வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சேதமான சகல இந்து ஆலயங்களும் புனரமைப்பு
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் சேதமான சகல இந்து ஆலயங்களையும் புனரமைப்புச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு மாகாணத்தில 100 ஆலயங்களைப் புனரமைக்கவும், வட மாகாணத்தில் உள்ள கோயில்களைத் தேர்ந்தெடுத்து ஆலயத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா வீதமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சுமார் 100 ஆலயங்களுக்கு 3 கோடியே 93 இலட்ச ரூபாய் நிதியுதவியாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிகவும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த சிறிய ஆலயங்களின் நாளாந்த பூஜை நடைமுறைகளை மேம்படுத்துவதற்காகவும், பூஜை உபகரணக் கொள்வனவுக்காகவும் கிழக்கு மாகாணத்தின் சுமார் 200 ஆலயங்களுக்கு தலா ரூபா.25,000 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் சேதமடைந்திருந்த இந்துக் கோவில்களின் பூஜை வழிபாடுகள் வழமைபோன்று இடம்பெற்று வருகின்றன.
இதேபோன்று வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தின் ஊடாக இந்து சமயத் திணைக்களத்தின் கீழ் சிறப்பான செயற்றிட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பளை, கோப்பாய், பருத்தித்துறை, உடுவில், வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, காரைநகர், கரவெட்டி, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், வவுனியா மாவட்டத்திலுள்ள நெடுங்கேணி, வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு, செட்டிக்குளம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார், மாந்தை, நானாட்டான், முசலி-மேற்கு, மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தலா இரண்டு ஆலயங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொன்றிற்கும் ரூபா.2,00,000 திருத்தவேலைகளுக்காக நிதியுதவி வழங்கப்பட்டன.
இதைவிட, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள இரண்டு அறநெறிப் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு தலா ரூபா.75,000, தளபாடங்கள், உபகரணங்கள் வாங்குவதற்கென வழங்கப்பட்டன.
மொத்தமாக ரூபா.18 மில்லியன் செலவிடப்பட்டிருக்கின்றது. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் ஐந்து இந்து ஆலயங்கள் அமைப்பதற்காக 2.3 மில்லியன் செலவிடப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக, செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் நான்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டு நான்குகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
யுத்த அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஏ-9 வீதியில் அமைந்திருக்கின்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமுறிகண்டிப் பிள்ளையர் ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய 01 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆலயம் இப்பொழுது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது.
0 Response to "வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சேதமான சகல இந்து ஆலயங்களும் புனரமைப்பு"
แสดงความคิดเห็น