர், அவர் மன்னார் மாவட்டத்தின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து, பொதுமக்களையும், குருமார்களையும் சந்தித்துள்ளார்.

மன்னாரிலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்த அவர், வவுனியா பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வருகி;ன்ற போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகள், முதியோர்கள், ஆகியோரைப் பார்வையிடவுள்ளார். அத்துடன் முக்கியமாக மனிக்பாமில் உள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களையும் அவர் பார்வையிடவுள்ளதாக மன்னார் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்கள் தெரிவித்துள்ளார்.


சென்னை புத்தகக்கண்காட்சி

சென்னை புத்தகக்கண்காட்சி
சென்னை புத்தகக்கண்காட்சி

வழக்கமாக பொங்கல் நேரத்தில் நடைபெறும் சென்னை புத்தகக்கண்காட்சி இம்முறை சற்று முன்னதாகவே நடத்தப்பட்டுவிட்டது. ஞாயிறன்று முடிவடையும் இந்த 33வது சென்னை புத்தகக் கண்காட்சியில் ஏறத்தாழ 600 விற்பனை மையங்களையும், திரளான மக்கள் கூட்டத்தையும் நம்மால் பார்க்கமுடிந்தது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் லஷ்மணன் கடந்த ஜனவரி இரண்டாம் நாள் தொடங்கிய கண்காட்சியை பார்க்கவந்தோரின் எண்ணிக்கை 10 லட்சம் வரை இருக்கும் என்கிறார்.

சுமார் 7 கோடி ரூபாய் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன.
ஆயினும் கூட வெளியிடப்படும் தமிழ் புத்தகங்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன, வகைமை வேண்டும் என்று கூறினார் காலச்சுவடு இலக்கிய இதழ் வெளியீட்டாளர் கண்ணன்.

தவிரவும் வாசகர்களல்லாது, மாநில அரசு பொது நூலகங்களுக்காக வாங்குவதை நம்பியே வெளியிடப்படும் புத்தகங்களே அதிகம் என்கிறார் உயிர்மை பதிப்பக உரிமையாளர் மனுஷ்யபுத்திரன்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates