jkr

செய்தியறிக்கை


பேராசிரியர் மசூட் அலி முகமதி
பேராசிரியர் மசூட் அலி முகமதி

விரிவுரையாளர் கொலை தொடர்பாக அமெரிக்கா மீது இரான் குற்றச்சாட்டு

ஒரு இயற்பியில் விரிவுரையாளரை கொலை செய்ததாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவாளிகள் மீது இரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை முட்டாள் தனமானது என்று கூறி அமெரிக்க மறுத்துள்ளது.

மசூட் அலி முகமதி என்னும் அவர் தனது வீட்டை விட்டு கிளம்பிய போது குண்டு வெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டதாக இரானிய அரச ஊடகம் கூறியது.

அணு விஞ்ஞானியாக இவரை விபரித்துள்ள அரச தொலைக்காட்சி, புரட்சிக்கான விசுவாசமான ஊழியர் என்றும் வர்ணித்துள்ளது.

ஆனால், அவர் வேறு விஞ்ஞானப் பணிகளில்தான் ஈடுபட்டார் என்பதுடன், அவருக்கு இரானின் அணுத்திட்டத்தில் தொடர்பு கிடையாது என்பதுபோல் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.


நைஜீரிய அதிபர் உடல் நிலை குறித்து சர்ச்சை

சிகிச்சை பெற்று வரும் அதிபர்
சிகிச்சை பெற்று வரும் அதிபர்

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நைஜீரிய அதிபர் உமாரு யார் அடுவா அவர்களின் உடல் நிலை குறித்து ஆராய ஒரு குழுவை அனுப்புவது என்று நைஜீரிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

அவர் நலம்பெற வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டின் முக்கிய பிரச்சனைகள் என்று கருதப்படும் விடயங்கள் தொடர்பாக அவர்கள் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்துவார்கள்.

ஐனாதிபதி ஒருவித இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக மருத்துவமனையில் இருந்து பிபிசியிடம் பேசிய அதிபர் யார் அடுவா தான் குணமடைந்து வருவதாகவும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வீடு திரும்ப விரும்புவதாகவும் கூறினார்.

ஆனால் அவரது குரல் சுரத்தின்றி இருந்ததாகவும், அவர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது போல ஒலித்ததாகவும் அவதானிகள் கூறுகின்றனர்.

முன்னதாக அபுஜாவில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இந்த நடவடிக்கைகளால் தாம் திருப்தியடைவில்லை என்றும், அதிபர் யார் அடுவாவை தாம் தொலைக் காட்சி மூலம் பார்க்க வேண்டும் என்றும் கோரினர்.


பிரிட்டனில் இஸ்லாமிய அமைப்புக்குத் தடை

தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர்
தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பிரிட்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பான இஸ்லாம்-போர் - யூ கே என்னும் அமைப்பை பிரிட்டிஷ் அரசாங்க தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அல் முகஜிறூன் என்பது உட்பட அந்த அமைப்பின் ஏனைய அனைத்துப் பெயர்களுக்கும் இந்தத்தடை பொருந்தும்.

இந்தத் தடைக்கான எந்த காரணத்தையும் குறிப்பிடாத பிரிட்டனின் உட்துறைச் செயலர் அலன் ஜோண்சன், தடை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றான போதிலும், பயங்கரவாதத்தை சமாளிக்க அது அவசியமான ஒரு அதிகாரம் என்று அவர் விபரித்துள்ளார்.

இந்த அமைப்பின் தலைவரான அஞ்சும் சௌத்ரி தமக்கு வன்செயல்களுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.

தமது ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பெயரின் கீழ் இயங்கமாட்டார்கள் என்றும், ஆனால், இஸ்லாத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.


நிதி அளவை அதிகரிக்க சீன வங்கிகளுக்கு உத்திரவு

சீனப் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிவேக வளர்சி பெற்றுவருகிறது
சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலை

பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாகி விலைகள் அதிகரிக்கலாம் என்பது குறித்த கவலைகளுக்கு மத்தியில், தமது நிதி இருப்பின் அளவை அதிகரிக்குமாறு வங்கிகளுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.

சீன பொருளாதாரம், உலக பொருளாதார பின்னடைவின் ஆழம் காரணமாக தாமதமடைந்து, பின்னர் பலமாக வளருகின்றது.

ஆனால், பொருளாதார மீட்சிக்கு உதவிய கடன் வழங்கலில் அதீத அதிகரிப்பு, பணவீக்கம் குறித்த பயத்தையும், சொத்துச் சந்தையில் நீடித்து நிற்க முடியாத ஒரு வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

செய்தியரங்கம்
தாக்குதல் இடம்பெற்ற இடம்
தாக்குதல் இடம்பெற்ற இடம்

இலங்கை தேர்தல் வன்முறையில் பெண் சாவு

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணி, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 26 ஆம் தேதி நடக்கவுள்ள இத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற முதல் உயிரிழப்பு இதுதான்.

இலங்கையின் தென் பகுதியில் உள்ள ஹூங்கம்ம பகுதிதியில் நடைபெற்ற ஒரு தேர்தல் கூட்டத்துக்கு சென்ற 60 வயதுப் பெண் இவ்வாறு பலியாகியுள்ளார்.

தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் அமைப்பு, மோட்டர் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள், பேருந்தின் ஜன்னல் வழியாக சுட்டதில் இந்தப் பெண்மணி சம்பவ இடத்தில் பலியானதாகவும், மற்ற நால்வர் படுகாயமடைந்ததாகவும் பிபியிடம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் மூன்று வாரங்களுக்கு முன்பு துவங்கியபிறகு நூற்றுக்கும் மேற்பட்ட வன்சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும், இதுதான் உயிர் இழப்பை ஏற்படுத்திய முதல் சம்பவம்.


இடம் பெயர்ந்த மக்களின் பொருட்கள் களவு போவதாக குற்றச்சாட்டு

மீள் குடியேற்றம் நடைபெற்ற பகுதிகளில் பொருட்கள் களவாடப்பட்டதாக குற்றச்சாட்டு
மீள் குடியேற்றம் நடைபெற்ற பகுதிகளில் பொருட்கள் களவாடப்பட்டதாக குற்றச்சாட்டு

இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் போர் இடம் பெற்ற காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர ஏற்பட்ட நிலையில், அப்போது அவர்கள் விட்டுச் சென்ற வாகனங்கள் மற்றும் பல பொருட்களை இலங்கையின் அரச படையினர் களவாடியுள்ளதாக உள்ளூர் மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்திலும் தான் எழுப்பியுள்ளதாகக் கூறும் சிவசக்தி ஆனந்தன் அவர்கள், ஆனால் அரச தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

ஆனால் இலங்கையின் அரச படைகள் அப்படியான எந்தச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், போர் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் கணக்கில் வைக்கப்பட்டு பட்டியிலிடப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுகிறார்.

இப்படியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், இராணுவத்துக்கு தேவையான அனைத்து பொருட்கள் தங்களிடம் உள்ளது என்றும் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது குறித்த மேலதிகச் செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


இந்திய ஹாக்கி வீரர்கள் ஊதியம் கேட்டு தொடர்ந்து போராட்டம்!

இந்திய ஹாக்கி அணியினர்
இந்திய ஹாக்கி அணியினர்

நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி, பயிற்சியில் ஈடுபடாமல் போராட்டத்தில் இறங்கியுள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கும் ஹாக்கி சம்மேளனத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, 48 மணி நேரத்துக்குள் அந்த வீரர்கள் பயிற்சிக்குத் திரும்ப வேண்டும் என ஹாக்கி அமைப்பு காலக்கெடு விதித்துள்ளது. ஆனால், ஹாக்கி வீரர்கள் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வர முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள், அடுத்த மாத இறுதியில் டெல்லியில் துவங்க உள்ள நிலையில், வீரர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே இப்படிப்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும் ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கும் இடையே இன்று கோவாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

வீரர்கள் கேட்கும் தொகையை தங்களால் கொடுக்க முடியாது என்று ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் பேச்சுவார்த்தை பாதியில் முறிந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஏ.கே. மட்டு, ஒவ்வொரு வீரருக்கும் தலா நாலரை லட்சம் ரூபாய் கேட்பதாகவும் அந்த அளவுக்கு ஹாக்கி அமைப்பிடம் பணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்களுக்கு இப்போது பணம்தான் முக்கியமாக இருக்கிறதே தவிர, நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற பெருமிதம் அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

மூத்த வீரர்கள் விளையாட முன்வராவிட்டால்,
நாடு முழுவதும் இருந்து வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மின்னல் வேகப் பயிற்சி கொடுத்து, உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் என்றும் ஏ.கே. மட்டு தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஹாக்கி அமைப்பு தங்களுக்கு உரிய தொகையைக் கொடுக்க முன்வராவிட்டாலும், நாட்டுக்காக தங்கள் சொந்த செலவில் விளையாடத் தயாராக இருப்பதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் அறிவித்துள்ளனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates