jkr

செய்தியறிக்கை


பிணவாடை தாங்காமல் மூக்கை மூடும் மக்கள்
பிணவாடை தாங்காமல் மூக்கை மூடும் மக்கள்

ஹெய்தி பூகம்பத்தில் உயிரிழந்தவர்களில் 76 பேரின் சடலங்கள் அடக்கம்

ஹெய்தியில் ஒரு வாரத்துக்கும் முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் 76 ஆயிரம் பேரின் உடல்கள் இதுவரை புதைக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு கூறுகிறது.

பல இடங்களில் நிறைய பேருடைய சடலங்கள் குழிகளில் போட்டுப் புதைக்கப்பட்டுள்ளன.

பூகம்பத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை முன்பு தெரிவிக்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது.

போர்த்தோ பிரின்ஸ் நகருக்கு வடக்கே உள்ள மலையோரப் பகுதியில், மண் தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்தி பணியாளர்கள் ஆழமான புதைகுழிகளை தோண்டியுள்ளனர்.

இதில் இறந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில், இறுதிச் சடங்குகள் ஏதும் நடத்தாமலேயே சடலங்கள் அடுக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர நகரின் வீதிகளிலும் பல சடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கின்றன. உடைந்து நொறுங்கியுள்ள கட்டிட இடிபாடுகளுக்கு உள்ளிருந்து பிணவாடை வீசுகிறது.

தப்பித்தவர்களின் அவல நிலை

ஹெய்தி நிலநடுக்கத்தில் தப்பியவர்களில் பலர் அதன் மோசமான பின்விளைவுகளுக்கு மத்தியில் வாழ்வதற்கு போராடிவருகிறார்கள்.

இவர்களில் பலருடைய காயங்கள் ஒரு வார காலத்திற்கும் மேலாக சிகிச்சையளிக்கப்படாமல் இருப்பது குறித்து மருத்துவர்கள் தங்களின் கவலையை வெளியிட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கான உணவு விநியோகம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஐநா மன்றத்தின் உலக உணவு திட்ட அதிகாரி வலியுறுத்தினார்.

ஆனால் தலைநகர் போர்த்தோ பிரின்ஸிலும் அதனை சுற்றிய பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் வாழும் பலருக்கு எந்தவிதமான சர்வதேச உதவியும் இதுவரை கிடைக்கவில்லை என்று போர்த்தோ பிரான்ஸில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


கணிப்புகளை விஞ்சி வளர்ந்துள்ளது சீனப் பொருளாதாரம்

சீனப் பொருளாதாரம் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் கடந்த ஆண்டு 8.7 சதம் உயர்ந்துள்ளது. உலக பொருளாதார தேக்க நிலையைத் தாண்டி இந்த வளர்சி வந்துள்ளது.

சீனப் பொருளாதாரம் ஜப்பானியப் பொருளாதாரத்தை பின்தள்ளிவிட்டு, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இப்போதே எட்டியிருக்கும் என்றும் அப்படி அது ஒரு வேளை நடைபெற்றிருக்காவிட்டால் அது விரைவில் நடைபெறும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சீனாவும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், பிற நாடுகளைப் போல அது மோசமாக பாதிக்கப்படவில்லை.

அரசாங்கம் அளித்த பொருளாதார ஊக்கத் திட்டம், அந்த நாட்டின் பொருளாதார மீட்சிக்கு பெரிதும் உதவியது. ஆனால் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்தால் அதனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை அந்த நாடு சந்திக்கும் அபாயம் அங்குள்ளது.

ஜப்பானின் பொருளாதார வளர்சி வீதம் குறித்த புள்ளிவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. இருந்தாலும், சீனாவுக்கு நேர் மாறாக ஜப்பானிய பொருளாதாரம் 6 சதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.


தீவிரவாதிகளுக்கு எதிரான பெரிய நடவடிக்கைகள் எதுவும் இந்த ஆண்டு இல்லை: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கை எதனையும் பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டு முன்னெடுக்காது என்று அந்நாட்டு ராணுவம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

காரணம் பாகிஸ்தான் ராணுவம் ஏற்கெனவே தனது அதிகபட்ச சக்தியை பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு மேலதிகமாக அதனை தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

பாகிஸ்தானில் இருந்துகொண்டு அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மேலதிகமாக தாக்குதல் நடத்த வேண்டுமென தற்போது பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்காவின்பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ் அவர்கள் கோரிவருகிறார்.

அவரது கோரிக்கையை மறுக்கும் விதமான பாகிஸ்தான் ராணுவ பேச்சாளரின் இன்றைய கருத்துக்கள், அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் உறவுகள் மேலும் வலுவிழக்கச் செய்யக்கூடும் என்று இஸ்லாமாபாத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபனுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளின் விரிவாக்கம் சிக்கல்களை சந்திக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.


அமெரிக்க முதலீட்டு வங்கிக்கு 20 பில்லியன் இலாபம்

கடந்த ஆண்டில் வரி கட்டுவதற்கு முந்தைய தனது இலாபம் 20 பில்லியன் டாலர்களாக உள்ளது என அமெரிக்க முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் கூறியுள்ளது.

2009 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மட்டும் 7 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான லாபம் கிடைத்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டு இதே கால கட்டத்தில் இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்திருந்தது.

தனது ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் கொடுப்பதற்காக 16 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தை விட இது 50 வீதம் கூடுதலாகும். ஆனால் இது தனது வருவாய் அடிப்படையில் அதிகரித்த எண்ணிக்கை என்று கோல்ட்மேன் சாக்ஸ் கூறியுள்ளது.

செய்தியரங்கம்
ஐ.பி.எல். சின்னம்
ஐ.பி.எல். சின்னம்

ஐ.பி.எல்.: பாகிஸ்தான் வீரர்கள் ஏலம் எடுக்கப்படாதது தொடர்பான சர்ச்சை வலுக்கிறது

ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இந்த ஆண்டுக்கான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படாதது இந்தியா – பாகிஸ்தான் இடையில் கருத்து மோதல்களை மேலும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படாததற்கு, இந்திய அரசு மீது பாகிஸ்தான் பழிபோடுவது துரதிர்ஷ்டமானது, ஐ.பி.எல்.லுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்தும், அவர்களுக்கு விசா வழங்குவது தொடர்பாகவும் வெளியான செய்திகள் தவறானவை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

ஆனால் இவ்விவகாரம் பாகிஸ்தானில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. வீரர்களை மட்டுமன்றி நாட்டையே அவமானப்படுத்திவிட்டதாகவும், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட காரியம் என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படாததைக் கண்டித்து, அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழும் தங்கள் இந்தியப் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

மேலும், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற் உள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியை அனுப்பக் கூடாது என்று அந்நாட்டில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் நியமனம்

சிவசங்கர் மேனன்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் ஓரிரு தினங்களில் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.

வெளியுறவுச் செயலர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.

இதுவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராப் பணியாற்றி வந்த எம்.கே. நாராயணன், மேற்கு வங்க மாநில ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்கென பாதுகாப்பு ஆலோசகர் பதவி கடந்த 1998-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஜே.என். தீட்ஷித் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அணுசக்தி ஆளுமை ஆணையத்தின் செயல்பாட்டுக் குழுவி்ன் தலைவராக செயல்படுவதும் பாதுகாப்பு ஆலோசகரின் முக்கியப் பணிகளில் ஒன்று.


காஷ்மீரில் பிரி-பெய்ட் செல்லிட தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை நீக்கம்

இந்திய ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் பிரி-பெய்ட் எனப்படும் பயன்பாட்டுக்கு முன்பு பணம் கட்டும் வகையிலான செல்லிட தொலைபேசி பயன்பாட்டுக்கு இருந்த தடையை இந்திய அரசு நீக்கியிருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தகைய செல்லிட தொலைபேசிச் சேவை கடந்த நவம்பர் மாதம் முதல் அங்கே தடைசெய்யப்பட்டிருந்தது.

இத்தகைய செல்லிட தொலைபேசிச் சேவைகளை கோரும் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை, தொலைபேசி நிறுவனங்கள் முறையாக சரிபார்ப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த தடை நீக்கத்தை இங்குள்ளவர்கள் வரவேற்பதாக காஷ்மீரில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அதேசமயம் கடந்த இரண்டு மாத காலமாக இது தொடர்பில் நிலவிய குழப்பமும், அது உருவாக்கிய அசவுகரியங்களும் இங்குள்ளவர்களை பெரிதும் கோபப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.


ஜனாதிபதித் தேர்தல்: வட மாகாண மக்களின் மனநிலை

போரினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றம் ஆகிவருகின்ற வட மாகாண மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டுவருகின்றனர்.

விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வன்னி இளைஞர்கள் விவகாரம் இம்மக்களைப் பொறுத்தவரை இத்தேர்தலில் ஒரு முக்கிய விடயமாக எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் புனர்வாழ்வு பெறுவதில் பல பணிகள் நிறைவேற்றப்படாத நிலையில் மிகவும் அவசரப்பட்டு இந்தத் தேர்தல் நடத்தப்படுவதாக வன்னி மக்கள் பலர் கருதுகின்றனர்.

இது குறித்து வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் வழங்கும் சிறப்பு பெட்டகத்தை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


சவுதியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் ஈடுபட்ட இளவரசர் கைது

இளவரசர் பந்தர் பின் சுல்தான்
சவுதியரேபியாவை ஆளும் ராஜ குடும்பத்தின் மிக முக்கிய இளவரசர் ஒருவர், அங்கு மாதக் கணக்கில் வெளியில் பொதுவிடங்களில் தோன்றாமல் இருந்துவருவது, சவுதியரேபியாலோ அல்லது வேறு ஒரு அரபு நாட்டிலோ நடந்ததாகக் தெரிவிக்கப்படும் அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் அவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்கிற ஓர் ஊகம் பரவச் செய்துள்ளது.

இளவரசர் பந்தர் பின் சுல்தான் சவுதியரேபியாவுடைய தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் ஆவார். பல ஆண்டுகளாக சவுதி ராஜ்ஜியத்துடைய வெளியுறவுக் கொள்கையின் வடிவமைப்பாளராக இருந்தவந்தவர் இவர் என்று நம்பப்படுகிறது.

ஆனால் முறியடிக்கப்பட்ட ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அடுத்து இவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்களிலும், இணையதள கருத்து பரிமாற்ற மன்றங்களிலும் தற்போது செய்திகள் அடிபடுகின்றன.

இவரது தந்தையான பட்டத்து இளவரசர் சுல்தான் பலகாலம் வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்துவிட்டு நாடுதிரும்பியபோது அவருக்கு ராஜ குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு அளித்த வரவேற்பில்கூட பந்தர் பின் சுல்தான் இருந்திருக்கவில்லை என்பது பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது.

மன்னர் அப்துல்லாவுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டமைக்காக வேறு மூன்று இராணுவத் தளபதிகளுடன், இளவரசர் பந்தர் பின் சுல்தானும் சிறையில் இருந்துவருகிறார் என சிலர் கூறுகின்றனர்.

சவுதியரேபியாவின் பிராந்திய வைரியாக விளங்கும் இரானின் முக்கிய கூட்டாளியான சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யும் சதி வேலைகளில் ஈடுபட்டமைக்காக இவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates