செய்தியறிக்கை
பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் |
கார்டன் பிரவுண் குறித்து கட்சிமட்ட வாக்கெடுப்புக்கு கோரிக்கை
பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் அவர்கள் தொடர்ந்தும் தொழிற்கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்பது குறித்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒரு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கோரியுள்ளனர்.
இராணுவத் துறையின் முன்னாள் அமைச்சரான ஜெஃப் ஹூன் மற்றும் சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சரான பெட்ரீஷியா ஹீவிட் ஆகியோர், கார்டன் பிரவுண் அவர்களின் தலைமை குறித்து கட்சியில் தீவிர பிளவுகள் இருப்பதாகவும், அப்பிரச்சினைக்கு இறுதியான ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
ஜூன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தொழிற்கட்சியினர் மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் பின் தங்கியுள்ளனர்.
எனினும் கட்சியுடன் பாரம்பரியமாக நெருங்கிய தொடர்புகளை உடைய தொழிற்சங்கங்களும், பிரதமருக்கு ஆதரவானர்களும் இந்தப் பிரேரணையை கண்டித்துள்ளனர். இது ஒரு திசை திருப்பும் நடவடிக்கை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
காசா எல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எகிப்திய காவலர் மோதல்
காசாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான எல்லைப் பகுதிக்கு கீழே சுரங்கப் பாதை தோண்டி அதன் வழியாக காசாவுக்கு பொருட்களை கடத்துவதை தடுக்கும் வகையில் ஒரு சுரங்க கட்டமைப்பை எகிப்து அமைத்து வருவதை எதிர்த்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
காசா நிர்வாகத்தை நடத்தும் ஹமாசால் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பாலத்தீன இளைஞர்கள் எகிப்திய எல்லைக் காவலர்கள் மீது கற்களை வீசித் தாக்கினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ஹமாஸ் பாதுகாப்பு படையினர் முற்பட்டனர். இரு தரப்பிலும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்
அமெரிக்கத் தாக்குதலில் 11 பேர் பலி
அமெரிக்க தாக்குதல் விமானம் |
வடக்கு வசரிஸ்தானில் உள்ள முக்கிய நகரான மிரான்ஷாவுக்கு மேற்கே முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இடம் தாலிபான்களின் பயிற்சி முகாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதல் ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை மக்கள் மீட்க முற்பட்டபோது இரண்டாவது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அணுக் குண்டுகளுக்கு தப்பியவர் காலமானார்
சுடோமா யமாகுசி |
சுடோமா யமாகுசி என்ற அந்த நபருக்கு வயது 93. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியன்று இவர் அலுவல் காரணமாக ஹிரோஷிமாவுக்கு சென்றிருந்தார்.
அன்று தான் அங்கே முதல் அணு குண்டு வீசப்பட்டது. இதில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வீச்சால் பெருமளவு தீக்காயங்களுக்கு இலக்கான யாமாகுச்சி தனது வீடு இருக்கும் நாகசாகிக்கு அடுத்த நாள் திரும்பினார்.
ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நாகசாகியில் அணு குண்டு வீசப்பட்டபோது அவர் அங்கிருந்தார். இந்த குண்டு வீச்சில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
பிரச்சாரத்தில் சரத் ஃபொன்சேகா |
சரத் ஃபொன்சேகாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு
இலங்கையில் இந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் ஃபொன்சேகாவை ஆதரிப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்த்து பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் ஃபொன்சேகா போட்டியிடுகிறார்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் தமிழ் சிங்கள சமூகங்களுக்கு இடையே ஒரு இணக்கப்பாட்டை அவரது அரசால் ஏற்படுத்த முடியாத நிலை ஆகியவை காரணமாகவே தாங்கள் அவரை ஆதரிக்க இயலாத நிலை ஏற்பட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களை இன்றைய தமிழோசையில் கேட்கலாம்.
யாழ் உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்கள் குடியேற்றப்படுவார்கள் என்று பசில் ராஜபக்ஷ அறிவிப்பு
பசில் ராஜபக்ஷ |
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ்ப்பானத்தில் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று முதல் யாழ்ப்பாணத்தை இலங்கையின் தென்பகுதியுடன் இணைக்கும் ஏ-9பாதை இனிமேல் 24 மணிநேரமும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்திருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது நன்னடத்தை முகாமில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்களில் 1000 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
காணாமல் போனவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் பெற்றோர் சிலர் |
வவுனியா நகர மணிக்கூட்டுச் சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தாய்மார்கள் பலரும் தமது பிள்ளைகளின் உருவப்படங்களைக் கைகளில் ஏந்தியவாறு வாய்விட்டு அழுதவண்ணம் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
காணாமற்போனோரைத் தேடியறியும் குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தார்கள். நாடளாவிய ரீதியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் வரையில் காணாமல் போயிருப்பது குறித்து தமக்கு முறையிடப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் இணை இயக்குனராகிய சுந்தரம் மகேந்திரன் கூறுகின்றார்.
காணாமல் போனவர்களை சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் அல்லது தேடித்தர வேண்டும் எனக் கோரி பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்திவரும் தாங்கள் அடுத்த நடவடிக்கையாக காணாமல் போயுள்ள அனைவரினதும் புகைப்படங்களைத் திரட்டி, ஒரு கண்காட்சியை நடத்தி அதன் ஊடாக வலுவான ஓர் அழுத்தத்தைப் பிரயோகிக்கப் போவதாகவும் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்தார்.
இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
களுவாஞ்சிக்குடியில் ஏ-4 பாதைத் தடை திறக்கப்பட்டது
தடை திறக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம் |
இந்த 20 ஆண்டுகாலப்பகுதியில் பல முறை போர் நிறுத்த உடன்படிக்கைகள் ஏற்பட்டிருந்த போதிலும், இந்தக் குறிப்பிட்ட பகுதியில், பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. கிழக்கு மாகாணம் முழுவதும் இலங்கை அரசின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தச் சாலையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்தப் பின்னணியில், இலங்கையின் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் இன்று புதன்கிழமை இந்த சாலையை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார். அதன் பின்பு கருத்து தெரிவிக்கையில், இந்த பிரச்சினை குறித்து ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு தான் கொண்டு சென்றதாகக் கூறினார்.
சாலையின் இந்தக் குறிப்பிட்ட பகுதியில் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படாமையால், கடந்த காலங்களில் கல்முனைக்கும் மட்டக்களப்பிற்குமிடையில் பயணிக்கும் பொது மக்களும் வாகன சாரதிகளும் குறுக்குப் பாதைகள் ஊடாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாகவும், இதனால் பயண தூரம் அதிகமானதோடு, விபத்துக்களின் எண்ணிக்கையையும் அதிகரித்ததாகவும், இன்று முதல் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் நம்பிக்கை தெரிவித்தார்.
கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி வழக்கு
இந்திய உச்ச நீதிமன்றம் |
ஹிந்து மதம், புத்த மதம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், அந்தச் சலுகை மற்ற மதங்களுக்கு மாறியவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அகில இந்திய கிறிஸ்தவ சம்மேளனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அவ்வாறு மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தேசிய மதம் மற்றும் மொழி சிறுபான்மையினர் கமிஷன் தலைவரான முன்னாள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அளித்த பரி்ந்துரையை அமல்படுத்த அரசு தயாராக இல்லை என்று அந்த மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது.
அந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமயிலான குழு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น