ஜெனரலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வந்த முசம்மில் எம்.பி. இடைநடுவில் வெளியேற்றம்
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதாக கூறி கொழும்பு றோயல் கல்லூரி மாவத்தையில் அமைந்துள்ள ஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசம்மில் அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிட நேரத்துக்குள்ளேயே அங்கிருந்து வெளியேறினார்.
இதன்போது தன்னை பொன்சேகா அணி விலை கொடுத்து வாங்க முயற்சிப்பதாகவும் அதற்கு தன்னால் இணங்க முடியாது என்றும் உரத்து கத்தியவாறே அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினார். இந்த சம்பவம் மேற்படி அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கும் அங்கு கூடியிருந்தவர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எனினும், இந்த சம்பவத்தை மறுத்த முன்னாள் பிரதியமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான மயோன் முஸ்தபா, தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசம்மிலிடம் பணம் வழங்கப்படவோ அல்லது அது குறித்த பேச்சு எழுப்பப்படவோ இல்லை. மொத்தத்தில் அவர் ஜெனரல் பொன்சேகாவை சந்திக்கவும் இல்லை என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மயோன் முஸ்தபா மேலும் கூறுகையில், மொஹமட் முசம்மில் எம்.பி. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்திருப்பதாகவும் அதனை செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்க இருப்பதாகவும் கூறி அவர் எனது வாகனத்தில் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவர் என்னுடன் வாகனத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. இதனையடுத்து அவர் நிலைத்தடுமாறினார். அத்துடன், அவரது கை, கால்கள் நடுங்கின. இதனை அவதானித்த நான் என்ன நடைபெற்றது என்று வினவினேன். அதற்கு அவர், நான் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்து இங்கு வந்த சந்தர்ப்பத்தில் எனது பெற்றோரை அச்சுறுத்தும் வகையில் இனந்தெரியாத நபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனக்கு உடல் நடுக்கம் இருக்கின்றது என்று பதறினார்.
இவ்விடயத்தை உடனே ஜெனரல் பொன்சேகா அலுவலகத்தில் இருந்த ரவி கருணாநாயக்க எம்.பி.யிடம் தெரிவித்தேன். அதேபோல், மொஹமட் முசம்மில் எம்.பி.யும் தனது பதற்ற நிலையைக் காட்டிக்கொண்டு என்னிடம் கூறியதையே அவரிடமும் கூறினார். இதனையடுத்து, ஆறுதல் கூறிய ரவி கருணாநாயக்க எம்.பி., மொஹமட் முசம்மில் எம்.பி.யைப் பார்த்து பதற்றப்பட வேண்டாம் என்றும் குறித்த சம்பவம் தொடர்பில் சடுதியான நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கிறேன் என்றும் கூறினார்.
இதனையும் பொறுத்துக் கொள்ளாத முசம்மில் எம்.பி. தொடர்ந்தும் பதற்றத்துடனேயே இருந்தார். மீண்டும் மீண்டும் கூறியதையே கூறிக் கொண்டு இருந்தார். அத்துடன், தனது பாதுகாவலரையும் அலுவலகத்திற்குள் வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனாலும் ஆயுத சகிதம் இருந்த அவரது பாதுகாவலர்களுக்கு அலுவலகத்தின் மேல் மாடிக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதே சந்தர்ப்பத்தில் அவர் பதற்றத்துடன் கீழே இறங்கி ஓடினார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் அங்கு என்ன கூறிவிட்டு ஓடிச் சென்றார் என்பது குறித்து எனக்கு தெரியாது என்றார்.
இதேவேளை, நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் மயோன் முஸ்தபாவுடன் முசம்மில் எம்.பி.யும் கலந்து கொள்வதாகவே கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
0 Response to "ஜெனரலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வந்த முசம்மில் எம்.பி. இடைநடுவில் வெளியேற்றம்"
แสดงความคิดเห็น