jkr

செய்தியறிக்கை


மனைவி ஐரிஸுடன் பீட்டர் ராபின்சன்
மனைவி ஐரிஸுடன் பீட்டர் ராபின்சன்

மனைவியின் காதலன்: நெருக்கடியில் வட அயர்லாந்து முதல் அமைச்சர்

வட அயர்லாந்தின் முதல் அமைச்சர் பீட்டர் ராபின்சன் அவர்கள் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவராக தொடர்வதற்கு அந்தக் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராபின்சன் அவர்கள் தனது நடத்தை தொடர்பாகவும், பதின்ம வயது காதலனுக்கு தொழில் தொடங்க நிதி சேகரித்த அவரது மனைவி ஐரிஸின் நடத்தை தொடர்பாகவும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.

தனது கட்சியினரின் ஆதரவைப் பெற்றுவிட்டாலும், ராபின்சன் அவர்கள் இன்னமும் தனது அரசியல் எதிரிகளிடம் இருந்து பெரும் சவால்களை எதிர்கொள்கிறார்.

இந்த ஊழல், வட அயர்லாந்தின் அதிகாரப் பகிர்வு உடன்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.


டோகோ கால்பந்தாட்ட வீரர்கள் மீதான தாக்குதல்: சந்தேகநபர்கள் இருவர் கைது

அங்கோலாவில் பாதுகாப்புக்கு இடையே கால்பந்தாட்டப் பந்தயம் நடக்கிறது
கடந்த வெள்ளிக்கிழமையன்று டோகோ நாட்டு கால்பந்து அணி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக அங்கோலாவின் அரச கட்டுபாட்டு வானொலி தெரிவித்துள்ளது.

எண்ணெய் வளம் மிகுந்த கபிண்டாப் பகுதியில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கோரி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

இதனிடையே அங்கோலாவில் நடைபெற்றுவரும் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டிகளிலிருந்து விலகிக்கொள்வதாக டோகோ நாட்டு அணி விடுத்த வேண்டுகோளை ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் நிராகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக அனுஷ்டிக்கப்படும் மூன்று நாள் தேசிய துக்கத்தில் பங்கு பெறுவதற்காக, டோகோ நாட்டு அரசின் உத்தரவுக்கமைய அந்நாட்டு அணி நாடு திரும்பியுள்ளது.

தமது நாட்டின் அணியின் மீது மறைந்திருந்தவர்கள் நடத்திய தாக்குதல் ஆப்பிரிக்க கால்பந்து விளையாட்டுக்கே ஏற்பட்ட ஒரு வெட்கக்கேடான செயல் என்று டோகோவின் பிரதமர் வர்ணித்துள்ளார்.

தங்களது நாட்டு அணியின் பாதுகாப்பை அங்கோலா அரசு உறுதிசெய்யத் தவறிவிட்டது என்று கூறி அந்நாட்டை டோகோவின் பிரதமர் விமர்சித்துள்ளார்.

தாக்குதலை நியாயப்படுத்த டோகோ கிளர்ச்சிக் குழு தலைவர் முயற்சி

இதனிடையே நாடு கடந்த நிலையில் பிரான்ஸில் வாழ்ந்து வரும் அங்கோலாவின் ஒரு கிளர்ச்சிக் குழுவின் தலைவர், டோகோ நாட்டு அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அங்கோலாவில் போர் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

ஃபிளெக் எனப்படும் கபிண்டா பிரிவினைவாதக் குழுவினருக்காக பேசவல்லவர் என்று தன்னை கூறிக் கொள்ளும் ரோட்ரிக்ஸ் மின்காஸ், கபிண்டாப் பகுதியில் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்துவதை எதிர்த்து, ஏற்கனவே ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது எனக் கூறுகிறார்.

இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், இது வன்முறையை தூண்டும் ஒரு செயல் என்றும் தெரிவித்துள்ள பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம், எனினும் இந்தக் கருத்துக்கள் புறந்தள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தான் மக்கள் திருப்தியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதாகக் காட்டுகிறது கருத்துக் கணிப்பு

ரொட்டி விற்கும் ஆப்கானிய வியாபாரிகள்
ஆப்கானிஸ்தானில் ஊழலும், வன்செயல்களும் இன்னமும் பெரும் பிரச்சினைக்குரிய விடயங்களாகத் திகழுகின்ற போதிலும், அங்கு நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று, அந்த நாட்டு மக்கள் தமது வாழ்க்கை நல்ல நிலைமையில் இருப்பதாக உணர்வதாகவும், மற்றும் தமது எதிர்காலம் குறித்து நல்ல நம்பிக்கையுடன் இருப்பதாகவும் பரிந்துரைத்துள்ளது.

பி.பி.சி., அமெரிக்காவின் ஏ.பி.சி. செய்தி மற்றும் ஜேர்மனியின் ஏஆர்டி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கருத்துக்கணிப்பில், ஆப்கானின் அனைத்து மாகாணங்களில் இருந்தும், 1500 பேரிடம் நேரடியாக கருத்துகள் பெறப்பட்டன.

ஆப்கானிஸ்தான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்பதாக, கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 70 வீதமானவர்கள் கூறியிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டதை விட கணிசமான அளவு அதிகமாகும்.

அதிகாரிகளின் ஊழல் என்பது தமது பகுதிகளில் பெரும் பிரச்சினை என்று 90 வீதமானவர்கள் கூறியுள்ளனர்.


பன்னாட்டுப் படையினர் ஆறு பேர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானியப் படையினர்
ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டு வரும் சர்வதேச இராணுவப் படையைச் சேர்ந்த ஆறு பேர் அங்கு அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்று நேட்டோ படை தெரிவித்துள்ளது.

பலியானவர்களில் மூவர் அமெரிக்க இராணுவ வீரர்கள். தெற்கு ஆப்கானிஸ்தானில் ஆயுததாரிகளுடன் நடந்த சண்டைகளின்போது இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வடகிழக்கு காபூலில் இடம்பெற்ற ஓர் மோதலில் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டைகளை முன்னெடுக்க கூடுதல் துருப்புக்களை அனுப்ப நேட்டோ நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், பன்னாட்டு படையின் இராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

செய்தியரங்கம்
இலங்கை ஜனாதிபதி
இலங்கை ஜனாதிபதி

ஒற்றையாட்சி முறையே இலங்கைக்கு நல்லது: மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தேர்தல் அறிக்கையை திங்களன்று கொழும்பில் வெளியிட்டுள்ளார்.

"மஹிந்த சிந்தனை – நீட்டிக்கப்பட்ட வடிவம்" என்று பெயரிடப்பட்ட இந்த அறிக்கையை, கொழும்பில் உள்ள பண்டாரநாயக நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்வின்போது அவர் வெளியிட்டார்.

பிரிக்கப்படாத ஒரு ஒருங்கிணைந்த ஒற்றையாட்சி முறையே இலங்கையில் இருக்கவேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அமைச்சர்களும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டவர்களும் கலந்துகொண்ட இந்த வைபவம் அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா உள்ளிட்ட பிற வேட்பாளர்களுக்கு இந்த வசதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி கட்சிகளின் கூட்டமைப்பு வேட்பாளராகிய சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வவுனியா பிரதேசத்திற்கான தனது முதலாவது பரப்புரையை இன்று ஆரம்பித்திருக்கின்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தமது முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நீண்ட உரையின் மூலம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் விளக்கமளித்ததன் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர், இன்றைய அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமாகியுள்ளது எனவும், இதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலருடைய கருத்துக்களுக்கமையவே எடுக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு நீதிமன்றம் பிணை

ஜே.எஸ்.திஸ்ஸநாயகம்
இலங்கையில் இருபது வருட கடூழிய சிறைத் தண்டணை விதிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் பிணையில் செல்ல கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐம்பதாயிரம் ரூபாய் பணம் செலுத்தி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி கொழும்பு மேல் நீதிமன்றம் பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பத்திரிகையில் எழுதியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

திஸ்ஸநாயகத்தின் கடவுச்சீட்டை நீதிமன்றத்திற்கு கையளிக்க வேண்டுமென்றும் திஸ்ஸநாயகத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. .

பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தாலும் ஜே.எஸ் திஸ்ஸநாயகம் இன்னும் மறியலில்தான் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் செவ்வாயன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் பிணையில் செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தவிர 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக திஸ்ஸநாயகம் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


சீன ஜனத்தொகையில் ஆண்-பெண் சமநிலை பாதிப்பு: ஆண்களுக்கு மணம் முடிக்க பெண் கிடைக்காமல் போகும் ஆபத்து


2020ஆம் ஆண்டு வாக்கில் திருமண வயதாகும் 2.4 கோடிக்கும் மேற்பட்ட சீன ஆண்களுக்கு பெண் கிடைக்காமல் போகலாம் என்று சீன சமூகவியல் கழகம் கூறுகிறது.

கர்ப்பத்தில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என்று அறிந்து கொண்டு, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்துவிடும் பழக்கம் சீனாவிலும் இருப்பதுதான் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று அது கூறுகிறது.

குழந்தை பிறப்பில் அதிகரித்துவரும் பாலின சமச்சீரற்ற நிலை 130 கோடி மக்கள் தொகை கொண்ட தற்போதைய சீனாவில் மிகப்பெரிய பிரச்சினையாக அமைகிறது என்று இந்த அமைப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள புதிய புத்தகம் கூறுகிறது.

சீனாவில் தற்போது 100 பெண் குழந்தைகளுக்கு 119 ஆண் குழந்தைகள் என்ற அளவில் பெண்-ஆண் குழந்தை விகிதம் இருக்கிறது.


விளையாட்டரங்கம்

இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி உலக ஹாக்கி கோப்பை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வதை காலவரையின்றிப் புறக்கணிப்பதாக இந்திய தேசிய ஹாக்கி அணியின் மூத்த வீரர்கள் சிலர் அறிவித்துள்ளனர். தேசிய அணியின் உறுப்பினர்களுக்கான ஊதியம் தொடர்பில் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அவர்கள் பயிற்சிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சியை வீரர்கள் புறக்கணித்திருந்த நிலையில், இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை நிர்வகிக்கும் இடைக்கால அமைப்பான ஹாக்கி இண்டியா, வீரர்களுக்கான ஊதியம் தொடர்பில் ஒரு உடன்பாட்டை எட்டியிருந்தது. ஆனால் அந்த உடன்பாட்டை ஹாக்கி வீரர்கள் நிராகரித்துள்ள நிலையில், தற்போதைய பயிற்சி புறக்கணிப்பு நடந்துவருகிறது. இந்த சர்ச்சை தொடர்பில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பயிற்சியாளருமான பாஸ்கரன் தமிழோசையில் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் கேட்கலாம்.

மரின் சிலிச்
ஏ.டி.பி. எனப்படும் சர்வதேச டென்னிஸ் சங்கம் நடத்துகின்ற உலக தரவரிசைக்கான டென்னிஸ் போட்டிகளில் ஒரு ஆண்டில் நடக்கும் முதல் பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நேற்று ஞாயிறன்று சென்னையில் நடந்து முடிந்துள்ளன. நுங்கம்பாக்கத்தின் எஸ்.டி.ஏ.டி. அரங்கத்தில் நடந்த இறுதிப் போட்டியில் குரொயேஷியாவின் மரின் சிலிச் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். சென்னை ஓபன் குறித்து போட்டி நிர்வாகிகளின் தலைவரும், டென்னிஸ் நடுவரும் வர்ணனையாளருமான டாக்டர் பி.நரசிம்மன் தெரிவிக்கும் கருத்துகளையும் நேயர்கள் கேட்கலாம்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates